முக்கிய நேரமான முன்னிரவு ஏழரை மணிக்கு, ‘சன் டிவி’ யில் வரும் கயல் சீரியல் கல்யாணக் களை கட்டி விட்டது! சிறு வயதுத் தோழர்களான எழிலும், கயலும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, நேற்று (18.10.2024) திருமண பந்தத்தில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணைந்து விட்டனர்!
நட்பு வட்டத்தைத் தாண்டி, காதல் வட்டத்திற்குள் நுழைந்து கயல் மனத்தில் இடம் பிடிக்க, எழில் எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல! எத்தனை முறை தோற்றாலும், கயல் இல்லாமல் இந்தப் பிறவி இல்லை என்ற மனவுறுதியை அவர் வகுத்துக் கொண்ட விதமும், அதற்காக தன் உயிரே போனாலும் அது மகிழ்வானதே என்ற அவரின் மன நிலையும், தற்கால இளங் காதலர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல வழி!
எப்பொழுதுமே, பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்! மனித வாழ்வு தொடங்கிய காலத்திலிருந்தே அதுதான் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அதற்கு மனயியல் ரீதியான பல காரணங்களும் உண்டு!
உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, தந்தையில்லாத குடும்பத்தையும், குடிக்கு ஆளான அண்ணன் குடும்பத்தையுமே காப்பாற்றும் பொறுப்பு தனக்கிருப்பதை உணர்ந்து, உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல், தன் வாழ்வையே தியாகம் செய்யும் கயல் கதாபாத்திரம் போற்றலுக்கும், பாராட்டலுக்கும் உரியது! எந்த இக்கட்டிலும் தன் குடும்ப கௌரவத்தையும், சுய மானத்தையும் விட்டுக் கொடுக்காமலும், நிதானம் இழக்காமலும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து அதனைத் துணிவுடன் நிறைவேற்றும் ஆற்றலுடன் செயல்படும் கயல் கதாபாத்திரம், தற்காலப் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று!
அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் சுஜாதாவின் கேரக்டரைக் கூற வந்த இயக்குனர் சிகரம், அவள் ஒரு பனிப் பாறை! உருக வேண்டிய நேரத்தில் உருகவும் செய்வாள்! என்று கூறி விட்டு, சாலையில் குட்டி போட்ட நாயைக் கண்ட அவள், உரிய துறைக்கு போன் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்வதைக் காட்டுவார்! அவர் பாத்திரத்தை ஒத்ததே கயல் பாத்திரமும்!
கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளைக்கூட சமாளித்து விடலாம், நம்மிடம் உறுதியிருந்தால்! ஆனால் கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளைச் சமாளிப்பது கடினமே! சொந்தப் பெரியப்பாவே ஒரு துரோக வில்லனாகவும், எழிலின் தாயாரே கொலைகார வில்லியாகவும் இருந்துங் கூட, அவர்களைச் சமாளிக்கும் கயலின் குணம் சிம்ப்ளி சூபர்ப்!
மருத்துவ மனையில் டார்ச்சர் கொடுக்கும் டாக்டர்! கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் ஏந்திய தங்கை! எதற்கெடுத்தாலும் பழமை பேசி கண்ணைக் கசக்கும் தாய்! குடிகார அண்ணன்! சூழ் நிலைக் கைதியாகி 'ட்ரக்' கடத்தலுக்கு ஆளாகும் தம்பி! விழா வீட்டில், எதிர் பாரா விதமாக கொலைக் குற்றம் புரிந்து விட்டதாகப் பயப்படும் தங்கை! எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் சூழலில் கயல்! அவளின் நிலையைப் பார்க்கையில் கீழ்க்கண்ட பாடல்தான் மனதை நிறைக்கிறது!
ஆயீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வர சர்ப்பம் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்களோ தக்கணைகள் கொடு என்றாரே!
டஜன் கணக்கில் துன்பங்கள் ஒரு சேர வந்தாலும் அதை சமாளித்துத்தான் ஆக வேண்டும் இல்லையா? துன்பங்கள் ஒரே நேரத்தில் இப்படியெல்லாம் வரக் கூடும் என்று கூறுவதே பாடல்!
எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, தன் இனிய சுபாவத்தால், எதிர்த்தவர்களையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, மனம் விட்டுப் பேசிய பெரியப்பாவையும் மனந்திருந்தச் செய்து, எவரையும் காட்டிக் கொடுக்காமலும், கண்ணியத்தை இழக்கச் செய்யாமலும், தன் திருமணத்தை இனிதே நிறைவேற்றிக் காவிய நாயகி ஆகியுள்ளாள் கயல்!