விமர்சனம்: ஓ பட்டர்பிளை (2026) - தமிழ் - ரொமாண்டிக் சைக்காலஜிக்கல் திரில்லர்!

Oh Butterfly
Oh Butterfly
Updated on
ரேட்டிங்(3 / 5)

06/03/2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை. இப்போது இந்தப் படம் 04/05/2026 முதல் டெண்ட்கொட்டாய் ஓ.டி.டி யிலும் 08/05/2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரிலும் வெளியாகிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஒரு கோடீஸ்வரி. நாயகன் ஒரு மிடில் கிளாஸ். இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்த அடுத்த நாளே நாயகனுக்கு வேலை போய் விடுகிறது இதனால் நாயகன் மன உளைச்சலில் இருக்கிறான்.

நாயகிக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு காதலன் இருந்தான். அவனுடன் ஒரு வருடம் லிவ்விங்க் டு கெதர் வாழ்க்கை நடத்தியவள் தான் நாயகி. சில காரணங்களால் காதலன் பிரிந்து போனதால் இப்போது நாயகனைத் திருமணம் செய்திருக்கிறாள் நாயகி.

நாயகி தன் கணவனிடம் தன் முந்தைய காதல் விஷயத்தைப்பற்றி சொல்லிவிடத் துடிக்கிறாள். பல முறை முயற்சி செய்தும் அவளால் சொல்ல முடியவில்லை.

நாயகன், நாயகி இருவரும் கொடைக்கானல் வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலாவது தன் பழைய வாழ்க்கையை சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகி இருக்கிறாள்.

நாயகியின் முன்னாள் காதலன், வேறு ஒரு வேலையாக கொடைக்கானல் வருகிறான். இவன் தான் இந்தப் படத்தின் வில்லன். நாயகனும், வில்லனும் காலேஜ் மேட்ஸ்.

நாயகன் வில்லனைக் கொடைக்கானலில் எதேச்சையாக சந்திக்க, அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

தன் முன்னாள் காதலனை சந்தித்த நாயகி அதிர்ச்சி அடைகிறாள். இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக் கதை.

நாயகி ஆக நிவேதிதா சதீஷ் அமைதியாக நடித்திருக்கிறார். இவருக்கு சிரிக்கவே தெரியாதா? எனக் கேட்க வைக்கிறது. அந்த கேரக்டர் டிசைன் அப்படி. சிறப்பான நடிப்பு.

நாயகன் ஆக ஆர் அதுல் நடித்திருக்கிறார். தாழ்வுமனப்பான்மை கொண்ட கேரக்டர் டிசைன் என்பதால் அவரைப் பார்க்கும்போது நமக்கு எரிசசல் தான் வருகிறது. பரிதாபம் வரவில்லை. சில இடங்களில் அவர் ஓவர் ஆக்டிங்க் வேறு. முடியலை.

வில்லன் ஆக சிபி புவனா சந்திரன் நடித்திருக்கிறார். அதிக வேலையில்லை. நடிப்பில் சீரியஸ்தனமும் இவரிடம் இல்லை. வித்தியாசமாக காஸ்ட்யூம், கெட்டப் ஓக்கே, ஆனால் நடிப்பில் வெரைட்டி காட்டி இருக்க வேண்டாமா?

பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர் கவனிக்க வைத்தாலும் அவர் கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை. நாயகியின் சகோதரி ஆக வரும் லட்சுமிப்ரபா அமைதியான நடிப்பில் கவர்கிறார்.

குறி ஜோதிடம் சொல்லும் சோடாபுட்டிப் பாட்டி ஆக வரும் கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார். படத்தில் எல்லோரும் அந்தக் கேரக்டரைக் கிழவி எனக்குறிப்பிடுவது ஏனோ? பாட்டி என்று சொல்லி இருக்கலாம்.

ஒளிப்பதிவு வேதராமன் சங்கரன். கொடைக்கானலின் அழகைக் கூட்டி திரையில் காட்டி இருக்கிறார்.

இசை வைசாக் சோம்நாத். பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

எடிட்டிங் புவனேஷ் மணிவண்ணன். படத்தின் ரன்னிங்க் டைம் 132 நிமிடங்கள். மிக மெதுவான திரைக்கதை.

ஹரீஷ் ராஜகோபால் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனியே இயக்கி இருக்கிறார் விஜய் ரங்கநாதன்.

இவர் அறிமுக இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: The Man In The Window (2026) - ஆங்கிலம் - மிஸ்ட்ரி க்ரைம் திரில்லர்!
Oh Butterfly

சபாஷ் டைரக்டர்

  • கத்தி, பந்து என எந்த விஷயத்தைப் பார்த்தாலும் அது ஆயுதமாக மாறி நாயகிக்குத்தீங்கு விளைவிக்கும் என்ற மனப்பான்மை கொண்ட வித்தியாசமான மன நோய் நாயகிக்கு இருப்பதும் அதை விளக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் நமக்கு மிகவும் புதுசு.

  • ஒரு பங்களா, நாயகன், நாயகி, வில்லன் என்ற மூன்றே கேரக்டர்கள் என லொக்கேஷன், ஆர்ட்டிஸ்ட் இரு விஷயத்திலும் சிக்கனம் காட்டி இது மினிமலிஸ்டிக் பிலிம் என்பதை நிரூபித்த விதம் அருமை.

  • ஒரு மனோவியல் தத்துவ அறிஞர் எழுதியது போல பிரமாதமான உளவியல் கூற்று வசனங்கள் படத்தின் பெரும் பலம்.

  • மன உளைச்சலில் இருக்கும் நாயகன், குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நாயகி இருவரது கேரக்டர் டிசைனும், நடிப்பும் கன கச்சிதம்.

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • வில்லன் நாயகியை எதற்காகப் பிரிந்தான் என்பதை தெளிவாக சொல்லவே இல்லை.

  • நாயகனுக்கு பைக்கில் விபத்து ஏற்படும் காட்சியில் நம்பகத்தன்மையே இல்லை.

  • பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர் தான் வளர்த்த பட்டாம்பூச்சியைத்தேடி கானகத்தில் அலைவது எல்லாம் ஓவரோ ஓவர்.

  • க்ளைமாக்சில் வில்லன் நாயகியை விட்டு விட்டு எங்கோ செல்வதிலும் காரணம் சொல்லப்படவில்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - உலகப் படங்கள் பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள், சீரியல் பார்க்கும் பெண்கள் பார்க்கலாம். பொறுமை மிக அவசியம். காமெடி டிராக், டான்ஸ் போன்ற கமர்ஷியல் விஷயங்கள் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com