

பாலகிருஷ்ணா - போயபட்டி சீனு படங்களுக்கு விமர்சனம் எழுதுவது கடினம். சுலபம். சுலபத்துக்குக் கடைசியில் செல்வோம். கடினமான முயற்சியை ஆரம்பிப்போம்.
கடந்த ஐந்தாம் தேதி வரவேண்டிய படம் அகண்டா 2 (Akhanda 2). இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. அதுவும் முதல் பாகத்தின் நூறு கோடி ரூபாய் வசூலுக்குப் பிறகு தான் ஒரு நல்ல இயக்குநர் தான் என்று சீனுவுக்கே ஒரு நம்பிக்கை வந்திருக்கும். அதனால் தான் நான்கு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது பாகம் எடுக்க நினைத்திருக்கிறார்.
கதை என்று ஏதாவது வேண்டுமே. இந்திய மக்களை அழிக்க ஒரு வைரஸை பரப்புகிறார் ஒரு சீன ராணுவ அதிகாரி. (சரி தான் சீனா தான்). அதை முறியடிக்கும் மூளையுள்ள மருந்தைக் கண்டுபிடிக்க முடிகிற ஒரே பெண் மற்றொரு பாலகிருஷ்ணாவின் மகள் தான். அவளது ஐ க்யு 226 ஆம். (பார்ப்பவர்கள் ஐ க்யு பற்றி யார் கவலைப்படுவது). அவளும் அதைக் கண்டுபிடிக்கிறாள்.
அவள் யார் தெரியுமா முதல் பாகத்தில் அகண்டாவால் காப்பாற்றப் படுகிற குழந்தை தான். அவளைக் கொன்று சீனாவுக்கு உதவ இந்தியாவில் ஒரு கெட்ட அரசியல்வாதி. அவனுக்கு உதவ ஒரு கெட்ட சக்தி (ஆதி). என்ன நடக்கும். ஆயிரம் கெட்டவர்கள் கொல்லப்படுவார்கள். அகண்டா வீர நடை போட்டு நடந்து செல்வார்.
கதை, லாஜிக் என்றெல்லாம் எதிர்பார்த்து பாலையா படங்களுக்குச் செல்வது எந்த யுகத்தில் நடக்கும் விஷயம். ஆனால் கடந்த சில படங்கள் குறிப்பாகப் பகவந்த் கேசரி, டாகு மகராஜ், போன்றவை சற்றுப் பரவாயில்லை. இவர் செய்யும் விஷயங்களை இவர் மட்டுமே செய்ய முடியும். ஏன் சூப்பர் ஸ்டார் கூடச் செய்ய முடியாது. செய்யமாட்டார். இதிலும் அப்படித் தான். இந்த இயக்குநர் நாயகன் கூட்டணி இணைந்த அத்தனைப் படங்களும் அதகளம் தான். சிம்ஹா. லெஜென்ட். அகண்டா. இப்பொழுது இது.
ஒரு படத்துக்கு ஒரு கிளைமாக்ஸ் சண்டை வைப்பார்கள். இவர்கள் இணைந்தால் ஒவ்வொரு சண்டையும் க்ளைமாக்ஸ் தான். நீண்டு கொண்டே செல்லும். ஆள்கள் பறப்பார்கள். வண்டிகள் வெடித்துச் சிதறும். தலைகள் உருளும். இதிலும் விதிவிலக்கல்ல. இரண்டரை மணி நேரப் படத்தில் சண்டைக்காட்சிகள் மட்டுமே ஒரு மணி நேரம். அதற்கு மேலா என்பதைக் கவனிக்கவில்லை. கண்டிப்பாகக் குறைவாக இல்லை. இது போன்ற சண்டைக்காட்சிகளை யோசிப்பதற்கே ஒரு தனித் திறமை வேண்டும். அது இயக்குநர் சீனுவுக்கு அதி பயங்கரமாக இருக்கிறது.
