
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி அதில் சிம்மாசனமிட்டு வெற்றித்தலைவனாக அமர்ந்திருப்பவர் ‘தல’ அஜித். அஜித்குமாரைப் பொறுத்தவரையில், சினிமாவில் உள்ள மற்ற பிரபலங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானவர். தனக்கு என்ன தோன்றுகிறதோ எதை பற்றியும் கவலைப்படாமல் அதை செய்யும் துணிச்சல் இவரிடம் மட்டுமே உண்டு. இவர், சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் பழக்க வழக்கங்களை தாண்டி இப்படி தான் நான் இருப்பேன் என தனக்கென தனி பாதையை வகுத்து அந்த வழியில் பயணித்து ஜெயித்தும் வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி' படம் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி வெளியானது.
அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து படத்தை இயக்க, பல முன்னனி இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்க, ஆனால் அவரோ தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு வரை புதிய படங்களில் ‘கமிட்' ஆகமாட்டேன் எனவும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
அந்த வகையில் சினிமா மட்டுமின்றி பந்தயங்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார், திரையுலகில் உச்சத்தில் இருந்த போதிலும் கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். 54 வயதில் கார் ரேசில் நுழைந்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து உலக நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருவதுடன் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்ட இவரது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி ஒருமுறை முதலிடத்தையும், இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும், அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் ரேசில் 3-வது இடத்தையும் பிடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை பொறித்து சர்வதேச தேச அளவில் இந்திய திரையுலகின் புகழை கொண்டு சென்றுள்ளார். அஜித்தின் இந்த செயலை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி, சமூக தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிப்பை தாண்டி, கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் தனது திறமையாலும், கடின உழைப்பாலும் முத்திரை பதித்து, உலக மேடைகளில் நமது நாட்டின் மூவர்ணக் கொடியை தூக்கி பிடித்து, நமையெல்லாம் தொடர்ந்து பெருமைப் படுத்திக்கொண்டிருந்த அஜித், தற்போது Indian Film Industry என்ற லோகோவை தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் பொறித்து சர்வதேச தேச அளவில் இந்திய திரையுலகின் புகழை கொண்டு சென்றுள்ளார்.