
So sad என்ன மாதிரி ட்விஸ்ட் இல்ல என்று பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன்... ஒரு கல்லூரிப் பெண். சொன்னதோடு அல்லாமல் இலேசான அழுகையோடு கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இதுவும் நிஜமே.
'இன்றைய இளைஞர்கள் ரத்தம், வன்முறை, காதல், இரட்டை அர்த்த நகைச்சுவை இது போன்றுதான் விரும்புகிறார்கள். அதனால் தான் இந்தக்கால இயக்குனர்களும் அதே போல படத்தைத் தர விரும்புகிறார்கள்' என்று ஒரு விமர்சனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது இல்லை என்று மீண்டும் நிரூபித்து இருக்கும் படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இதை இயக்கியவர் ஓர் 24 வயது இளைஞர். அதுவும் இது தான் அவருக்கு முதல் படம்.
ராதா மோகன், விக்ரமன் பாணிப் படங்களுக்கு என்றுமே ஓர் ஆதரவு உண்டு. அவர்கள் உலகங்களில் அனைவரும் நல்லவர்களே. பாத்திரங்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களைக் கொடுப்பதில் இவர்கள் தவறவே இல்லை. டூரிஸ்ட் ஃபேமிலி பார்க்கும் பொழுது இவர்கள் இருவரும் நினைவிற்கு வந்தால் அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்.
பிழைப்புக்காக இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் சசிகுமார் குடும்பம். சிம்ரன் அவர் மனைவி. இரண்டு மகன்கள். பெரியவனுக்கும் அவரது அப்பாவிற்கும் ஒரு பிணக்கு. இருவரும் பேசுவதில்லை. சிறியவன் துடுக்கு. இவர்களை ஒரு காலனியில் கொண்டு வந்து தங்க வைக்கிறார் யோகிபாபு. அந்தக் காலனியில் யாரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை. எம் எஸ் பாஸ்கர், இளங்கோ குமாரவேல், குடிகார இளைஞனாக வரும் அபிஷன் ஜீவிந்த் (இவர் இந்தப் படத்தின் இயக்குநரும் கூட), பகவதி பெருமாள், காந்தி (விகடன் சினிமா நிருபர்) என வித்தியாசமான ஆனால் இயல்பான மனிதர்கள்.
நல்லவராக இருந்தாலும் இலங்கைத் தமிழர்களாக இருப்பதால் ஒருவிதமான பயத்துடனும் பதற்றத்துடனும் இருக்கிறது இந்தக் குடும்பம். அந்தக் குடியிருப்பின் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுள் ஒருவராகிறார் சசிகுமார்.
அவர்கள் தமிழகத்திற்கு வந்த நேரம் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறது. அதற்கு இந்தக் குடும்பம் தான் காரணம் என்று சந்தர்ப்பவசத்தில் சாட்சியைக் கொண்டு இவர்களைத் தேடி அலைகிறது போலிஸ். அவர்களை அந்த நேரத்தில் ஒன்றும் செய்யாமல் அனுப்பிய காவலர் ரமேஷ் திலக் மீது அழுத்தம் கூடவே அவர்களைத் தேடி சென்னை வருகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பது தான் படம்.
குடும்பத் தலைவர் தர்மதாசாக சசிகுமார் கச்சிதம். மனைவி மக்களைக் காக்கப் பதறுவது, மகனிடம் பேசச் சொல்லி வருத்தப் படுவது, சிறிய மகனின் குறும்புகளைத் தடுக்க முடியாமல் தவிப்பது என யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மிகவும் அதிகமாக நடிக்கக் கூடிய மெலோ டிராமா காட்சிகளை இயக்குநர் வைக்கவில்லை. எம் எஸ் பாஸ்கருடன் இவர் நடிக்கும் காட்சிகள் சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சி. பக்கத்து வீட்டுக் கணவன் மனைவியாக இளங்கோ குமாரவேல் தம்பதியர்.
