
ஜூலை 31, ஹாரி பாட்டர் பிறந்த நாள். இந்த கற்பனைக் கதாபாத்திரம் அவதரித்து 45 வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்தப் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாட வேண்டும், ஹாரி பாட்டர் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றை இணைய தளத்தில் பார்க்க முடிகிறது. கணக்கற்ற கதாசிரியர்கள் பலவகையான கதைகளைப் படைத்துள்ளார்கள். ஆனால், வேறு எந்தக் கதையின் மூல நாயகனுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடியதாகத் தெரியவில்லை.
ஹாரி பாட்டர் கதையை எழுதியவர் ஜே.கே.ரவுலிங். இந்தக் கதை மந்திர உலகத்தைப் பற்றியது. மந்திர உலகை தன் வசம் வைத்திருக்கத் துடிக்கிறான் கெட்ட மந்திரவாதி லார்ட் வோல்ட்மார்ட். வோல்ட்மார்ட், ஹாரி பாட்டர் பெற்றோர்கள் மறைவிற்குக் காரணமானவன். மற்றவர்கள் உதவியுடன், வோல்ட்மார்ட் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களை அழித்து, நல்லதை நிலைநாட்டுகிறான் ஹாரி. 1997ஆம் வருடம் தொடங்கி 2007 வரை மொத்தம் ஏழு புத்தகமாக இந்தக் கதையை எழுதினார் ரவுலிங்.
ரவுலிங், ஹாரி போட்டர் தொடரின் முதல் கதையை எழுதி பல பதிப்பகங்களுக்கு அனுப்பிய போது, பலரும் அதை நிராகரித்தனர். ப்ளூம்ஸ்பரி, இந்தக் கதைக்கு 500 பிரதிகள் பதிப்பித்து 26 ஜூன் 1997 ஆம் வருடம் வெளியிட்டது. இந்த முதல் புத்தகம் இலக்கிய உலகில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் புத்தகம் வெளிவந்த போது இதற்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் பரவின. குழந்தைகளுக்காக என்று எழுதப்பட்ட இந்தப் புத்தகம் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றதா, இதை தடை செய்ய வேண்டுமா என்று கேள்விகள் எழுந்தன. பள்ளியின் நூலகத்தில் இந்தப் புத்தகம் வைக்கப்படக் கூடாது என்று விமரிசனங்கள் எழுந்தன.
ஆஸ்திரேலியாவில் இதை தடை செய்ய வேண்டும் என்ற விமரிசனம் எழுந்த போது, ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை அவர்களை, புத்தகத்தைப் படித்து கருத்து சொல்லச் சொன்னர்கள். அவர்கள் சொன்னது, 'இந்தப் புத்தகம் குப்பை, ஆனால் இரசிக்கத்தக்க குப்பை' என்றார்கள். முதல் புத்தகம் உலகெங்கும் 450 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. மேஜிக் பற்றிய இந்த புத்தகம் செய்த மாபெரும் மேஜிக், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த இதன் ஆசிரியர் ரவுலிங், பில்லியனராக (100 கோடிகள் சொத்து மதிப்பு) உயர்த்தப்பட்டது. 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்ற பழமொழி ரவுலிங் பொருத்தவரை உண்மையாகி விட்டது.
ஏழு புத்தங்கள் அடங்கிய இந்த தொடர் உலகம் முழுவதும் 600 மில்லியன் பிரதிகள் (60 கோடி) விற்று 'சிறுவர்களுக்கான புத்தகத் தொடரில் அதிக எண்ணிக்கையில் விற்றது' என்று கின்னஸ் சாதனை செய்தது.
இந்தப் புத்தகத் தொடர் இதுவரை 80 மொழிகளுக்கு மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்காக என்று எழுதப்பட்ட இந்தத் தொடர் பெரியவர்களையும் கவர்ந்தது. இந்தத் தொடரின் ஒவ்வொரு புத்தகம் வெளியிடப்படும் போதும், பத்திரிகை மற்றும் ஊடக ஆரவாரம் காரணமாக மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவாயின. புத்தகங்களுக்கு முன் பதிவு செய்வது, வெளியிடப்படும் அன்று காலை முதல் புத்தகக் கடைகளில் நீண்ட வரிசையில் சிறுவர்களும், பெரியவர்களும் என்று புத்தக வெளியீடு, விழா போலவே நடந்தேறியது.
ஒரு புத்தகம் பிரபலமடைந்தால், சினிமா உலகம் சும்மா இருக்குமா? 'வார்னர் ப்ரதர்ஸ்' இந்த புத்தகத் தொடரின் அடிப்படையில் எட்டு படங்கள் எடுத்தார்கள். ஹாரி பாட்டர் உரிமையின் மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். (2500 கோடி டாலர்கள்).
2007 ஆம் வருடம், ஹாரி பாட்டர் ஏழு புத்தகத்தின் அட்டைகள், பிரிட்டனில், தபால் தலைகளாக வெளியிடப்பட்டன. 2012ஆம் வருடம் அன்றைய கிரேட் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மே 2ஆம் தேதியை 'சர்வதேச ஹாரி பாட்டர் டே' என்று அறிவித்தார். ஏன் மே 2ஆம் தேதி. அன்றுதான் 'ஹாக்வார்ட்ஸ் போரில்' ஹாரி பாட்டர், லார்ட் வோல்ட்மார்டை தோற்கடித்து, தீய சக்திகளை நல்ல சக்திகள் அழித்து விடும் என்று நிரூபித்தார்.
ஹாரி பாட்டர் கதையைக் கருவாகக் கொண்டு, மொத்தம் ஆறு 'தீம் பார்க்' இயங்கி வருகின்றன. அவை, அமெரிக்காவின் புளோரிடாவில் மூன்று மற்றும் ஹாலிவுட், ஜப்பான், பீகிங்க் ஆகியவற்றில் தலா ஒன்று. ஹாரி பாட்டர் கதைகளின் பாத்திரங்கள் பல பொம்மைகளாக வந்துள்ளன.
இந்த புத்தகங்கள் வந்து 18 வருடங்களாகியும், இதற்குள்ள வரவேற்பு குறையவில்லை. எச்.பி.ஓ (HBO), வார்னர் ப்ரதர்ஸின் ஹோம் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம், ஹாரி பாட்டர் 7 புத்தகங்களையும், தொலைக்காட்சித் தொடராக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஒரு புத்தகம் ஒரு சீசன் என்று இந்தத் தொடர் ஏழு சீசனாக வெளிவரும். முதல் சீசன் அமெரிக்காவில் 2027ஆம் வருடம் எச்.பி.ஓ சேனலில் வெளியாகும்.
இந்த தொடரில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு, நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு முடிந்து விட்டது. இந்தத் தொலைக் காட்சித் தொடரில், ரவுலிங் பங்கேற்பதால், கதையில் மாற்றங்கள் ஏதுமில்லாமல், தொலைக் காட்சித் தொடர் புத்தகத்தை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பெரிய கதையை இரண்டு அல்லது இரண்டரை மணி நேர சினிமாவாக எடுக்கும் போது சில காட்சிகள், சில பாத்திரங்கள் விடுபட நேரிடும். இது தவிர்க்க முடியாதது. தொலைக் காட்சித் தொடரில், நேரக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தால், கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. காத்திருப்போம், சின்னத் திரையில் ஹாரி பாட்டரைக் காண.
பொன்னியின் செல்வன் 5 பாகங்களும், தொலைக் காட்சித் தொடராக வந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.