விமர்சனம்: Masthishka Maranam (2026) - மலையாளம் - சயின்ஸ் பிக்சன் க்ரைம் திரில்லர்!

Masthishka Maranam
Masthishka Maranam
Published on
ரேட்டிங்(3 / 5)

மூளையின் மரணம் என்பது தான் டைட்டிலுக்கான அர்த்தம். படத்தின் முழு டைட்டில் Masthishka Maranam (A Frankenbiting of Simon's Memories)

27/02/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்புப்பெற்ற இந்தப்படம், இப்போது 27/03/2026 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங்க் இல்லை. ஆங்கில சப்டைட்டில் உண்டு.

விஞ்ஞான முன்னேற்றத்தால் கிடைக்கும் நவீனக்கண்டுபிடிப்புகளை கிண்டல் செய்யும் சட்டயர் பிலிம் இது. முகமது பின் துக்ளக் படத்தில் அந்தக்காலத்திலேயே அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று துக்ளக் சோ சட்டயர் பிலிம் எடுத்தாரே அது போல இது ஒரு சயின்ஸ் பிக்சன் சட்டயர் பிலிம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2041. கதைக்களம் இப்போது கொச்சின் எனவும் எர்ணாக்குளம் எனவும் அழைக்கப்படுகிற 2041ல் நியோ கொச்சி (கற்பனை நகரம்).

நாயகன் திருமணம் ஆனவன். ஒரு பெண் குழந்தை பிறந்து சில வருடங்களில் ஒரு விபத்தில் இறந்து விட்டது. அந்த சோகம் தாங்காமல், அந்த நினைவை அழிக்க முடியாமல், குழந்தையை மறக்க முடியாமல் தவிக்கிறான்.

நாயகனின் மனைவி நாயகனைப் பிரிந்து வாழ்கிறாள். குழந்தை சம்பந்தப்பட்ட யாருடனும் தொடர்பில் இருந்தால் சோக நினைவு வரும் என்பதற்காகவே இந்த பிரேக்கப். பிரிந்து வாழ்ந்தாலும் இருவரும் நண்பர்கள் ஆகத்தான் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறார்கள்.

நாயகன் நம்ம ஊர் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா போல அந்த ஊர் லேடி சூப்பர் ஸ்டார் பிரிடா வின் தீவிரமான ரசிகன். அந்த நடிகை தான் படத்தின் நாயகி. ஆஸ்கார் அவார்டு வழங்கும் விழாவில் விருதில் தன் படம் இல்லை என்பதற்காக விருதே வேண்டாம் என்று மறுத்தவர் தான் நாயகி.

மேற்கொண்டு கதைக்குப்போகும் முன் ஒரு சின்ன விளக்கம். வெளிநாடு இதுவரை போகாதவர் ஏற்கனவே வெளிநாடு போனவரின் மெமரியை விலைக்கு வாங்கி ஆக்சஸ் செய்தால் அவருக்கு வெளிநாடு போன அனுபவம் கிடைக்கும். சரக்கு அடிக்காத ஆள் சரக்கு அடித்த ஆளின் மெமரியை விலைக்கு வாங்கி ஆக்சஸ் செய்தால் அந்த போதை அனுபவம் கிடைக்கும்.

2041ல் இது போல அடுத்தவர்களின் மெமரீஸ் விற்பனைக்கு உண்டு. நாயகனின் நண்பன் மூலம் நாயகனுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அதாவது நாயகனின் அபிமான நடிகையின் அந்தரங்க வீடியோ க்ளிப் லீக் ஆகி இருப்பதாகவும் அந்த மெமரீஸ் தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறான்.

அதாவது நாயகி ஆன நடிகை தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த மெமரீஸ் இருக்கிறது. அந்த மெமரீசை ஆக்சஸ் செய்தால் நாயகன் அந்த நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அனுபவம் கிடைக்கும்.

நாயகனும் அந்த மெமரீசை ஆக்சஸ் செய்கிறான். காதல் அனுபவம் கிடைக்கும் என ஆவலாக இருந்தவனுக்கு அதிர்ச்சி.

நாயகி நாயகனிடம். சிசிடிவி. கேமராக்களை பெட்ரோல் ஊற்றி எரிக்கச்சொல்கிறாள். காரணம் நாயகியைத்தவறான கண்ணோட்டத்தில் நெருங்கிய ஒரு தயாரிப்பாளரை நாயகி கொலை செய்து விட்டாள். அந்தக் கொலையை இப்போது மறைக்க வெண்டும். அதற்கு நாயகனிடம் உதவி கேட்கிறாள்.

