விஜய்க்கு வில்லன்.. இந்திய அணிக்குக் கேப்டன்! கால்பந்து மைதானத்தில் கர்ஜித்த ஐ.எம். விஜயன்..!
சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் யாரும் அறிந்திடாத வகையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பிகில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த ஐ.எம்.விஜயன். இவரை நம்மில் பலருக்கும் வில்லன் நடிகராகவே தெரியும். ஆனால் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கே ரசிகர்கள் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கின்றனர். ஆனால் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர்களின் நிஜ வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் யாருக்கும் அதிக ஆர்வம் இருந்ததில்லை.
ஒருசில நடிகர்களின் நிஜ வாழ்க்கை பல சாதனைகள் நிறைந்ததாக இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. அவ்வகையில் வில்லன் நடிகர் ஐ.எம்.விஜயனும் கால்பந்து விளையாட்டு வீரராக ஜொலித்தவர் தான்.
இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இந்திய கால்பந்து அணியின் செயல்பாடு சர்வதேச அளவில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருப்பினும் ஒருசில வீரர்கள், இந்திய கால்பந்து அணியின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்தனர். அதில் ஒருவர் தான் ஐ.எம்.விஜயன். இவர் கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர்.
கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய விஜயன், இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். விளையாட்டில் இருந்து விலகிய நேரத்தில் தான், இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார் விஜயன். சினிமாவில் நடிக்கவில்லை என்றால் இவரை நம்மில் பலருக்கும் தெரியாமலே போயிருக்கும்.
கோலிவுட்டில் திமிரு, கெத்து, கொம்பன் மற்றும பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜயன்.
இளம் வயதில் கால்பந்து விளையாட்டின் மீதிருந்த ஆர்வமே, இவருக்கு விளையாடும் வாய்ப்பையும், கேரள காவல் துறையில் வேலையையும் பெற்றுக் கொடுத்தது. 1986 ஆம் ஆண்டு கேரள போலீஸ் கால்பந்து அணியில் கவுரவ வீரராக தனது விளையாட்டைத் தொடங்கினார் விஜயன். 1987 ஆம் ஆண்டு இவர் கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான விளையாட்டால், பலரையும் கவர்ந்தார்.
மேலும் தாய்லாந்து மற்றும் மலேசியா கிளப் அணியில் விளையாடவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இறுதிவரை தாய்நாட்டிற்காக மட்டுமே விளையாட முடிவெடுத்து இந்திய கால்பந்து அணியில் முக்கிய வீரராகவும் திகழ்ந்தார்
1992 முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியில் விளையாடிய விஜயன், 72 போட்டிகளில் 34 கோல்களை அடித்துள்ளார். இதுதவிர, கிளப் போட்டிகளில் 142 கோல்களையும் அடித்துள்ளார். 2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இந்திய கால்பந்து அணியையும் வழிநடத்தினார் விஜயன். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற விஜயன், தனது சொந்த ஊரில் இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க கால்பந்து அகாடெமி ஒன்றை உருவாக்கினார்.
1993, 1997 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்திய கால்பந்தாட்ட வீரர் விருதைப் பெற்றார் விஜயன். மேலும் 2003-ல் அர்ஜூனா விருது மற்றும் 2025-ல் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு கிடைத்தது.
17 வயதில் காலபந்தாட்டத்தின் மீது கொண்டிருந்த அதீத ஆர்வமே, இவரை இந்த அளவுக்கு உயர்த்தியது. கடந்த ஆண்டு கேரள காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற விஜயன், கடைசியாக உதவி கமாண்டன்ட் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

