
ஒரு பொது இலக்கை அடைய, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்களோ, குழுக்களோ தற்காலிகமாக ஒன்றிணைந்து செயல்படுவதே கூட்டணி என்றழைக்கப்படுகிறது. அரசியலில்,தேர்தல் சமயங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தை, இப்பொழுது பலவாறாகப் பயன்பட ஆரம்பித்து விட்டது. அந்த விதத்தில் சின்னத்திரையிலும் அது தொற்றிக் கொண்டது - சங்கமம் என்ற பெயரில்!
ஏழு மணியிலிருந்து எட்டரை மணி வரை ஒளிபரப்பாகும் அன்னம், கயல், மருமகள் மூன்றையும் சங்கமிக்க வைத்து, ஒன்றரை மணிநேரச் சீரியலாகத் தற்காலிகமாக ஆக்கியுள்ளார்கள். இவர்களின் பொது இலக்கு, காலிங்க ராயரின் மூத்த மகளான கண்மணியை, அவள் காதலனுடன் சேர்த்து வைப்பது. அந்தக் காதலன் வேறு யாரோ அல்ல; அவளின் சொந்த அத்தை மகன்தான்! அவளுக்காகவே அவன் வளர்வதாய் முதலில் சொல்லி அவர்களிடையே ஆசையை வளர்த்து விட்டுத் திடீரென்று நடந்த எதிர்பாரா சம்பவங்களால், இரண்டு குடும்பங்களும் பகையாகிப் போகின்றன.
தன் மனைவியின் சாவுக்கு அந்தக் குடும்பமே காரணம் என்று கருதுவதால், அவர்களை முழுமையாக எதிர்க்கிறார் காலிங்கராயராகிய ஒய்.ஜி.எம். தந்தையை எதிர்த்துப் பேச முடியாத கண்மணி, தன் நெருங்கிய தோழியாகிய ஆதிரையை (மருமகள்) உதவிக்கு அழைக்கிறாள்! சங்கமத்தின் ஆரம்பம் இது.
பிரபலமான சமையற்குழுவைக் கொண்டு தயாரிக்கப்படும் தன் வீட்டுக் கல்யாண விருந்து, நல்லவிதமாகப் பேசப்பட வேண்டுமென்று விரும்பும் காலிங்க ராயர், அத்துறையில் ஜாம்பவனான கயலின் பெரியப்பாவான தர்மலிங்கத்தைத் தொடர்பு கொள்கிறார். தன் தம்பி குடும்பம் சீரழியத் தானும் காரணம் என்ற ஆற்றாமையில் உழலும் தர்மலிங்கம், அவர்களை முன்னேற்றிப் பார்ப்பது தன் கடமை என்று உணர்ந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.
காலிங்க ராயரின் ஆர்டர் பெரிது என்பதாலும், அது கிடைத்தால், புதிதாக கேடரிங்க் நடத்தும் தன் தம்பி மகன் மூர்த்திக்குப் (கயலின் அண்ணன்)பணமும், புகழும் கிடைக்க வழி வகுக்கும் என்பதாலும், அந்த ஆர்டரை அவர்களுக்கு வழங்குகிறார்-தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி. சமையலுக்காக, கயல் குடும்பத்துடன் அங்கு வருகிறார்-சங்கமத்தின் அடுத்த நிலை இது.
அன்னத்தின் தாய்மாமா சண்முகம் வாத்தியார் காலிங்கராயரின் நெருங்கிய உறவினர் என்பதால், அவரும் குடும்பத்துடன் வந்து சங்கமம் ஆகி விடுகிறார். அன்னம் அவரின் மருமகள் அல்லவா?மங்களூர் எக்ஸ்பிரசில் சென்னையில் ஏறியதிலிருந்தே, விறுவிறுப்பு ஆரம்பித்து விடுகிறது. எழிலுக்கும் பிரபுவுக்கும் சண்டை. பயணத் தூக்கத்தில் கனவு கண்டு, அது அப்படியே நடக்கப்போவதாக எச்சரிக்கும் கணவனும், அவரைத் தூங்க விடாமல் செய்யும் மனைவியுமாக ஓர் ஆச்சரிய கப்பிள்!
இதற்கிடையே சமோசா விற்பனை செய்வதாகக் காட்டிக் கொண்டு, தான் விரும்பா விட்டாலும், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, பாம்பே குணாவின் கைப்பாவையாகச் செயல்படும் சண்முக வாத்தியாரின் சின்ன மகன்-கார்த்தி அன்னத்தின் கணவன்!
