
வாழ்க்கையானது நவரசங்களின் வண்ணக்கலவை. குடும்ப நிா்வாகத்தோடு பொழுதுபோக்கு அம்சமாக கேளிக்கை நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். சினிமா என்பது ஆரம்பகாலங்களில் மக்களுக்கு ஊமைப்படம். அதைத்தொடர்ந்து மணிக்கு எட்டுக்கு மேற்பட்ட பாடல்கள், பாடல்களிலேயே படத்தின் கதை தொியவரும். சினிமா எனும் பொழுதுபோக்கு சாதனம் பல ஜாம்பவான்களை உருவாக்கிய வரலாறும் உண்டு.
காலப்போக்கில் நல்ல கதையம்சங்களோடு கூடிய சமுதாய சிந்தனைக்கான படம், குடும்பகதையம்சம் கொண்ட படம், சண்டைப்படம், அரசர்கள் மற்றும் புலவர்கள், மகான்கள் மற்றும் தெய்வங்களின் வரலாறு கூறும் புராணப்படம், என ஜனரஞ்சகமாக இருந்து வந்தது. தூா்தர்ஷனில் ஒலியும், ஒளியும், தனிவரவேற்பை பெற்றது. அவையெல்லாம் காலப்போக்கில் மாறிட, சினிமா அழியாத நிலையிலும் சினிமாவையே தூக்கிச்சாப்பிடும் அளவிற்கு சின்னத்திரை தொடர்கள் அனைவர் குடும்பங்களிலும் வரவேற்பறையை அலங்கரித்தன.
ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில், நல்ல தொடர்களும் வெற்றிபெற்றன. குறிப்பாக ஒன்றைமட்டும் சொல்கிறேன் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30க்கு பல வீடுகளில் மெட்டி ஒலி நாடகம் முடிந்தால் தான் ரொட்டி (இரவு டிபன் ) ஒலி கேட்கும்.
அந்த அளவிற்கு இல்லம் தோறும் அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பலதொடர்கள் கோலோச்சின. காலப்போக்கில் தொடர்கள் இன்று வரை இல்லத்தரசிகளை கட்டிப்போட்டுள்ளதே நிஜம்.
அந்த வகையில் சமீப காலமாக மெகாதொடர்களில் சினிமாவை மிஞ்சிய ஆபாசம், இரட்டை அர்த்த டயலாக் லாஜிக், இல்லாத கதை குடும்ப வன்முறை, கலாச்சார சீரழிவுக்கான பாதையை வகுத்தல் போன்ற அம்சங்களோடு பெண்களை ரெளடிகளாகவும், தாதாக்களாகவும் ஆண்களை அடிமைகளாகவும் மந்திரம் மாயம் செய்தல் போன்ற இனங்களும் அதிகமாகி வருவதும், அது பல குடும்பங்களில், நெறிமுறைகளை குறைப்பதுமாக வருவது வேதனையான விஷயமே!
இந்த விஷயத்தை அலசுவதாக இருந்தால் ஒரு நாள் முழுவதும் எழுத வேண்டும், அதுவும் புத்தக வடிவில் தான் எழுத வேண்டும்.
உதாரணத்திற்கு தினசரி மதியம் ஒளிபரப்பாகும் தொடரில், மருமகள் தனது வேலையை விட்டு விட்டு வர, அந்த விஷயம் அவரது மகள் மூலம் தொிய வரும்போது அதைக் காட்டிக்கொள்ளாமல், மாமியார் கதாபாத்திரத்தில் நடிப்பவர் மருமகளைப் பாா்த்து, 'ஏன் வேலை போனது?' எனக்கேட்க, மருமகள்,'காா்மெண்ட்ஸ் கம்பெனியில் பொிய ஆா்டர் கொடுக்க வந்த வெளிநாட்டு தொழிலதிபர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதால், நான் அப்படிப்பட்ட பெண் அல்ல எனக்கூறி கோபப்பட்டு அவரை அடித்தேன். அதனால் ஆா்டர் போனது உடனே ஓனா் என்னைக்கூப்பிட்டு தொழிலதிபரிடம் மன்னிப்பு கேட்கச்சொன்னாா். நான் முடியாது என கூறினேன். அதனால் வேலை போனது' எனக் கூறுவாா். அதற்கு மாமியாரோ, 'இப்போது வேலை போய் விட்டதே என்ன செய்வாய். உலகத்தில் எங்கு போனாலும் பெண்களுக்கு பிரச்சனைகள் வருவது உண்டு. அதற்காக நீ அந்த தொழிலதிபரை அடித்தது தப்பு. மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். இப்போது வேலை போய் விட்டது. இந்த
குடும்பத்திற்கு செலவுக்கு மாதா மாதம் யாா் பணம் தருவாா்?'என மருமகளை திட்டுவதாக கதை நகர்கிறது.
இது எந்த விதத்தில் நியாயம்? கற்பு நெறி கடைபிடிக்கும் மருமகளைப் பாா்த்து இரண்டு பெண்களைப் பெற்ற மாமியாா் இது போல பேசலாமா? நாக்கு கூசவில்லையா? பணத்திற்காக எதையும் ஒரு பெண் சகித்துக்கொள்ள வேண்டுமா? எவ்வளவு பொிய தவறு!
இது ஒரு துளி அவலம்தான். மெகாதொடா்களில், பெரும்பாலும் இது போன்ற அபத்தமான காட்சிகளும் கதை போக்கும் மட்டுமே காண முடிகிறது.
தொடர் எடுக்கும், தயாாிக்கும், டைரக்ட் செய்யும் புண்ணியவான்களே இது போல எந்த காட்சி வைத்தாலும் பாா்க்க ஒரு கூட்டம் உள்ளது என்பதால் குடும்பப் பெண்களின் கற்பு நெறியோடு விபரீத விளையாட்டு வேண்டாம்.
கலாச்சார சீரழிவுகளை மெகாதொடர் மூலம் மேலும் சீரழிக்காதீா்கள்! மெகாதொடரில் நல்ல விஷயங்களைக் கூறுங்கள். நாகரீகம் காப்பதே நல்லது !