

மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டோவினோ தாமஸ் கூட்டணியில் ஏப்ரல் 15-ல் வெளியான "பள்ளிச் சட்டம்பி"(Pallichattambi) மலையாளப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மலையாளப் படங்களின் கதையம்சம் மெதுவாக நகர்ந்தாலும் பார்க்கத் தூண்டுவதாக இருக்கும். ஆனால் பள்ளிச் சட்டம்பி அப்படி அமையவில்லை என்பது தான் வருத்தம்.
திறமையான நடிகர்கள் மற்றும் இயக்குனர் உருவாக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் எதிர்பார்ப்புகளை பொய்த்து கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், பலவீனமான திரைக்கதை மற்றும் பழைய படங்கள் போல் வழக்கமான நிலப்பிரபுத்துவ சினிமாவாக அமைந்ததன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது.
1957-ஆம் ஆண்டு கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு மற்றும் நில சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பை பேசும் படமாக, உண்மையில்லாத சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையான கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு பீரியட் (காலகட்டம்) திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
மக்களை அதிகம் ஈர்க்காத இப்படத்தின் கதையை இங்கு காண்போம். 1950களின் இறுதியில், கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் சமூக மற்றும் அரசியல் மோதல்கள் தீவிரமடைகிறது. குறிப்பாக தேவாலயம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கிடையேயான பதற்றம் கதையின் பின்னணியாக அமைகிறது.
கர்நாடக–கேரள எல்லைப் பகுதியில் வாழும் ஒரு குடும்பம் கொடூரமான நிலப்பிரபு பட்டேலர் என்பவரின் ஆட்களால் கொலை செய்யப்படுவதாக கதை துவங்குகிறது. அந்தக் குடும்பத்தில் உயிர் தப்பிய குழந்தையை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் காப்பாற்றி வளர்க்கிறார். அந்த குழந்தை தான் கதையில் நாயகன் டோவினோ தாமஸ் (பள்ளிச்சட்டம்பி).
வளர்ந்த பிறகு, பள்ளிச்சட்டம்பி தேவாலயத்தின் ஆதரவுடன் கிராம மக்களைக் காக்கும் வலிமையான மனிதனாக மாறுகிறான். ஆரம்பத்தில் பணத்திற்காகவும், தேவாலயத்தின் பாதுகாப்பிற்காகவும் செயல்பட்டாலும், மக்களின் துயரங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் நேரில் காணும்போது அவனின் மனநிலை மாறுகிறது.
இதற்கிடையில், தனது சிறுவயது குடும்பத்தை அழித்தது பட்டேலர்தான் என்பதையும், நிலத்தை அபகரிப்பதற்காக பல கொலைகளைச் செய்திருப்பதையும் பள்ளிச்சட்டம்பி அறிகிறான். தனது வளர்ப்புக் குடும்பமும் பட்டேலரின் செல்வாக்கால் அழிக்கப்பட்டது என்ற உண்மையும் தெரிகிறது.
இறுதிக்கட்டத்தில், பள்ளிச்சட்டம்பி பட்டேலரை நேருக்கு நேர் எதிர்கொள்கிறான். கடுமையான மோதலுக்குப் பிறகு பட்டேலரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. ஆனால், பழிவாங்குவதுதான் இறுதி தீர்வு அல்ல என்பதை உணர்ந்த பள்ளிச்சட்டம்பி, வெறுப்பை விட மனிதநேயத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் முடிவை எடுக்கிறான். இதன் மூலம் கிராம மக்களுக்கு புதிய நம்பிக்கையும் அமைதியும் உருவாகிறது.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சிறப்பாக இருந்ததாக விமர்சனங்கள் கூறுகிறது. படத்தின் இறுதியில் நடிகர் பிரித்விராஜ் சிறப்பு தோற்றத்தில் வரும் குஞ்ஞம்பு நம்பியார் பட்டேலர் கதாபாத்திரம் இந்த படத்திற்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி இன்னும் விரிவாக சொல்லப்பட வேண்டியதாக இருப்பதால், எதிர்காலத்தில் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகலாம் என்ற சுட்டிக்காட்டுவதுடன் படம் முடிகிறது.
படத்தின் தயாரிப்பு மற்றும் டோவினோ தாமஸின் நடிப்பு சிலரால் பாராட்டப்பட்டாலும், ஒட்டுமொத்த திரைக்கதை மற்றும் வரலாற்று அணுகுமுறை பார்வையாளர்களைக் கவரத் தவறிவிட்டதாக விமர்சகர்கள் படத்தின் தோல்விக்கு காரணங்களாக கூறுகின்றனர்.
மேலும் சுவாரஸ்யமில்லாத கதைசொல்லல் மற்றும் 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற ஆர்வத்தை தூண்டத் தவறிய ஆழமில்லாத திரைக்கதை ஆகியவையே படத்தின் முக்கிய பலவீனங்களாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் வசூலில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பின்னடைவு சந்தித்துள்ளது.
எனினும் அநீதி மற்றும் அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் ஒரு இளைஞரின் வாழ்க்கையையும், அதில் உருவாகும் மோதல்களையும் சுவாரஸ்யமான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளிப்படுத்துகிறது என்ற விமர்சனமும் வந்துள்ளது. மேலும் அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் டோவினோ தாமஸின் நடிப்புக்காக பாராட்டப்பட்டது.
பலரின் கனவுக்கன்னியாக திகழும் நடிகை கயாது லோகர் நாயகியாக இப்படத்தில் வலம் வருகிறார்.
எனினும், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்த இப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி சோனி லிவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் (ஓடிடி ரிலீஸ்) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மலையாளத் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில், எந்தக் காரணங்களால் 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் திரையரங்கில் சறுக்கியது என்பதைத் தாங்களாகவே பார்த்துத் தெரிந்துகொள்ளப் பலரும் ஆவலுடன் இருக்கலாம்.
என்னதான் சிறந்த நடிகர், நடிகை மற்றும் இயக்குனர் கூட்டணி அமைந்தாலும், திரைக்கதை பலமாக இல்லை என்றால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாது என்பதற்கு இத்திரைப்படமே ஒரு சிறந்த சான்று.