வைரஸ், கடவுள் என்றெல்லாம் வந்தாலும் சனாதன தர்மத்தைப் பேசும் பல காட்சிகள் இருக்கின்றன. ஒன்றுக்கு இரண்டுபேர் இருப்பதால் உபதேசங்களுக்குக் குறைவில்லை. ஆனால் சில காட்சிகள் நன்றாகத் தான் இருந்தன. குறிப்பாகக் கடவுள் இல்லை என்று சொல்லும் மக்களிடம் பேசும் காட்சி. முக்கியமான ஒரு காட்சியில் சிவ பெருமான் பேசும் வசனங்கள். நல்ல வசனங்கள், காட்சிகள் என்று சொல்லி விடக் கூடாதே. உடனடியாக அதை மறக்கடிக்கச் செய்யும் ஒரு சண்டை வந்து விடுகிறது.
சனாதன தர்மம், ராமன், அனுமான், சிவன் என்று சகலத்தையும் பேசிவிட்டால் ரசிகர்கள் புல்லரித்து விடமாட்டார்களா. சில இடங்களில் கண்டிப்பாக விடுவார்கள். அதுவும் மகா கும்பமேளாக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது சபாஷ். கிராபிக்ஸ் தான் பல இடங்களில் நான் கிராபிக்ஸ் பேசறேன் என்று சத்தமாகக் கதறுகிறது.
எந்தத் தோட்டாவும், குண்டும், கத்திகளும் அகண்டாவை ஒன்றும் செய்ய முடியாது. இது தெரிந்த பிறகு மனித வில்லனாக இருந்தால் என்ன, தீய சக்தியாக இருந்தால் என்ன, துவம்சம் செய்து விடுகிறார். ஒரு காட்சியில் வில்லனின் அடியாளைத் தனது உள்ளங்கையில் தலைகீழாக நிற்க வைத்து மகளுக்குத் திருஷ்டி சுற்றிப் போடுகிறார். அரங்கில் ஜெய் பாலையா என்று கைதட்டி ரசிக்கிறார்கள். அதுவும் ஐந்து அகண்டாக்கள் வரும் கடைசிக் காட்சியில் மீதி அகண்டா 3 இல் பாருங்கள் என்று போடப்போகிறார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்தேன்.
என்ன தான் நக்கலடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் இவர்கள் இப்படித் தான் படம் எடுக்கப் போகிறார்கள் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் படம் எடுப்பது குறிப்பிட்ட ரசிகர்களை மட்டும் மனத்தில் கொண்டு. தெரிந்தே போய்ப் பார்த்து விட்டு நக்கலடிப்பது ஒரு சுகம். ஒரு கட்டத்தில் அதையும் நம்மை மீறி ரசிக்க வைத்து விடுவது தான் இந்தக் காம்போவின் மேஜிக். நோ லாஜிக். ஒன்லி மேஜிக் என்பது தான் இவர்களது தாரக மந்திரம். இதுவும் அப்படித் தான். ஆனால் மேஜிக் கொஞ்சம் குறைவு.
இரண்டு காட்சிகளில் ஒய் ஜி மகேந்திரன். ஒரு பாடலுக்கு ஒரு சண்டைக்காட்சிக்கு சம்யுக்தா. ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கும் ஒரு பாடலுக்கும் மட்டுமே இன்னொரு பாலகிருஷ்ணா பாத்திரம். பூர்ணா, சரத் லோகிதாஸ்தவா, விஜி சந்திரசேகர் இன்னும் பலர்.
தமன் இரைச்சலில் (இசையில்) காதுகளில் ங்கொய் என்று படம் முடிந்து பல நிமிடங்கள் ஓர் உணர்வு இருக்கிறது. வாசித்துத் தள்ளியிருக்கிறார் மனிதர். சில இடங்களில் ஓகே என்றாலும் பல இடங்களில் ஐயோ.
நான் அகண்டா பார்த்தேன் எனக்குப் பிடித்திருந்தது. பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் ரசிக்கவும் வைத்தது. இதில் சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் எப்பா சாமி எப்படிரா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க என்று தோன்றியது, படம் நல்லாருக்கா. போரடிக்கிறதா என்று கேட்டால் தெரியல. ஆனால் போரடிக்கல என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்த நூறு பேரில் ஒருவர் கூட இடையில் எழுந்து செல்லவில்லையே அதுவே உதாரணம்.
சுலபமான விமர்சனம் என்று சொன்னேன் இல்லையா. அது என்ன தெரியுமா.
வேறு வேலையிருந்தால் பாருங்கள். ஐந்நூறு ரூபாய் பணமும், மூன்று மணி நேரமும் மிச்சம்.