
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1987-ல் வெளியான நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'.
உலக நாயகன் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து நடிக்க, மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.
38 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, மூன்று ஜாம்பவான்கள் அதாவது கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் இந்த படத்தில் இணைந்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஏற்கனவே படக்குழு ரிலீஸ் செய்த ‘ஜிங்குஜா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல், அந்த பாடலுக்கு சிம்புவும் கமல்ஹாசனும் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு டிரெண்ட்டிங் ஆனதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
'தக் லைஃப்' படத்தை வரும் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் செய்வது என்று படக்குழு ஏற்கனவே திட்டமிட்டு புரோமோசன் பணிகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி 'தக் லைஃப்' உலக நாயகன் கமல்ஹாசனின் 234 வது படம் என்பதால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்கு காத்துக் கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் ஆடியோ லாஞ்ச் எப்போது என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது வரும் 17-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்றும், படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 24-ம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இசை வெளியிட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் பர்பாமென்ஸ் நடைபெற உள்ளதாகவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர், தமிழ்நாட்டில் தீவிரமாக புரோமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு எப்போது வெளியாகும் என்று அதிக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.