ஒரு மத்தியத் தரக் குடும்பம் முப்பது கொலைகள் செய்த ஒரு பெரிய ரவுடியைக் கொலை செய்ய முயல்கிறது. அவர்கள் வென்றார்களா என்பது தான் பேமிலி டிராமா. டார்க் ஹ்யூமர் என்பது சட்டென்று யாருக்கும் கைவராத ஆனால், அனைவரும் விரும்பும் ஒரு ஜானர். அதில் வந்துள்ள படம் தான் இது. அபய், அவனது அக்கா திவ்யா (சிந்து), அம்மா லட்சுமி (ரேகா). இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு காரணத்திற்காகப் பணம் தேவை. அபய்க்கு காதலியைச் சந்தோஷப்படுத்த. திவ்யாவிற்கு நல்ல வேலை அமைய. லட்சுமிக்கு ஒரு ஹோட்டல் வைக்க.
குடும்பத் தலைவரான அப்பாவிற்கு கஷ்ட ஜீவனம். அவர் என்ன வேலை செய்கிறார் என்பதே இவர்கள் மூவருக்கும் தெரியாத வண்ணம் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர்களும் தங்கள் தேவைகளுக்காக அவரையே ஏமாற்றி பணம் வாங்கி கொண்டிருக்கும் அளவு ஒரு விதமான சுயநலமான, வில்லத்தனம் கொண்டவர்கள் தான். ஒரு கட்டத்தில் அப்பா இறந்து கிடக்க அந்த ரவுடியைக் கொன்றால் முப்பது லட்சம் தருகிறேன் என்று பேரம் பேசுகிறார் ஒருவர். ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் என்று மூவரும் இதில் இறங்குகிறார்கள். என்ன ஆனது என்பது இரண்டாம் பாதி.
ரவுடி பிரகாஷாவாகப் பூர்ணச்சந்திர மைசூரு. வெகுளியான ஒரு கொலைகாரனாக வருகிறார். ஒவ்வொருவரிடமும் இயல்பாக ஏமாறுவதும் தெரிந்து பின்னர் கொதிப்பதும் சில இடங்களில் புன்னகையையும் சில இடங்களில் சிரிப்பையும் வரவழைக்கிறது. இவரது தலைமை உதவியாளராக வரும் ஒருவர் (ஆஷித்) செயல்படும் விதம் சிறப்பு. உர்ரென்ற முகத்துடன் ஒவ்வொரு முறையும் இவர் எதாவது சாப்பிட முயலும்போது அதைச் சுவைத்துப் பார்த்து விட்டுப் பத்து வினாடிகளுக்குள் விஷம் இல்லை என்று முடிவுக்கு வருவது சிரிப்பு. வித்தியாசமான கூட்டாளிகள் அனைவரும் சில சமயம் சுவாரசியம். சில சமயம் கடுப்பு.
அபயின் காதலியாக வரும் அனன்யா கச்சிதம். ஆனால் அந்தப் பாத்திரப்படைப்பில் ஒரு குழப்பம். அதைக் கடைசியாகத் தீர்த்து விடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ன வேலையென்றே செய்கிறார் என்று தெரியாமல் இருப்பது நம்பும்படி இல்லை. இருபது கொலைகள் செய்துள்ளேன் என்று சொல்லிக் கொள்ளும் ரவுடி அவர் பாட்டுக்கு வருகிறார் போகிறார். போலீஸ் என்ற துறை இருப்பதே தெரியவில்லை. யாரை யார் எதற்குக் கொலை செய்தார் என்பதிலும் தெளிவில்லை. கிளைமாக்சில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி நடக்கும் சண்டைக்காட்சி கலகலப்பு. முதல் பாதி உருண்டு ஓடினாலும், சம்பவங்கள் நிறைந்த இரண்டாம் பகுதி அதைச் சரி செய்து விடுகிறது. தெரிந்த முகங்கள் இல்லாமல் இருப்பதும், ஒரே மாதிரியான காட்சிகளும் படத்தைச் சில இடங்களில் பார்ப்பவர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.
உங்களுக்கு ஆபாசமில்லாத காமடி, ரத்தம் வராத வன்முறைக்காட்சிகள், இயல்பான வசனங்கள் நிறைந்த நெல்சன் பாணி படங்கள் பிடிக்குமென்றால் இந்தப் படமும் பிடிக்கலாம். மூலமான கன்னடம் புரிந்து பார்த்தால் இன்னும் ரசிக்கலாம். இல்லையேல் இருக்கவே இருக்கிறது சப் டைட்டில். எங்கேடா பார்ட் 2 வைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தபோது வைத்தார்கள் சின்ன டிவிஸ்டுடன் ஒரு முடிவு.
ஹர்ஷா எச்பி இயக்கியுள்ள இந்தப் படம் அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் குறிப்பிட்டு சொல்லத் தக்க இன்னொரு விஷயம் ரெட்ரோ பாணியில் அமைந்திருந்த சேத்தன் அம்மையாவின் பின்னணி இசை.