

வெறும் 1 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 101 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்த மெகா ஹிட் படம் Obsession.திரையரங்குகளில் வெளியாகும் முன்பே 05/09/2025 ல் டோரெண்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களைப் பெற்ற படம் இது.
15/05/2026 முதல் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இந்தியாவில், தமிழகத்தில் 29/05/2026 முதல் வெளியாகி இருக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன், நாயகி, வில்லி, நண்பன் நால்வரும் ஒரு மியூசிக் ஸ்டோரில் ஒன்றாகப்பணி புரிபவர்கள்.
நாயகிக்கு நாயகன் மீது சொல்லாத காதல். நாயகனுக்கு வில்லி மீது வெளிப்படுத்தாத காதல்.
நாயகன் இதயம் பட முரளி மாதிரி ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். காதலை சொன்னால் இருக்கற பிரண்ட்ஷிப்க்கும் கேடு நிகழ்ந்துவிடுமோ என பயப்படுகிறான்.
நாயகன் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் 'ஒன் விஷ் வில்லோ' (One Wish Willow) என்ற மேஜிக் பாக்ஸ் ஒன்றை வாங்குகிறான். நம்ம ஊர் சந்தைகளில் தாயத்து விற்பார்களே, வசியம் செய்ய உகந்த தாயத்து என விளம்பரப்படுத்துவார்களே அது மாதிரி இந்த ஒன் விஷ் வில்லோ என்ற பாக்சும் அசாதரணமானது. அதை ஓப்பன் பண்ணி நம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டால் அது அப்படியே நிறைவேறும்.
நாயகன் அந்த ஒன் விஷ் வில்லோ என்னும் பாக்சை விலைக்கு வாங்குகிறான். வில்லியின் மீதான காதலை சொல்லி இந்தக் காதல் நிறைவேற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறான்.
என்ன ஆச்சரியம்? அந்நாள் முதல், அதுவரை கதாநாயகனுடன் வெறும் தோழியாக மட்டுமே பழகி வந்த அந்த வில்லி, அவனுடன் ஒரு காதலியாக மிக நெருக்கமாகப் பழகத் தொடங்குகிறாள்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகிறாள். இதற்குப் பின் நடக்கும் ஏடாகூடமான திகில் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.
நாயகன் ஆக மைக்கேல் ஜான்சன் அருமையாக நடித்திருக்கிறார். கூச்ச சுபாவம், தயக்கம் எல்லாவற்றையும் முகத்தில் காட்டுகிறார்.
வில்லி ஆக இண்டே கவ்ரெட்டே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் தென்றல் மாதிரி வருபவர் பின் ஆக்ரோஷப் புயல் ஆக மாறுவது பயங்கரம்.
நாயகி ஆக, நண்பன் ஆக நடித்தவர்கள் நடிப்பும் சிறப்பு.
ராக்பர்வெல் இசை கச்சிதம். டெய்லர் கிளமன்ஸ் ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும் தரம்.
கர்ரி பார்க்கர் எடிட்டிங்கில் படம் 109 நிமிடங்கள் ஓடுகிறது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எடிட்டர் ஆன கர்ரி பார்க்கர்.
சபாஷ் டைரக்டர்
வில்லியின் கேரக்டர் டிசைன், அவரது மிரட்டல் நடிப்பு அட்டகாசம்.
நாயகன் வில்லியிடமிருந்து தப்பிக்கப்போடும் திட்டங்கள் கச்சிதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
ஒன் விஷ் வில்லோ பாக்சை விலைக்கு வாங்கும் நாயகனின் நண்பன் ஒரு மில்லியன் டாலர் பணம் கேட்க அது உடனே கிடைக்கிறது. இப்படிப்பட்ட அபூர்வ சக்தி படைத்த பாக்சைக் குறைந்த விலைக்குக் கடையில் ஏன் விற்கிறார்கள்?
சுருக்கமாகச்சொன்னால் இந்த மந்திரத்தகடு உங்கள் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என விளம்பரப்படுத்தி விற்கும் தகடுகளை கடைக்காரர் ஏன் தன்னிடமே வைத்து செல்வத்தைப்பெருக்கக்கூடாது?
படு பயங்கரமான பாடி ஹாரர் விஷயங்களைக் குறைத்திருக்கலாம்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஹாரர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.