

ஒரு சில சீரியல்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து வரிந்து கட்டிக் கொண்டு வந்தாலும், பெண்ணாதிக்கமும் இங்கு கோலோச்சுவதை மறுக்க முடியாது!
ஒரு சின்ன முரண்பாடு என்னவென்றால், ஆணாதிக்கம் என்பது பெண்களை அடிமைப் படுத்துவதாக அமையும் அதே நேரத்தில் பெண்ணாதிக்கம் என்பது ஆண்களோடு சேர்த்துப் பெண்களையும் வதைப்பதாகவே உள்ளது.
உயர்குடிப் பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவிகள் வகித்தாலும், தங்கள் கௌரவத்திற்காகவும், லேடீஸ் சர்க்கிளில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவும், தங்கள் மகன்களுக்குப் பெரிய இடங்களில் பெண் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ளாத அவர்களின் மகன்களோ, செல்வம் பற்றிய கவலை இல்லாமல் காதலித்து விடுகிறார்கள்-ஏழைப் பெண்களை!காதலுக்குத்தான் கண்ணில்லையே! அதன் காரணமாகவே பல குடும்பங்களில் தாய்-மகன் ரிலேஷன்ஷிப்பில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது. 'மூன்று முடிச்சு' சீரியலை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
தாயின் மீது ஏற்பட்ட வெறுப்பால், மினிஸ்டர் பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தின்போது, யாரும் எதிர்பாராத விதமாக, தங்கள் வீட்டுத் தென்னந்தோப்பைக் கவனித்துக் கொண்டு அங்கேயே குடியிருக்கும் நந்தினியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் சூர்யா! ஐயா வீட்டுக்குக் கல்யாண வேலைகள் செய்ய வந்த அவளுக்கோ அதிர்ச்சி!சூர்யாவோ, தாய் சுந்தரவல்லியை வெறுப்பேற்றவே நந்தினி கழுத்தில் மாங்கல்ய நாணைப் பூட்டுகிறான். மற்றபடி அவளிடம் அவனுக்குப் பெரிய ஈர்ப்பெல்லாம் ஒன்றுமில்லை. அவளும் விரைவில் தன்னைச் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு அனுப்புமாறு நச்சரிக்கிறாள்.
சூர்யாவின் அப்பா, தன் மனைவி சுந்தரவல்லிக்கு எதிராக, நந்தினிக்கு ஆதரவளிக்கிறார். ஃபாரின் சரக்காகப் பார்த்துப் பார்த்துக் குடிக்கும் அவனைத் திருத்த உதவுமாறு நந்தினியிடம் வேண்டுகிறார். இதோ… அதோ என்று நாட்கள் நகர, நந்தினியின் பொறுமை மற்றும் அனைவரையும் அனுசரித்துப் போகும் குணத்தால் கவரப்படுகிறான் சூர்யா. மெல்ல அவள் மேல் ஒரு கரிசனம் ஏற்பட, அதுவே அவள் மீது காதலாக மலர்கிறது.
’உங்கள் தாயை வெறுப்பேற்ற என்னைப் பகடைக் காயாய் பயன்படுத்தாதீர்கள்!’ என்று அவள் பலமுறை கேட்டுக் கொண்டாலும், அதனை அவன் நிறுத்த வில்லையென்பதாலும், குடியை நிறுத்தாததாலும் அவன் மீது அவளுக்கு பற்று ஏற்படவில்லை. இருந்தாலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை விட்டுக் கொடுக்காத காரணத்தால் மனதின் ஓரத்தில் அவனுக்கு இடமளிக்கிறாள்!
இந்நிலையில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்புக்குச் செல்லும் அவளைக் காப்பாற்ற, சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி, அவன் கோயில் வாசலில் பிச்சையெடுத்து துறவிகளுக்கு உணவளிக்கிறான். அதனைக் கேள்விப்பட்ட நந்தினி உருகி, அவனை மனதில் தெய்வமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறாள். இருவரும் நெருக்கமாகிறார்கள்.
இந்நிலையில் அவள் குடும்பத்தைச் சென்னைக்கு வரவழைத்து தீபாவளியைக் கொண்டாட ஏற்பாடு செய்கிறான் சூர்யா! வந்தவர்கள் வரிசை கொடுத்துவிட்டுக் கிளம்ப ஆயத்தமாக, கட்டாயமாக அவர்களைத் தங்க வைக்கிறான். இவை எதையும் விரும்பாத சுந்தரவல்லியும் அவள் மகள்கள் இருவரும் நந்தினி குடுபத்தாருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.
