நெஞ்சை தொடும் கதையுடன் ஓடிடி-க்கு வரும் விஜய் ஆண்டனியின் புதிய படம்!

நூறு சாமி
நூறு சாமிsource:district
Updated on

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனிக்கென ஒரு தனி இடம் ரசிகர்களிடையே இருக்கிறது. காரணம் எப்போதும் மக்கள் விரும்பும் கமர்ஷியல் மசாலா படங்களை தாண்டி, சற்றே வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து அதையும் மக்கள் விரும்பும் வண்ணம் காட்சிப்படுத்தி நடிப்பதில் கெட்டிக்காரர் நடிகர் விஜய் ஆண்டனி. சாதாரண மனிதர்கள் போன்ற எளிமையான வாழ்க்கை முறையும், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்வதும் அவரது தனிச்சிறப்பாகவே கருதப்படுகிறது.

அந்த வகையில், ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான திரைப்படமாக ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி, பார்த்த அத்தனை பெண்களின் மனங்களையும் கவர்ந்த திரைப்படம் தான் விஜய் ஆண்டனி நடித்த 'நூறு சாமி'. கணவனை இழந்த ஒரு பெண்ணின் போராட்டங்கள், தாய்மை உணர்வுகள் மற்றும் மறுமணம் குறித்து சமூக அக்கறையுடன் பதிவு செய்து இத்திரைப்படம் பெண்களின் அப்ளாஸ்களை அள்ளியது.

விஜய் ஆண்டனி - சசி கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது 'பிச்சைக்காரன்' படத்தின் தாய்ப்பாசம் தான். அந்தப் படத்தில் தாய்ப்பாசம் குறித்த காட்சிகள் பார்த்தவர் கண்களை நனைய வைத்தன. அந்த இமாலய வெற்றிக்குப் பிறகு, இக்கூட்டணி மீண்டும் 'நூறு சாமி' படத்தில் இணைந்துள்ளது.

'நூறு சாமி' படத்தின் கதை ஒரு பெண்ணைச் சுற்றியே அமைகிறது. இளம் வயதிலேயே கணவரை இழந்த செல்வி, தனது இரண்டு மகன்களை வளர்க்கப் பல துன்பங்களைச் சந்திக்கிறார். தனியாக வாழும் பெண் என்ற சமூகத்தின் விமர்சனங்களுடன், பொருளாதாரச் சிரமங்களையும் எதிர்கொண்டு பிள்ளைகளுக்காகவே வாழ்கிறார்.

காலம் உருண்டோடுகிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு, செல்வி தனக்குள் எழும் மறுமண ஆசையை அவர்களிடம் தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மூத்த மகன் அதை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்க்கிறான். இதனால் குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு, தாயின் தனிமையையும் தியாகங்களையும் மகன்கள் உணர்ந்து, தங்கள் தவறுக்கு பிராயச்சித்தமாக அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்த கிராம மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்கள், குடும்பத்திற்குள் என்னென்ன புயல் வீசியது, செல்வி அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பெண்களின் நிலையிலிருந்து அழகாகப் பேசியிருக்கிறது இத்திரைப்படம்.

கணவனை இழந்த பெண்களின் மறுமணம், தாயின் தியாகம், குடும்ப உறவுகள், சமூகத்தின் பார்வை மற்றும் அதன் தாக்கம் என படம் பலவிதமான உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக அடிப்படை கருவாக மறுமணம் குறித்த சமூக மனப்பான்மையை கேள்விக்குட்படுத்தும் உணர்ச்சிகரமான குடும்ப கதையாக அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

நூறு சாமி
நூறு சாமிsource:indiatoday

தியேட்டரில் இந்த படத்தைப்பார்த்த பல பெண்கள், இயக்குனர் சசியையும் விஜய் ஆண்டனியையும் கட்டிப்பிடித்து, இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கு நன்றி என உணர்ச்சிப் பொங்கக் கண்ணீர் மல்க வாழ்த்தியதாக வந்த தகவல்களும் பாசிட்டிவ் விமர்சனங்களால் படம் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை குவித்ததும் சிறப்பு.

இயக்குனர் சசி இந்தத் திரைப்படத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மிகவும் நேர்த்தியாக இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் என பலர் நடித்துள்ளனர். அதிலும் செல்வியாக நடிக்கும் ஸ்வாசிகா அந்தப் பாத்திரத்தில் தத்ரூபமாக பொருந்தி தனது அசாத்தியமான நடிப்பில் மிளிர்கிறார்.

திரையரங்குகளில் பெண்களின் ஆதரவோடு வெற்றிப்படமாக கொண்டாடிய நூறு சாமி எப்போது ஓடிடியில் வெளிவரும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வண்ணம் தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடிமற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

நூறு சாமி திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை 'ஜி' நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் ஜி5 ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாவதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஆண்டனி படம் என்றாலே ஏதேனும் ஒரு நல்ல மெசேஜ் சமூகத்திற்கு சொல்லப்படும். அந்த வகையில், இந்தப் படத்திலும் மறுமணம் எனும் பெண்களின் வெயிட்டான பிரச்சினையை தாய்ப்பாசத்துடன் கலந்து தந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். தியேட்டரில் தவறவிட்டவர்கள், அடுத்து வரும் இதன் ஓடிடி ரிலீஸ் தேதியை குறித்து வைத்து கண்டு மகிழுங்கள்!

இதையும் படியுங்கள்:
அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
நூறு சாமி
இதையும் படியுங்கள்:
நடிகை சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நூறு சாமி
logo
Kalki Online
kalkionline.com