

ஆணாதிக்கக் குடும்பத்தில் சிக்கி, நான்கு மருமகள்கள் படும் அவலத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் மெகா சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, முடிவை நெருங்கி வருவதாகவே தோன்றுகிறது. ஆதி குணசேகரனைப் போன்று உடம்பு முழுவதும் சூது, வாது நிறைந்த மனிதர்களைப் பார்ப்பதே அரிது என்பதே உண்மை. அப்பப்பா! எவ்வளவு கில்லாடித்தனம்!
ராமேஸ்வரம் செல்லும் தம்பி சக்தி, திரும்பி மதுரை வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் செய்யும் அடாவடித் தனங்களும் அக்கிரமங்களும் எந்த அண்ணனும் செய்யக் கூடாதவை. உடனிருக்கும் இன்னொரு இளைய சகோதரனான ஞானம் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, குணசேகரன் போனில் சக்தியை முழுதாக முடித்து விடுமாறு கூறுகின்றதைக் கேட்டுப் பதறி, ”அண்ணன் அவன் நம்ம தம்பிண்ணே!” என்கையில், ”சொந்த ரத்தத்திற்கு என்னால் எந்தக் கெடுதலும் வராது!” என்கிறார் ஆதி!
எனவே அதில் ஏதோ ட்விஸ்ட் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. சக்தி ஆதியின் சொந்தத் தம்பி இல்லையோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளார்கள்.
“இரண்டே நாட்கள் டைமுக்குள்ளாக எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு ஓடி விட வேண்டுமென்று ஆதி ஜனனியை மிரட்டி, அவ்வாறு நடக்காவிட்டால் பாவம்! என் சக்தியையே நான் இழந்து விடுவேன்!” என்று கூறுவது ஆதியின் வில்லத் தனத்திற்கு நல்ல உதாரணம். எல்லாவற்றையும் தானே கஷ்டப்பட்டுச் சேர்த்ததைப் போலக் காட்டிக்கொண்டாலும், எல்லாம் அநியாய வழியில்தான் வந்தவை என்று ஜனனி விளக்கும்போது, ஆதியின் தாயே மருமகள்களிடம் மன்னிப்பு கோருவது அருமை!
ஏனெனில் பெரும்பாலான மெகா சீரியல்கள் மாமியார்களை அடாவடிப் பேர் வழிகளாகவே சித்தரித்து வருகின்றன.
- தன் இளைய மகன் காதலித்து மணந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், அவளைத் துரத்தத் துடிக்கும் ஒரு மாமியார்!
- தன் மகன் காதலித்து, மணந்து, குழந்தை பெற்ற பிறகும், மருமகளை டிவர்ஸ் செய்து விட்டுத் தன் அண்ணன் மகளை மணமுடிக்க ஸ்கெட்ச் போடும் மற்றொரு மாமியார்!
- தன் மகன் அவசரகதியில் மணந்து வந்த பெண்ணை, அவள் எவ்வளவு உயர்ந்த குணங்களுடன், பொறுமை காத்தாலும், அவளை வீட்டை விட்டுத் துரத்த எந்த இழி செயலையும் செய்யத் துணியும் இன்னொரு மாமியார்!
- தன் கணவனின் தங்கை மகளே தனக்கு மருமகளாக வந்த போதும், மருமகளைச் சிரமப் படுத்துவதாக எண்ணி, தாலி கட்டிய கணவனையும், தன் இளைய மகனையும் எப்பொழுதும் வெறுத்து ஒதுக்கி, ஏடா கூடமாகச் செயல்படும் வேறொரு மாமியார்!
சரி! போதும்! இத்துடன் நிறுத்திக் கொள்வோம்! பெண்களை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு, நம் சின்னத்திரையினர் அவர்களை இழிவு படுத்துவதாகவே தோன்றுகிறது!
-மாமியார்கள் மூலம்! மாமியார்களும் பெண்கள்தான் என்பதை மறந்து!