வெடி கொளுத்துகையில், சூர்யாவின் அக்கா மாதவி, தன் கணவனுடன் ஒளிந்து நின்று, வெடிக்கட்டின் மீது தீயைக் கொளுத்திப்போட, அதில் சிக்கி கால்கள் இரண்டும் ஊன்ற முடியாத அளவுக்குப் புண்ணாகி, அல்லாடுகிறான் சூர்யா. அதனைக் கவனித்த நந்தினி, குடும்பத்தில் குழப்பம் வேண்டாம் என்பதற்காக, அதனைச் சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.
மருத்துவமனையில் நந்தினியின் அப்பாதான் அவ்வாறு தீயிட்டார் என்று மாதவி கொஞ்சமும் கூச்சமின்றி பொய் கூறுகிறாள். அந்தப் பொய்யைப் பொறுத்துக் கொள்ள முடியாத நந்தினி, ஓங்கி அறைகிறாள் மாதவியை! அதனைச் சற்றும் எதிர்பார்க்காத சுந்தரவல்லி ஷாக்காகி,கோபத்தின் உச்சத்துக்கே சென்று விடுகிறாள்.
இந்த நேரத்தில் கம்பனி விஷயமாக சூர்யாவின் தந்தை டெல்லி சென்று விட, சூர்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் சுந்தரவல்லி அன்ட் கோ, நந்தினி மற்றும் பணியாள் கல்யாணத்தையும் சூர்யாவைப் பார்க்கத் தடை விதிக்கிறார்கள். நந்தினியை வீட்டை விட்டே துரத்தவும் முயற்சிக்கிறார்கள். நந்தினி, கல்யாணம் செல்களையும் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
நான்கைந்து நாட்களாக எவ்வளவு முயன்றும் சூர்யாவை நந்தினியால் பார்க்க முடியவில்லை. என்னென்னவோ உபாயங்கள் செய்தும், எதுவும் பலனளிக்கவில்லை.
நந்தினி ஊருக்குப் போய் விட்டதாகச் சொல்லி அவனை நம்ப வைக்க முயல்கிறார்கள். அவனோ, இல்லையென்று கூறி, நினைவு வரும் நேரமெல்லாம் 'நந்தினி… நந்தினி' என்றே அலறுகிறான். சூர்யாவின் நண்பன் விவேக்கின் மனைவி விஜி சொன்னால் அவன் நம்புவான் என்று கணித்து, விவேக்கைப் போலீசில் சிக்க வைத்து, அவனை விடுவிக்க வேண்டுமென்றால் விஜி, நந்தினி ஊருக்குப் போய் விட்டதாகப் பொய் சொல்ல வேண்டுமென்கிறார்கள். நந்தினியே அவ்வாறு சொல்லுமாறு கேட்டுக் கொள்ள, வேறு வழியின்றி விஜி அவ்வாறே கூறுகிறாள்.
இந்நிலையில் எப்படியும் சூர்யாவைக் கண்ணில் நீ காட்ட வேண்டுமென்று நந்தினி கருப்ப சாமியிடம் ஆழ்ந்து பிரார்த்திக்க, சுந்தரவல்லியோ நந்தினியை ரகசியமாக ஏர்வாடிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விடுகிறாள். சூர்யாவோ நந்தினியைத் தேடி படிகளில் உருண்டு வர, கால்களில் ரத்தம் பீறிடுகிறது. நந்தினியை இழுத்துப் போய் காரில் ஏற்ற முயல்கையில், சூர்யாவின் குரல் கேட்டு, சுந்தரவல்லியை உதறித் தள்ளி விட்டு ஓடி வந்து சூர்யாவுடன் இணைகிறாள் நந்தினி!
நடந்த எதுவும் சூர்யாவுக்குத் தெரிய வேண்டாமென்று நந்தினி மறைக்க, கல்யாணமோ, ஒவ்வொன்றாக நிதானமாக அவிழ்த்து விடுகிறார்! அதனைக்கேட்ட சூர்யா, மாதவியைக் கூப்பிட்டு வலுவாகக் கன்னத்தில் ஓர் அறை விடுகிறான்.
சுந்தரவல்லி அன்ட் கோ அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்!
நடந்தது ஒவ்வொன்றாக அவிழ அவிழ, தரமான காட்சிகள் நடைபெறுமென்றே தோன்றுகிறது.
முந்தைய ஜெனரேஷனான சுந்தரவல்லி கௌரவம் பார்ப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அவர் மகள்களும் அதே பாணியைப் பின்பற்றுவதைக் காண்கையில், நாடு முன்னேற ஆண்டுகள் பலவாகுமோ என்ற பயம் வருகிறது.
நந்தினியின் நிதானமும், பொறுமையும் நம்மை வியக்க வைக்கின்றன! சூர்யாவின் ஆக்ரோஷம் ஆனந்தப்பட வைக்கிறது!
முடிச்சுகள் போடுவதும், அவிழ்ப்பதும் தொடரட்டும்!