மலையாளத் திரையுலகில் கிரைம் த்ரில்லர், மர்டர் மிஸ்டரி படங்களுக்கு எப்பொழுதும் ஒரு வரவேற்பு உண்டு. இது போன்ற படங்கள் தமிழில் அதிகமாக முயற்சி செய்யப்படுவதில்லை. அதுவும் த்ரிஷ்யம் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு இது போன்ற படங்கள் அங்குப் பல்கிப் பெருகி வருகின்றன. மாதத்திற்கு இரண்டு படங்கள் இதுபோல வரத் துவங்கியிருக்கின்றன. அப்படியொரு படம் தான் குமாஸ்தன். ஜெய்ஸ் ஜோஸ் நடிப்பில் அமல் கே ஜோபி இயக்கத்தில் வந்துள்ள இந்தப் படம் சில சுவராசியமான ட்விஸ்ட்களுடன் ஒரு பொழுதுபோக்குப் படமாக அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
பள்ளிப்பாடன் ஒரு வக்கீல் குமாஸ்தா. பதினாறு வயதிலிருந்து அதிலேயே உழல்வதால் ஒரு வக்கீலாக இல்லாவிட்டாலும் சட்டத்தின் நுணுக்கங்கள் முழுதும் அறிந்தவர். அதைவிட அதில் உள்ள ஓட்டைகள் தெரிந்திருப்பதால் எப்படித் தப்பிப்பது என்பதை இவரிடம் வந்து அறிந்து போகிறார்கள் வழக்கறிஞர்கள்.
அப்படியொருநாள், தனது மனைவியைக் கொன்ற ஒருவர் அந்த வழக்கிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை அழகாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார் பள்ளிப்பாடன். இந்நிலையில் ஒரு குடும்பத் தகராறில் தனது மனைவியைக் கொன்று மறைத்துவிட்டார் என்று அவர் மீதே ஒரு பழி வருகிறது. அவர்மீது ஏற்கனவே ஒரு கண் வைத்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் இதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, எதிர்பாராத திருப்பங்கள், நிகழ்ச்சிகள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.
இவர் தான் கண்டிப்பாகக் கொலை செய்திருப்பார். ஆனால் யாரை, எப்படி, அந்த உடல் எங்கே என்று போலீஸ் தலையைப் பிய்த்துக் கொள்கிறது. எல்லாவிதமான கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருக்கிறது. அனைத்து சம்பவங்களையும் அவர் யோசித்து எதிர்கொள்கிறார். ஒரு கிரிமினல் மாஸ்டர்மைண்ட் நினைத்தால் எப்படியெல்லாம் சட்டத்தை வளைக்க முடியும் என்று கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் ஒரு கெட்டவரைக் கதாநாயகராக்கி அவரைப் புகழும் போக்கு வரவேற்கக் கூடியது அல்ல. என்ன, ரசிகர்களுக்கு நாயகன் ஜெயித்தால் போதும். யாரைக் கொன்றால் என்ன என்ற மனப்பாங்கு தானே. இது தொடராமல் இருப்பது நல்லது.
ஒரு கட்டத்தில் போலீஸ் விசாரணைகளும், சந்தேகக் கண்களும் பலர் மேல் பாய ஆரம்பிக்கின்றன. ஒவ்வொன்றாக அவர்கள் கணிப்புத் தவறாகி வருகிறது. ஒரு கட்டத்தில் தங்கள் விசாரணை மீதே அவர்களுக்குச் சந்தேகம் வரத்துவங்குகிறது. இடைவேளை வரை ஒரு வகையாகச் செல்லும் படம் அதன் பிறகு முற்றிலும் வேறு கோணத்தில் பயணிக்கத் துவங்குகிறது.
நீளமான காட்சிகள், தேவையே இல்லாதா ஸ்லோ மோஷன் காட்சிகள் அளவுக்கு அதிகமாக ஒலிக்கும் பின்னணி இசை என்று மைனஸ்களும் உண்டு. படத்தின் நீளமும் கொஞ்சம் அதிகம் தான். இரண்டு மணிநேரத்தில் கண்டிப்பாக முடித்திருக்க முடியும். திருப்பங்கள் அனைத்தும் சுவாரசியம் என்று நினைத்து அத்தனையையும் வைத்ததால் ஓடிக்கொண்டே இருக்கிறது படம்.
பள்ளிப்பாடனாக ஜெய்ஸ் ஜோஸ். விஜய் சேதுபதி போலவே இருக்கும் இவர் பொருந்தாத விக் மற்றும் தாடி காரணமாக நடிக்க வாய்ப்பே இல்லை. சத்தம் கேட்டாலே கோபப்படும் பாத்திரத்தில் சில சமயம் பொருந்திப் போகிறார். சில சமயம் கொஞ்சம் மிகையாக நடிப்பது போல் தோன்றுகிறது. ஒரு வேலைக்காரியின் பேச்சைக் கேட்டு விசாரணை ஆரம்பித்து அது போலீசுக்கே எதிராகப் போகிறது. எனினும் திரும்பவும் உதவிக்கு அவரையே நாடும் நோக்கம் என்ன? தன் மீது பழி வரக்காரணமாக இருக்கும் அவரைத் திரும்பவும் அந்த வீட்டில் ஏன் வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள்? இவ்வளவு பேரைத் தேடும் போலீஸ் ஒரு முக்கியக் கதாபாத்திரம் காணாமல் போவதை பற்றித் தெரியாமலே இருப்பதன் காரணம் என்ன? ஒருவர் மேல் இவ்வளவு சந்தேகப்படும் போலீஸ் அவரது குடும்பம்குறித்து விசாரிப்பது போலவே தெரியவில்லையே? இப்படிப் பல குறைகள் இருந்தாலும் ஒரு சிறிய முடிச்சை வைத்துப் பல திருப்பங்களுடன் ரசிக்கத் தகுந்த ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பைப் பெறாவிட்டாலும் வழக்கம்போல ஓ டி டி தளத்தில் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் தான் குமாஸ்தன். திரில்லர் படங்களின் 'சமீப கால நோயான' இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடுடன் படத்தை முடித்துள்ளார் இயக்குனர் அமல் கே ஜோபி. அவ்வளவாகப் பரிச்சயம் ஆகாத முகங்களைக் கொண்டு இந்தப் படம் எடுத்ததிலேயே கவனம் பெறுகிறது இந்தக் குழு. பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் கவனம் பெற்றிருக்கும். நரேன், திலீஷ் போத்தன் போன்ற நல்ல நடிகர்களை வீணடித்திருக்கிறார்கள்.
தவற விடக்கூடாத படமல்ல. பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்.