ஆதி செய்த அடாவடிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், தம்பிகள் ஞானமும், கதிரும் அண்ணனின் அடிமைகளாகவே இருப்பது, ஒரு விதத்தில் பாசம் என்று எடுத்துக் கொண்டாலும், ஆழ்ந்து பார்த்தால் நெருடவே செய்கிறது. மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு அண்ணனோடே சுற்றுவது, தற்காலச் சூழலுக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. திருமணம், குழந்தைகள் என்று வந்த பிறகு, தனித் தீவுகளாக மாறிப்போவதே நிகழ்கால நடைமுறை! ’அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!’ என்பது வெறும் பாடல் வரிகளல்ல. நிதர்சனமும் அதுதான்!
கணவனைக் காப்பாற்ற, அவன் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள, ஆதியின் கால்களில் விழுந்து கதறும் ஜனனியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது! கணவன், அவனின் உயிர், என்று வருகையில் புதுமைப் பெண்களும் தடுமாறி, இறங்கி வருவது இயற்கைதானோ? பண்பாட்டுப் பாரம்பரியம், நம் பெண்களின் இரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடும் உயிர்ப்போ! அதனால் தான் ஆணாதிக்கம் இன்றும் நிலைத்து நிற்கிறதோ?
சக்தியைக் காப்பாற்ற ஜனனி எடுக்கும் முயற்சிகள் மெய்சிலிர்க்கச் செய்பவை.
பெப்பர் ஸ்ப்ரேயாலும், மரக்கட்டையாலும் எதிரிகளை வீழ்த்தி விட்டு, அன்புக் கணவனை சவப் பெட்டியில் கண்டு பிடித்து, காட்டில் அவனை முதுகில் சுமந்து வந்து காப்பாற்றுவது, வீரப்பெண்களால் மட்டுமே சாதிக்கக் கூடியவை! ஆட்டம்போடும் அறிவுக்கரசியின் கையை முறித்துப் போடுவதும் ஏற்கக் கூடியதே!
நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்குக் கெட்டவராகவும் நடந்து கொள்ளும் நாயகன் - நாயகியரையே ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
வீரம் பேசிய ஆதி, தம்பிகள் மற்றும் கரிகாலனுடன் ஒளிந்து வாழ ஓடுகிறார் பாண்டிச்சேரிக்கு! பார்ப்போம் காவல் துறையின் கண்ணியத்தை! அவரை விரைவில் மடக்கிப் பிடிக்கிறார்களா வென்று!
காவல்துறையில் கறுப்பு ஆடுகள் உண்டென்பது உண்மையென்றாலும்,எல்லா மெகா சீரியல்களிலும் அத்துறை சிறுமைப்படுத்தப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் நன்கு தூங்க, விழித்திருப்பவர்கள் அவர்கள்!
இனி எந்த மெகா சீரியலும் எளிதில் முடிவுக்கு வராது. ஏனெனில் இதுவரை தீபாவளி, பொங்கல், திருவிழா, நேர்த்திக்கடன் என்று எல்லாவற்றையும் புகுத்தி ஜவ்வாக இழுத்தவர்கள், இப்பொழுது வேறொன்றையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அது, கதையுடன் தொடர்பு படுத்தி விளம்பரங்களைப் புகுத்தும் புது யுக்தி!
ஒன்றில், திருமணத்திற்குப் புடவை வாங்கச் செல்கையில் அந்தக் கடையிலுள்ள புடவை வகைகள் விளம்பரத்திற்கு உள்ளாகின. மற்றொன்றில் மகனுக்குப் புதுக் கார் வாங்கிப் பரிசளிக்கும் தந்தை, காரின் ஃபியூசர்களை, விளம்பரதாரர்களையும் மிஞ்சும் விதமாக விவரிக்கிறார்!
ஓடி ஒளியும் ஆதி அன்ட் கோ விரைவில் பிடிபடுவார்களா?ஜனனி குரூப் முழுமையாக வெல்லுமா? தர்ஷன்-பார்கவி இனியாவது நிம்மதியாக வாழ முடியுமா? முல்லையும், அறிவும், அன்பும் இனி என்ன செய்யப் போகிறார்கள்?இதற்கெல்லாம் பதில்? திருச்செல்வன் சாருக்குத் தானே தெரியும்! நாம் பொறுத்திருந்துதானே பார்க்க வேண்டும்!