
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த படங்கள் யாவுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் தலைநகரம், வின்னர் என்று பல படங்களில் நம்மை சிரிக்க வைத்த சுந்தர். சி - வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 'கேங்கர்ஸ்' படத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கி நடித்துள்ள திரைப்படம் கேங்கர்ஸ். அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்தில் சுந்தர்.சி வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், ஹரீஷ் பெராடி, மைம் கோபி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பக்ஸ் விச்சு, சத்தான பாரதி, மதுசூதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளனர். படத்திற்கு வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளிடையே கடந்த மாதம் 24-ம்தேதி தமிழ்நாட்டில் 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று 5 நாட்களில் மட்டும் ரூ.9.5 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியின் பிராண்ட் நகைச்சுவை, கதையோட்டத்துடன் கச்சிதமாக இணைந்து ஜாலம் செய்வதில் திரையரங்கம் சிரிப்பலையால் அதிர்ந்தது என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி படத்தில் வடிவேலு பல கெட்டப்புகளில் வந்து கலக்கியதுடன், கிளைமேக்ஸில் மடிசார் அணிந்து கொண்டு பெண் வேடத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு தியேட்டரில் ரசிகர்களிடையே வெடித்த சிரிப்பலையை அடங்க வெகுநேரம் ஆனதாக கூறினார்கள்.
அரசன் கோட்டை என்ற ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் கேத்ரின் தெரசா, மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்ப, அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதிய உடற்கல்வி ஆசிரியராகப் பணியில் சேரும் சுந்தர்.சி, கேத்ரின் தெரசா மற்றும் வடிவேலு உடன் கூட்டணி அமைத்து காணாமல் போன மாணவியை கண்டுபிடித்தார்களா? பள்ளியில் நடக்கும் சட்ட விரோதமான செயல்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.
தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று, சுந்தர்.சி - வடிவேலு காம்போவில் உருவான ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் இன்று (மே 15-ம்தேதி) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஆனால் கேங்கர்ஸ் படம் வெளியாகி மூன்றாவது வாரத்திலேயே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்த கோடைகால விடுமுறையை குடும்பத்துடன் ‘கேங்கர்ஸ்’ படத்தை பார்த்து குதூகளியுங்கள்..