
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரே என்டர்டெயின்மென்ட் என்றால் அது டிவி சீரியல்கள் தான். சீரியல்களை பெண்கள் மட்டுமே பார்த்து வந்த நிலை மாறி இப்போது சிறுவர்களும், பெரியோர்களும் சீரியல்களுக்கு அடிமையாக கிடக்கிறார்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலையில் 10 மணிக்கு டிவியைப் போட்டால் சமையல் செய்து கொண்டே சீரியல் பார்க்கும் இவர்கள் இரவு 10 மணி வரை சீரியல் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
வீட்டிற்குள் வந்து திருடன் எதையாவது திருடிக்கொண்டு சென்றால் கூட அவர்களுக்கு தெரிவதில்லை அந்தளவிற்கு சீரியலில் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவி மட்டும் தான் என்ற காலகட்டம் இருந்தது. ஆனால் அதற்கு போட்டியாக வந்த விஜய் டிவி தற்போது சின்னத்திரையில் சன் டிவிக்கு நிகராக புதுப்புது சீரியல்களை இறக்கி செம டஃப் கொடுத்து வருகிறது. அதுவும் பெண்கள், பெரியோர்களை கவரும் வகையில் புதுப்புது சீரியல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
அதுமட்டுமின்றி டிஆர்பி ரேஸிலும் சன் டிவிக்கு ஆட்டம் காட்டும் ஒரே சேனல் என்றால் அது விஜய் டிவி மட்டும் தான். அந்த அளவுக்கு மக்களை கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை உடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
அந்த வகையில் விஜய் டிவியில் டாப் 10 டிஆர்பி-யில் இடம்பெறும் சீரியல்கள் என்றால் அது சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் தான் என்று அடித்து சொல்லலாம்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டாப் 10க்குள் நுழைந்து நல்ல வரவேற்பை பெற்று சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் என்றால் அது மகாநதி சீரியல் தான். இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி இரவு 7:30 மணிக்கு நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் சுவாமிநாதன் அனந்தராமன், பிரதிபா, லட்சுமி பிரியா, ருத்ரன் பிரவீன், சரவணன் மற்றும் சுஜாதா சிவகுமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இப்போது விஜய்-காவேரியை சுற்றியே கதை நகர்கிறது. பசுபதி சூழ்ச்சியால் ஜெயிலில் இருக்கும் விஜய்யை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டும் என காவேரி, குமரன் மற்றும் நிவின் போராடுகிறார்கள்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் சென்று கொண்டிருக்கும் மகாநதி சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு மகாநதி சீரியலில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கமுருதீன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்பெல்லாம் என்னை பார்த்தால் எப்படி இருக்கிறீர்கள்... ஷூட்டிங் எப்படி போகுது? என்று தான் கேட்பார்கள். ஆனால் தற்போது மகாநதி சீரியல் எப்போ முடியப்போகுது என்றுதான் எல்லாரும் கேட்கிறார்கள் எனக்கூறியுள்ள கமுருதீன், சீரியல் தற்போதைக்கு முடியாது என்றும், 1000 எபிசோடுகள் வரை செல்லும் என விளக்கம் அளித்துள்ளார்.
குமரனின் இந்த பதிலால் ரசிகர்கள் உற்சாகமடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மகாநதி சீரியலில் கங்காவுக்கு ஜோடியாக குமரன் கேரக்டரில் கம்ருதீன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.