விமர்சனம்: நுணக்குழி - பொய்களால் நிரம்பிய காமெடியாட்டம்!
மனைவியின் எதிர்ப்பையும் மீறித் தங்களது அந்தரங்க அனுபவங்களை வீடியோவில் பதிவு செய்யும் கதாநாயகன் - கணவன் எபி (பசில் ஜோசப்). ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற வேண்டி அந்தப் பெண்ணின் மீது பொய் சாட்சி சொல்லும் ஒரு பல் மருத்துவர். அவருக்கு ஒரு நடிகரின் மனைவியுடன் தொடர்பு. இப்படி மூன்று கோணங்களில் கதை நகர்கிறது.
தனது சொந்த வீடியோவை ஆபீசில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது வந்து சேர்கிறது ஒரு இன்கம் டாக்ஸ் ரெய்டு. இன்கம் டாக்ஸ் ஆபீசர் சித்திக் அந்தப் பெர்சனல் லேப்டாப்பை பறிமுதல் செய்து கொண்டு செல்ல ஆரம்பிக்கிறது களேபரம். அது இல்லாமல் வீட்டுக்கு வந்துவிடக் கூடாது என்று மனைவி உறுதியாக மிரட்டி அனுப்ப அதைத் தேடி ஓடுகிறார் எபி. இந்த மூன்று கதைகளுக்கும் ஒரு இணைப்புப் புள்ளி என்ன. என்னென்ன கலாட்டாக்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் என்பது தான் ஜீத்து ஜோசப்பின் நுணக்குழி.
கிரைம் கதையில் ஆதிக்கம் செலுத்தும் ஜீத்து ஜோசப், இதில் கிரைம் காமடி என்ற களத்தில் இறங்கி ஆடுகிறார். ஒரே ஒரு இரவில் நடக்கும் இந்தக் கதை முழுக்க காமெடிக் குழப்பங்கள் தான். பசில் ஜோசப்பைத் தவிர, இன்ஸ்பெக்ட்டராக வரும் பைஜூ சந்தோஷ், விவகாரத்து கேட்கும் மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி, மூவரும் தான் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அபார்ட்மெண்டில் நடக்கும் காட்சிகளும் மருத்துவமனையில் மாறி மாறிக் குற்றம் சாட்டும் காட்சிகளும் இரவில் நடக்கும் துரத்தல்களும் நம்மை யோசிக்க விடாமல் சிரித்துக் கொண்டே ஊன்றிப் பார்க்க வைக்கின்றன.
இன்கம் டாக்ஸ் ஆபீசர் சித்திக், நடிகராக வரும் மனோஜ் கே ஜெயன், மனைவியாக நிகிலா விமல், விவாகரத்து கணவனாக அஜூ வர்கீஸ், டாக்டராகச் சைஜு குரூப் என அவரவர்கள் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாலையோர உணவகத்தில் ஒரு அடிதடி நடக்கிறது. அதைப் பின்னர் கிளைமாக்சில் இணைத்த விதம் சுவாரசியம். வசனங்களும் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.
இவ்வளவு நடிகர்கள் நடித்து இருப்பதால் சில நேரம் தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் உணர்வு வந்து சேர்க்கிறது. குறிப்பாக ஆஸ்பத்திரி செட்டிங்குகளும், நடிகர் கதாசிரியர் கதை சொல்லும் காட்சிகளும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. தற்போதைய படங்களின் தொடர் வியாதியான சீக்வல் ஜுரம் இந்தப் படத்திலும் தொடர்கிறது. எந்தப்படத்தையும், ஒரு பாகத்தோடு முடிக்க முயல்வதில்லை போல இக்கால இயக்குனர்கள்.
கொஞ்சம் டார்க்கான கிரைம் த்ரில்லரா. பிடியுங்கள் ஜீத்து ஜோசப்பை என்று நினைத்துக் கொண்டிருக்க காமெடியிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். அடுத்த பாகம் இதே போல் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு சிரிப்புக் கச்சேரி தயார். கொஞ்சம் நகாசு வேலைகள் செய்து இந்தக் கதையைச் சுந்தர் சி போன்ற இயக்குனரிடம் கொடுத்தால் தமிழுக்கு ஒரு பிளாக் பஸ்டர் பார்சல். பார்க்கலாம் நடக்கிறதா என்று.