
வாரந்தோறும் பல படங்கள் ஓடிடியில் வெளியானாலும் சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சசிக்குமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தேவயானியின் ‘நிழற்குடை’ ஆகிய இரு படங்களும் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படங்கள் எப்போ, எந்ந ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி:
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிக்குமார் நடிப்பில் உருவான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரன் உள்ளிட்ட ஈர்க்கக்கூடிய முன்னணி நடிகர்களைக் கொண்ட இந்தப் படத்தில், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தனித்துவமான நடிப்பின் மூலம் கதைக்கு ஆழத்தையும் வசீகரத்தையும் சேர்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் அதன் உணர்ச்சிபூர்வமான கதைசொல்லல், கூர்மையான நகைச்சுவை மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் வெறும் 25 நாட்களில் ரூ.58 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், 2025-ம் ஆண்டின் எதிர்பாராத வெற்றிப் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. யதார்த்தம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி ஆழம் ஆகியவற்றின் கலவையானது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வந்தது. ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா ஆகியோரை தொடர்ந்து நடிகர் நானியும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.
மே 28 அல்லது மே 31 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அதன் டிஜிட்டல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையாளர்கள் அதன் OTT வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், கிறிஸ்டோபர் கனகராஜ் ஒரு ட்வீட் மூலம் உறுதிப்படுத்தினார். அவர் ஜூன் 6 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகும் என்று ட்வீட் செய்துள்ளார்.
நிழற்குடை:
கல்லூரி வாசல் திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், அஜித்துடன் சேர்ந்து நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமான நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தார்.
90 காலகட்டத்தில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, அஜித், பார்த்திபன் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் பின்னர் ரீஎன்டரி கொடுத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவயானி நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் தேவயானி தயாரித்து இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நடிகை தேவயானியின் நடிப்பில் வெளியான படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை தர்ஷன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கடந்த மே 9-ந் தேதி வெளியான இந்த படத்தில் தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில், குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்தாத இந்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வை இந்த கதை மூலம் விதையாக போட்டுள்ளார் இயக்குனர். குருதேவ் ஒளிப்பதிவும், நரேன் பாலகுமாரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக உருவாகி உள்ள இப்படம் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.