குறிப்பிட்ட இடத்தில் குண்டை வைப்பதும், மனம் மாறி எடுப்பதும், பின்னர் குண்டு இருந்த சமோசாத் தூக்கு கை மாறுவதும், வைத்த இடத்தில் குண்டு இல்லாததால் தடுமாறுவதும் என்று ஒரு த்ரில், ஓடும் ரயிலின் வேகத்தையும் தாண்டி, ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணி ஒருவருக்குத் திடீரென பிரசவ வலி வந்து அவதிப்பட, நர்சான கயலும், மற்றவர்களும் சேர்ந்து, முயன்று பிரசவம் பார்த்து பிறந்த உயிரையும், பெற்ற உயிரையும் காப்பாற்றி விடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க,பெண் பிள்ளைகளைக் கடத்தும் ஒரு கும்பலும் அந்த ரயிலில், கடத்தப்பட்ட சிறுமிகளுடன் பயணிக்க, அக்குழுவின் தலைவன் காவல் துறை இன்ஸ்பெக்டராக நடிக்கிறான்.
அதே கம்பார்ட்மெண்டில் கண்மணியின் காதலனும் ஏறியிருக்க, அவனைக் கண்மணியின் அண்ணனால் ஏவப்பட்ட ஆட்கள் கொலை செய்ய வர, எழிலும் பிரபுவும் அவனைக் காப்பாற்றுகிறார்கள். சிறு படகில் கடல் நடுவே அமர்ந்து பார்த்தால் சுற்றிலும் கடலே தெரிவது போல, ஒரே த்ரில்தான் நாலா புறமும்!
எக்ஸ்பிரஸ் ஈரோட்டை நெருங்குகையில், சண்முகம் வாத்தியாரின் குடும்பம் குணாவிடமிருந்து தப்பித்து விட்டதாகச் செய்திவர, குண்டைக் கண்டு பிடிக்க முடியாமல் தவித்து அன்னத்தின் கணவன், அனைவரையும் ரயிலை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொள்கிறான் -பொது அறிவிப்பு மைக் மூலம். அதற்கு முன்னரே கயலும், ஆதிரையும் அந்தக் கடத்தல் கும்பலை அடித்து பாத்ரூமில் தள்ளித் தாளிட்டு விட்டு, கடத்தப்பட்ட சிறுமிகளையும் காப்பாற்றி விடுகின்றனர். அதிகாரிகளின் உதவியுடன் அந்த கோச் மட்டும் தனிமைப்படுத்தப்பட, குண்டும் வெடிக்கிறது. கடத்தல் கும்பல் வெடித்த குண்டுடன் பரலோகம் செல்கிறது.
திருமண வீட்டிலும் ஏகப்பட்ட கலாட்டாக்கள். கண்மணியின் அண்ணன் அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க, தேங்காய் மூட்டையில் காதலன் தப்பிக்க, தப்பிக்க உதவி செய்ததற்காகக் கயலும், ஆதிரையும் அண்ணனால் வெறுக்கப்படுகின்றனர்.
ஸ்பெஷல் ஸ்வீட் செய்து காலிங்க ராயருக்குக் கண்மணி கொடுக்க, அதில் பெரியம்மா மருந்து கலக்க, அந்த ஸ்வீட்டில் இன்னொருவரும் பாய்சன் கலக்கவென்று, பதை பதைப்புடன் கதை நகர்கையில், ஸ்வீட்டைச் சாப்பிட்ட காலிங்கராயர் ரத்த வாந்தி எடுத்து, ஐசியூவில் அனுமதிக்கப்படுகிறார்.
கயல் குடும்பத்தாரை வீட்டிலேயே பிணைக்கைதிகளாக்க, காலிங்கராயர் பிழைத்து, இல்லம் திரும்புகிறார். கயல் குடும்பத்தார் கிளம்ப எத்தணிக்க, சிறுவர்கள் விளையாட்டு வீடியோ மூலம் உண்மை உடைபட, பெரியம்மா கைது செய்யப்படுகிறார். காதலனை ரயிலில் தப்ப விட்ட கொலையாளிகள் வீட்டுக்குள்ளேயே வந்து அவனைக் கொல்ல முயல்கையில், எழில் தருணத்தில் காப்பாற்றி விட, பிரபுவும் சேர்ந்து அந்தக் கும்பலைக் கட்டி வைக்கின்றனர்.
சங்கமித்த நாயகிகள் மூவரும் (அன்னம்-கயல்-ஆதிரை) காலிங்க ராயரிடம் கண்மணியின் காதலை நிறைவேற்றி வைக்க எவ்வளவோ மன்றாடியும், அவர் பிடிவாதமாகத் தான் பார்த்த மாப்பிள்ளையுடன் மட்டுமே திருமணம் என்கிறார். விடுவார்களா நம் நாயகிகள்? மேலும் பல டெக்னிக்குகளைக் கையாள்வார்கள்தானே!
கண்மணியோடு சங்கமமாகப் போவது காதலனா?காலிங்கராயர் பார்த்த மாப்பிள்ளையா? விரைவில் தெரிந்து விடும் முடிவு!