காதல் தோல்வி தான் மகனின் கோபம் என்று சசிகுமார் நினைத்திருக்க, அவனின் உண்மையான மனநிலையை அவர் உணரும் காட்சி நெகிழ்ச்சி. அந்தப் பதினைந்து நிமிடக் காட்சி தான் படத்தின் ஜீவ நாடி. எங்கே அழ வைத்து விடுவார்களோ என்று நினைக்கும் போதே படக்கென்று சிரிக்க வைக்கிறார்கள். சிரிக்க ஆரம்பிக்கும் போதே அடுத்த நெகிழ்வைக் கொடுக்கிறார்கள். இது போன்ற ட்ரீட்மென்ட் தான் படம் முழுதும்.
உங்களை நெகிழ வைப்பேன். கண்கலங்க வைப்பேன். தேம்பி அழ வைக்க மாட்டேன் என்று இயங்கியிருக்கிறது இந்தக் குழு. காட்சிகளோடு ஒட்டி வரும் நகைச்சுவை, வசனங்கள், பாடல்கள் எல்லாம் ஒரு நல்ல படம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன. பெரிதாகத் திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் எல்லாம் இல்லை. சண்டைக்காட்சிகள் இல்லை. அவல நகைச்சுவை இலை. ஆபாச வசனங்கள் இல்லை. டூயட் பாடல்கள் இல்லை. இத்தனை இல்லை இருந்தாலும், நல்ல கதை என்ற ஒன்று இருக்கிறது. குழப்பங்கள் இல்லாத திரைக்கதை இயைந்து வருகிறது. அது தான் இந்தப் படத்தின் வெற்றி.
படத்தின் கிளைமாக்சில் 'இப்படியெல்லாம் நடக்குமா? முன் பின் தெரியாத ஒரு குடும்பத்திற்காக ஒரு காலனியே அப்படி நடந்து கொள்ளுமா?' என்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட வேண்டும். அன்பும் பாசமும் மனிதமும் என்றும் ஜெயிக்கும். அனைவரும் நல்லவர்களே. சூழ்நிலைகள் மட்டுமே அவர்களை மாற்றுகின்றன. முன் பின் அறியாத ஒருவருக்கு நாம் செய்யும் ஓர் உதவி எப்படி அவர்கள் வாழ்க்கையே மாறும் ஒரு விஷயமாக இருக்கிறது என்பதை அந்தக் குடிகார இளைஞர் பாத்திரத்தில் உணர்த்தி விட்டார் இயக்குநர். அவரே அந்தப் பாத்திரத்தில் நடித்து இருப்பதால் ஓர் இயல்புத் தன்மை கூடுதலாகவும் தெரிகிறது.
ஷான் ரோல்டான் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் அடுத்தடுத்து வருவது போலத் தோன்றுகிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கண்ணீரைக் கொண்டு வந்தே தருவேன் என்ற வைராக்கியத்தோடு சில பாடல்களும் பின்னணி இசையும் இருக்கிறது.
'இந்த மாதிரிப் படங்களுக்கு வந்துவிட்டோமே' என்று கண்ணீர் சிந்துவதை விட நெஞ்சைத் தொடும் இது போன்ற யதார்த்தப் படங்களைப் பார்க்கும் போது சில துளிகள் கண்ணீர் விடலாம் தப்பில்லை.
கடைசியில் ரமேஷ் திலக் சொல்வது போல், 'ஒரு காலனியே உன் பின்னால் நிற்க நீ ஏன் உன்னை அகதி என்று சொல்லிக் கொள்கிறாய். நீயும் அவர்களில் ஒருவன் தான்' என்ற வசனம் தான் இந்த இரண்டு மணி நேரப்படத்தின் ஒரு வரிக்கதை.
இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான் இயக்குநர்களுக்கும் ஓர் உத்வேகமாக இருக்கும். இல்லாவிட்டால் நீங்கள் கேட்டீர்கள் நாங்கள் கொடுக்கிறோம் என்று வன்முறையையும் ரத்தக் களரியையும் தான் ரசிகர்கள் மீது அவர்கள் ஏவி விட்டுக் கொண்டு இருப்பார்கள்.