
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி 13-ம்தேதி தொடங்கியது. இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த மகா கும்பமேளா நிகழ்வில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இங்கு நீராடுவதால் ஆன்மா தூய்மைப்படுத்துவதாக மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. 45 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே (13-ம்தேதி) 1 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா சங்கமத்தில் புனித நீராடியதாக சொல்லப்படுகிறது. முக்கிய தேதிகளான ஜனவரி 14-ம்தேதி (மகர சங்கராந்தி), ஜனவரி 29-ம்தேதி (மௌனி அமாவாசை ), பிப்ரவரி 3-ம்தேதி (பசந்த பஞ்சமி ), பிப்ரவரி 12-ம்தேதி (மாகி பூர்ணிமா), மற்றும் பிப்ரவரி 26-ம்தேதி (மகா சிவராத்திரி)ஆகிய தேதிகளில் பத்கர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெற உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பத்தில் கலந்து கொள்வதற்காக உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் பிரயாக்ராஜுக்கு வந்தார். வரும் ஜனவரி 20-ம்தேதி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா திரும்புவதற்கு முன், ஜனவரி 15-ம் தேதி வரை, (அதாவது 17 நாட்கள்) லாரென் பாவெல் ஜாப்ஸ், நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஸ்வர சுவாமி கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் முகாமில் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
முதல் நாளில் திட்டமிட்டப்படி புனித சடங்குகளில் கலந்து கொண்ட இவருக்கு 2-ம் நாளில் ஒவ்வாமை பிரச்சனை காரணமாக திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உடல்நலப்பாதிப்பு இருந்தாலும் அவர் 2-வது நாளில் கங்கை நதியில் புனித நீராடும் சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரென் பாவெல் ஜாப்ஸிக்கு ஏற்பட்ட ஒவ்வாமை பிரச்சனை தொடர்பாக சுவாமி கைலாசானந்த கிரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், லாரென் பாவெல் ஜாப்ஸ் மகா சங்கமத்தில் புனித நீராடும் சடங்கில் கண்டிப்பாக பங்கேற்பார் என்றும் அதன் பின்னர் அவர் முகாமில் ஓய்வெடுப்பார் என்றும் கூறினார். தற்போது லாரென் பாவெலுக்கு சில அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும் ஏனெனில் இதற்கு முன்பு அவர் இவ்வளவு கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்றதில்லை என்பதால் அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் சுவாமி கைலாசானந்த கிரி கூறியுள்ளார். மேலும் பாவெல் ஜாப்ஸிக்கு சுவாமி கைலாசானந்த கிரி 'கமலா' என பெயர் சூட்டி உள்ளார்.
மகர சங்கராந்தியான நேற்று முதல் அமிர்த ஸ்னான் என்பதால் கோடிக்கணக்கான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.
மகா கும்பம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மத சபைகளில் ஒன்றாகும், இது இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் ஒன்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.