சின்னத்திரை மெகா சீரியல்கள், பல கோடிப் பேர்கள் பொழுது போக்க உதவுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! அவை கொஞ்சம் விழிப்புணர்வையும், சமுதாயச் சிந்தனையையும், நமது நாகரீகத்தையும் பண்பாட்டையும் இளந் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்பவையாகவும் அமைவதுதானே முறை?அதுதானே சமூகச் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பு? ஆனால் நடப்பது என்ன?
'உனக்கேன் யாருக்குமில்லாத அக்கறை?' என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன். சுய நலமென்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. 'ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன். அதைப்போல!' என்ற பராசக்தி கணேசனின் வசனந்தான் உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது!
பெண்களைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி, அவர்களின் தரத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதை, பல சீரியல்களையும் தொடர்ந்து பார்ப்பவர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்! மதிய நேரச் சீரியல் ஒன்று.
முறைப் பையனை முழுதாய் அவள் காதலிப்பது, பணக்கார அப்பையனின் சொகுசு வாழ்க்கையில் பங்கு போடத்தான்! அந்த நாயகனோ அவளிடமே தனக்கு எந்த ஈர்ப்பும் இல்லையென்றும், தன்னை விட்டு விலகிச் செல்லுமாறும் கூறிய பிறகும் அவனை விடாமல் துரத்துகிறாள். ஒரு நாள் இரவு அவன் படுக்கையறைக்கே போய் விடுகிறாள்!
திருமணத்திற்கு முன்பே உறவில் ஈடுபட்டு விட்டால் திருமணத்தை யாராலும் தடுக்க முடியாதாம். இந்த ஐடியாவைக் கொடுப்பது யார் தெரியுமா? சாட்சாத் அவளைப் பெற்ற நமது தமிழகத் தாய்தான்! கொடுமையிலும் கொடுமை அதுதான். கங்கையிலும், காவிரியிலும் மூழ்கினாலும் இந்தக் களங்கம் போகுமா என்று தெரியவில்லை!
வெள்ளித் திரைக்கும் சின்னத் திரைக்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால், முன்னதைத் தேடி நாம் போக வேண்டும். பின்னது நம் சமையலறை வரை நம் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. எனவே அதனைக் கவனமாகக் கையாள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம் சின்னத்திரை இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் உண்டு. நடப்பைப் பார்த்தால் அது இல்லையென்றே தோன்றுகிறது.
ஒரே நாளில் தொடர்ந்து மெகா சீரியல்களைப் பார்ப்பவர்கள், படியிலும், தரையிலும் எண்ணையை ஊற்றி வழுக்கி விழச் செய்யும் டெக்னிக்கைக் கண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதோடு மட்டுமல்ல. கல்யாணமானவர்களைப் பிரிக்க நினைக்கும் மாமியார்கள் முதலிரவைத் தள்ளிப் போடுவது, பல சீப்பான வழிகளிலும் ஜோடிகளைப் பிரிக்கத் திட்டம் தீட்டுவதென்று வேடிக்கை காட்டுகிறார்கள். சாதாரண குடும்பப் பெண்கள் அடியாட்களை வைத்துக் கொள்வதும், ஒரு போன்காலிலேயே அவர்களை இயங்கச் செய்வதும், நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வராதவை; சிரிப்பை ஏற்படுத்துபவை!
இன்னொரு நன்றாகப் போய்க் கொண்டிருந்த சீரியலில், பல தடங்கல்களுக்குப் பிறகு கதாநாயகி திருமணம் நடைபெற்று சீரியல் இனிதே முடியமென்று எதிர்பார்த்தால், ஜவ்வாக அதனைத் தொடர்ந்து இழுக்க ஆரம்பித்து, ரசிகர்களின் முணுமுணுப்புக்கு ஆளாகி வருகிறார்கள். சிலர் அந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்திக் கொண்டதாகவும் சொன்னார்கள்! அவர்கள் சொல்வது…’மறுபடியும் மொதல்ல இருந்தா?’ சிந்துபாத்தே முடிந்தாலும் இவர்கள் முடிக்க மாட்டார்கள் போலும்.
-பண்பாட்டுக்கு இழுக்கில்லாத வகையில் சீரியல்கள் வர வேண்டும்.
-ஓரளவுக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருந்தால் நலம். பார்க்கும் இளந் தலைமுறையினருக்கு அது உதவும்.
-ஜவ்வாக இழுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
-நல்ல கதைகளைத் தேர்ந்து, சில வாரங்களிலேயே முடிக்க வேண்டும்.
பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமும் அதுதான்!
இவற்றையெல்லாம் செய்தால், சின்னத்திரை இன்னும் அதிக சிறப்புடன் இலங்கும். இல்லையென்றால் திரைப்படங்களைப் போல இதற்கும் தணிக்கை செய்யும் நிலை வரலாம்!