இதற்குப்பின் நாயகன் எடுத்த முடிவு என்ன? நாயகி கொலைப்பழியில் இருந்து மீண்டாளா? என்பது மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக நிரஞச் மணியன் பிள்ளை ராஜூ என்பவர் நடித்திருக்கிறார். சுமார் ரக நடிப்புத்தான்.

நாயகி ஆக நடிகை கேரக்டரில் ரஜிசா விஜயன் பட்டாசைக் கிளப்பும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது பிரமாதமான நடிப்புக்கு முன் நாயகன் நடிப்பு உட்பட யாருடைய நடிப்பும் எடுபடவில்லை என்பது தான் நிஜம்.

நாயகனின் மனைவி ஆக திவ்யா பிரபா வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வருகிறார். நல்ல அழகு. பாதித்தலை மொட்டைத்தலை, மீதித்தலை கர்லிங்க் ஹேர் என அவரது ஹேர் ஸ்டைலைப் பார்க்கும்போது ஜெய் ஹிந்த் படத்தில் கவுண்டமணி செந்திலைப்பார்த்து கிண்டல் செய்வது தான் நினைவு வருகிறது. (இயக்குநரே நாகரீக வளர்ச்சியை கிண்டல் செய்யும் தொனியில் தான் அந்தக் காட்சியை வடிவமைத்து இருக்கிறார்.)

படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

வர்கியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை அருமை.

ஒளிப்பதிவு பிரயாக் முகுந்தன் அட்டகாசம். எதிர்கால நகரத்தை பிரம்மாண்டமாகக் காட்டி இருக்கிறார். இரு நாயகிகளை அழகாகக்காட்டி இருக்கிறார்.

கிருஷாந்த்தின் எடிட்டிங்கில் படம் 142 நிமிடங்கள் ஓடுகிறது. அவரே கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
திரைவிமர்சனம்: மர்தானி 3 (Mardaani 3 - 2026) @ நெட்பிளிக்ஸ்..!
Masthishka Maranam

சபாஷ் டைரக்டர்

  • நாயகன் தன் குழந்தை இறப்பு சோகத்தை மறைக்க Near Death Experience உணர பிரைவேட் மெமரி வாங்கி ஆக்சஸ் செய்து வீடியோ கேம் போல் விளையாடி டைம் பாஸ் செய்கிறார் என்பதை ஓப்பனிங்க் சீனிலேயே காட்டி இது எந்த மாதிரி கதை என்பதை ஆடியன்சுக்கு முன்கூட்டியே உணர்த்தியது அருமை.

  • எத்தனை வருடங்கள் ஆனாலும், விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஏழை, பணக்காரன் இரு தரப்புக்கும் இடையே ஆன கோடு விலகாது என்பதை சொன்ன விதம் அழகு.

  • மற்றவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பது எல்லா வயதினரிடமும் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹிட்டுக்கு அது தான் காரணம். அதன் அப்டேட்டட் வெர்சன் தான் அடுத்தவர் மெமரியை ஆக்சஸ் செய்வது என்பதாகக்காட்டி இருப்பது அசத்தல்.

  • நாயகி ரஜிசா விஜயனின் அட்டகாசமான நடிப்பு, சி.ஜி ஒர்க்ஸ், வி.எப்.எஸ் ஒர்க்ஸ் உட்பட அனைத்து டெக்னிக்கல் அம்சங்களும் அருமை.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: நீ Forever - படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன?
Masthishka Maranam

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • நாயகனின் மனைவி நாயகனைப் பிரிந்து போக வலுவான காரணமே இல்லை. குழந்தை இறந்த சோகத்தை மறக்கக் கணவனைப் பிரிவது புதுசா இருக்கிறது. ஆனால் அடிக்கடி நண்பர்கள் போல் சந்திக்கும்போது குழந்தை நினைவு வராதா?

  • படத்தில் ஏகப்பட்ட மாடர்ன் சயின்ஸ் டெக்னிக்கல் டெர்ம்ஸ். சராசரி ரசிகனுக்குப் புரிவது சிரமம். எம் சி ஏ படித்த அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்படி பல வசனங்கள் இருக்கின்றன.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சயின்ஸ் பிக்சன் படங்களைப் பார்ப்பவர்கள், இன்செப்சன் மாதிரி கிறிஸோபர் நோலன் படம் புரிந்தவர்கள் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com