

சிறை முதல் சர்வம் மாயா வரை வெள்ளிக்கிழமை (Jan 23) ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1.சிறை- தமிழ்
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சிறை. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் , விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஒருநாள் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் கதிரவன் (விக்ரம் பிரபு) , குற்றவாளியான அப்துல் ரவுப்பை (எல்.கே.அக்சய் குமார்) நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொதுப் போக்குவரத்தில் அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் ஒரு பிரச்சினையில் கதிரவன் சிக்கிக் கொள்ள , அப்துல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பி விடுகிறார். அதன் பின்னர் என்ன ஆகிறது என்பது தான் திரைக்கதை. இந்த திரைப்படம் ஜனவரி 23 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும்.
2.ரெட்ட தல – தமிழ்
அருண் விஜய் , சித்தி இத்னானி , தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் இது. பாண்டிச்சேரி பகுதியில் ஆதரவற்றோராக வளரும் காளி(அருண் விஜய்) மற்றும் ஆந்திரே (சித்தி இத்னானி) ஆகியோர் சிறுவயது முதலே காதலிக்கின்றனர். பின்னர் ஆந்திரே காதலை விட பணமே முக்கியம் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறாள். இதனால் காளியும் மனமாற்றம் அடைகிறான். தன்னைப் போலவே தோற்றமளிக்கும் மல்பே உபேந்திராவை கொலை செய்து , அவரது சொத்துக்களை அபகரிக்க காதலியுடன் திட்டமிடுகிறார், அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை. இந்த திரைப்படத்தை கரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார் , சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இது ஜனவரி 21 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ, ஷார்ட்ஃபிளிக்ஸ் மற்றும் டென்ட்கோட்டாவில் வெளியிடப்பட்டுள்ளது.
3.தேரே இஷ்க் மெய்ன் - இந்தி/தமிழ்
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் இது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திரைப்படம். கல்லூரியில் பயிலும் போது சங்கரும்(தனுஷ்) முக்தியும்( கீர்த்தி சனோன்) தீவிரமாக காதலிக்கின்றனர். ஆயினும் முக்தி வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் மனமுடைந்த சங்கர் விமானப்படையில் சேர்ந்து விடுகிறார். 7 வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் நிகழும் சம்பங்கள் தான் திரைப்படம். இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஜனவரி 23 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
4.சர்வம் மாயா – மலையாளம்
இது ஒரு அமானுஷ்ய நகைச்சுவை திரைப்படம். பிரமாண குடும்பத்தில் பிறந்த நாத்திகரான பிரபெந்து கிடார் கலைஞராக பணியாற்றுகிறார். பணத் தேவைகளுக்காக பூசாரியாக பணியாற்ற முடிவு செய்கிறார். ஒரு வீட்டில் பேய் விரட்டும் சம்பவத்தில் தவறுதலாக செயல்பட , அவர் கண்ணுக்கு மட்டும் ஒரு இளம் பெண் (ரியா ஷிபு) பேயாக தென்படுகிறார். இருவருக்கும் சாத்தியம் இல்லாத ஒரு காதல் வளரத் தொடங்குகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் மிகவும் சுவாரசியமான திரைக்கதை. இந்த திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்த படம் ஜனவரி 23, 2026 அன்று ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடடப்படுகிறது.
5.ஸ்பேஸ் ஜென்: சந்திராயன் - ஹிந்தி/தமிழ்
நிலவை ஆராயும் இந்தியாவின் விண்வெளித் திட்டமான சந்திராயன் திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளின் கனவுகளையும் போராட்டத்தையும் பற்றி வலைத் தொடர் இது. ஸ்ரேயா சரண் , கோகுல் தத் ஆகியோர் நடித்துள்ள இந்த தொடர் ஜன 23 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.