
ஆணாதிக்கம் செலுத்த நினைக்கும் ஆதி குணசேகரனை, இரண்டு தம்பிகள் கண்மூடித்தனமாக நம்ப, கடைக்குட்டி தம்பியோ நேர்மைக்கும், பெண் சுதந்திரத்திற்கும் உடன்பட்டு, பாதிக்கப்படும் குடும்பப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார். ஆணவ அறிவுக்கரசி, தன் தங்கை அன்புக்கரசியைத் தர்ஷனுக்கு மணமுடிக்க, குணசேகரனின் வீட்டிலேயே தங்கி, அவ்வீட்டின் மருமகப் பெண்களுக்குக் குடைச்சல் கொடுக்கிறாள்!
ஈஸ்வரி கழுத்தை நெறித்த ஆதி, அது யாருக்கும் தெரியாதென்ற ஆணவத்தில் அமைதி காக்க, அறிவுக்கரசி கையில் ஈஸ்வரியின் செல்போன் சிக்க, அதில் அந்தக்காட்சி வீடியோவாகப் பதிவாகியிருப்பதை, அவளும் பார்த்து விடுகிறாள்!
குணசேகரனைக் குழியில் தள்ளச் சமயம் பார்த்துக் காத்திருப்பாள் போலும்!
முல்லையின் முயற்சியால் மலையாள மாந்த்ரீகர் ஒருவர், தன் குழுவுடன் திருமண மண்டபத்திற்கே வந்து, பூஜை, புனஷ்காரமெல்லாம் செய்கிறார். 2 லட்ச ரூபாய் சம்பளம் பேசி! அவரும் தன் உணர்வுத் திறத்தால் (Intuition) காட்டில், பார்கவியும், ஜீவானந்தமும் போலீஸ் கையில் சிக்கவிருப்பதைக் கூறுகிறார். அதனைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஜனனி, அவரைப் பார்த்துச் சில கேள்விகளைக் கேட்கிறார்.
“இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்தச் சிறப்பு ஆற்றலின் மூலம் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டறிய முடியுமல்லவா? நீங்களே சொல்லுங்கள்! உங்களை அழைத்திருப்பவர்கள் நல்லவர்களா?”
ஆணித்தரமான ஜனனியின் கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தாலும், பம்முகிறார் அவர். உண்மையைச் சொன்னால் அது குணசேகரன் அன்ட் பார்ட்டியைக் கோப முறச் செய்யும் என்பதை அறியாதவரா என்ன? எனவே, யோசிப்பதைப் போல அவர் நடிக்க… ”சொல்லுங்கள்! ஏன் மௌனம் காக்கிறீர்கள்?” என்று மீண்டும் நாயகி கேட்க, “ஆம்! அம்மா! அவர்கள் கெட்டவர்கள்தான்!” என்ற அவர், ”அது அவர்களின் விதிப்பயன்!”என்கிறார். மேலும் “அதற்கான தண்டனையை அவர்கள் மறுபிறவியில் கட்டாயம் அனுபவிப்பார்கள்!அனுபவித்தே ஆக வேண்டும்!”என்றும் சொல்கிறார்.
ஆதி குணசேகரனும் அவரைச் சுற்றியுள்ள அலம்பல் கூட்டமும் விக்கித்துப் போகின்றனர்! ஜனனி விடாமல் மேலும் தொடர்கிறார். ”அது அவர்கள் விதிப்பயன் என்றால், கெட்டவர்களுக்குத் துணை போகும் உங்கள் விதிப்பயன் உங்களைத் தண்டிக்காதா?” இந்தக் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்க்காத அவர், தன்னுள்ளே உடைந்து போகிறார்! செய்து கொண்டிருந்த பூஜையை உடனே நிறுத்தி விடுகிறார். கதிரின் கோபம் தலைக்கேறுகிறது!
“மக்களுக்கு நல் வழிகாட்ட வேண்டிய உங்களைப் போன்றோரே நல்லவர்களுக்கு உதவ வேண்டாமா? சரி!உதவத்தான் மனமில்லை என்றாலும், ஒதுங்கியாவது இருக்கலாமே! அதை விடுத்துத் தீமைகளுக்கும், தீயவர்களுக்கும் உதவுவதும், அவர்கள் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுப்பதும் நியாயந்தானா? இதற்கெல்லாம் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?”
ஜனனியின் நியாயமான கேள்விகள் மாந்த்ரீகக் குருவை ஒரு வழியாக்க, அவர் சப்தம் இல்லாமல் பூஜையை நிறுத்தி விட்டு எழுந்து, யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளாமலே கிளம்பி விடுகிறார் - தன் குழுவுடன்! இதன் மூலம் இயக்குனர் ஓர் உயர்ந்த கருத்தை விதைத்துள்ளார்! தீயவற்றுக்குத் துணைபோகும் குருமார்களுக்குக் கொடுக்கப்படும் சாட்டையடியாகவே இது தோன்றுகிறது!நல்லதும், நல்லவர்களும் வாழ வேண்டுமானால்
அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அனைவரும் அவர்களைச் சப்போர்ட் செய்ய வேண்டும்.
பூஜையை பாய்காட் செய்து கிளம்புவது அதைத்தானே உணர்த்துகிறது.
கதிர் சும்மா விட்டு விடுவாரா? குருவிடம் சண்டை போடுகிறார்! ஏனெனில், திருக்கு எப்பொழுதுமே தன்அண்ணன் ஆதியைத் திருப்திப் படுத்தவேண்டும்.
குண்டடி பட்டாலும், மிகக் கவனமாகத் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற, ஜீவானந்தம் முயல்கிறார். அவருக்கு உதவ, ஜனனி கார் எடுத்துச் செல்கிறார். அவசரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கும் கடையில் மொபைலை விட்டுச் சென்று விடுகிறார்!
பார்கவி வந்து சேர்ந்து விடுவாரா மண்டபத்துக்கு? தர்ஷன் கையால் தாலி கட்டிக் கொள்ளப் போவது யார்?அன்புக்கரசியா? பார்கவியா? வெல்லப்போவது ஜனனி குழுவா? ஆதி குணசேகரனின் அதிரடி குரூப்பா?காண்போம் சின்னத்திரையில்!