
திரைத்துறையின் உண்மைக் கதாநாயகன், அக்காலம், இக்காலம், ஏன்? எக்காலத்திலுமே காதல்தான்! அதனை மையமாகக் கொண்டே பெரும் சதவீத அளவிலான படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. மையக் கருத்தாக இல்லாது போனாலும் துணைக் கருத்தாகவாவது அது ஜொலித்துக் கொண்டிருக்கும். உயிரோட்டத்தை உலகில் நிலவச் செய்து வருவது காதல்தானே!
சின்னத்திரை மட்டும் விதிவிலக்கா என்ன? காதலின் பல பரிமாணங்களையும் பவித்திர பாணியில், அது பகிரங்கப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக, ’மூன்று முடிச்சு’ காதலைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. நவராத்திரி நேரத்தில், அம்மைக்கு ஆளாகும் நந்தினி, வீட்டிலுள்ள மற்றவர்களின் ஆசாரக் குறைவு காரணமாக சாவின் எல்லைக்கே சென்று விடுகிறாள். வாழையிலைப் படுக்கையில் போடப்பட்டு, ’இப்பொழுதோ, அப்பொழுதோ’ என்று நேரம் கணக்கிடப்படும் சந்தர்ப்பத்தில், சூர்யாவின் தந்தை மிகவும் வருந்தி, தனக்குப் பரிச்சயமான மதகுருவை வீட்டிற்கு அழைக்கிறார்.
அவர் வந்து அம்மைக்கு ஆளான நாயகியைப் பார்த்து விட்டு, ஓர் உபாயத்தைக் கூறுகிறார். ’பயபக்தியுடன் வீட்டில் சுத்தபத்தம் பாதுகாக்கப்படுவதுடன், நந்தினியின் கணவனான நாயகன் சூர்யா ஆலய வாசலில் பிச்சை எடுத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு 11 சாமியார்களுக்குப் பகல் உணவு அளிக்க வேண்டும்’ என்று ஆலோசனை கூறுகிறார்!
தன் மகனைப் பிச்சைக்காரனாகப் பார்ப்பதைக் கனவிலுங்கூட ஏற்றுக் கொள்ள முடியாதே என்று அவர் அல்லல்படுகிறார். ஆனால் குருவின் ஆலோசனையை அப்படியே நிறைவேற்றத் தான் தயார் என்று கூறியபடியே, நண்பனுடன் காரில் வந்து இறங்கி, பிச்சைக் காரர்களின் நடுவில் அமர்ந்து பிச்சை கேட்கிறார் சூர்யா! தன் காதல் மனைவியைக் காப்பாற்றுவதே தன் தலையாய கடமை என்றும், அதற்காக எதையும் விட்டுக்கொடுப்பதே முறை என்றும் எண்ணுகிறார்.
கோடீஸ்வரரான அவர் தோற்றத்தைப் பார்த்த சிலர், அவரிடம் உழைத்துச் சம்பாதிக்க வேண்டியதுதானே என்று சண்டை போட, சிலரோ மற்ற பிச்சைக் காரர்களுக்குக் காசைப்போட்டு விட்டு, அவரை ஒதுக்கி விடுகின்றனர். இதனைக் கண்ட சக பிச்சைக்காரர்கள் அவர் ஆடைகள் மற்றும் தோற்றத்தை மாற்றி, அவரைப் பிச்சையெடுக்க வைக்கின்றனர்.
இடையே, அவரின் பணக்கார, படாடோபத் தாய், தன் இரு அகந்தை கொண்ட பெண்கள் மற்றும் மருமகனுடன் வந்து, பிரச்னைகள் செய்கிறார். எல்லாவற்றையுங் கடந்து, சாப்பாட்டு நேரம் நெருங்கி விட்டதால் 11 பேருக்குச் சாப்பாடு வழங்க பிச்சையில் வந்ததை அப்படியே சுருட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு ஓடிப்போய் எண்ண, 20 ரூபாய் குறைவாக இருப்பதாகக் கூறி கேஷியர் உணவு வழங்க மறுக்கிறார். அவரிடமே 20 ரூபாய் பிச்சை கேட்க, அவர் கோபத்தில் வெடிக்கிறார். அங்கே… இங்கே… என்று ஓடியாடிக் கேட்டாலும், ஒருவரும் தரவில்லை.
இறுதியாகக் கண்பார்வையற்ற பிச்சைக்காரியே, அவளிடம் கேட்காததற்காகக் கோபித்து, உரிமையுடன் அதனைத் தர, ஓர் உயர்தரப் பாசப்போராட்டம் நம் கண்முன்னே விரிகிறது! அவள் தந்த பணத்துடன் 11 சாமியார்களுக்கு வயிறார உணவு படைத்து விட்டுத் திரும்புகிறான் நாயகன்!
யார் என்ன சொன்னாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஃபாரின் சரக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக் குடிக்கும் கோடீஸ்வர சூர்யா, அவளுக்காக அதனையும் விலக்கி விடுவதும், நான்வெஜ் நினைவைக் கூட வழித்துப் போட்டு விட்டு அவளைக் காப்பாற்றத் துடிப்பதும், மூன்று முடிச்சின் முக்கியத் தருணங்கள்!
இக்கால இளஞ்ஜோடிகள், நந்தினி-சூர்யா போல் வாழ முயல வேண்டும். அந்த வீட்டில் அவளுக்கு இழைக்கப்படும் அத்தனை அநீதிகளையும் சிரித்த முகத்துடன் அவள் ஏற்பதாலேயே, சூர்யாவின் மனச்சிம்மாசனத்தில் அவள் மகாராணியாய் வீற்றிருக்கிறாள்! வீட்டிலிருக்கும் மற்றப் பெண்கள் அனைவருமே அவளை வெறுத்து ஒதுக்கி, உதாசீனப்படுத்தி, அவள் தன்மானத்துடன் உரசி வெறுப்பேற்றினாலும், சமுத்திரமாக அனைத்தையும் அவள் தாங்கிக் கொள்கிறாள்! ’பொறுத்தார் பூமியாள்வார்!’ என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறாள்! உண்மைதான்!இனிதான் நந்தினியின் உயர்ந்த குணங்களுக்கான நல்லகாலம் ஆரம்பிக்கப் போவதாகத் தெரிகிறது; ஆரம்பிக்கப்பட வேண்டும். நல்லவர்களுக்கு நல்லது நடப்பதைக் காட்டினால்தான், நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் பதிந்து, அவர்களை நல்லது செய்யத் தூண்டும்.
வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ… பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல் நல்ல கருத்துக்களை ரசிகர்கள் மனதில் பதிய வைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பு நமது இயக்குனர்களுக்கு உண்டு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் அதனைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் திருப்தியே!மூன்று முடிச்சு சீரியல் அதற்கு நல் உதாரணமாகத் திகழ்வதில் ஆனந்தமே!