
ராமம் ராகவம் என்ற தெலுங்குப்படத்தை, தமிழ்க்குரல்களுடன் பார்த்தபோது ஒரு திருப்தி நெஞ்சை நிறைப்பதை உணர முடிந்தது!
சமீப காலங்களில் நடிகர் சமுத்திரக்கனியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகின்றனவோ இல்லையோ, பார்ப்போரைப் பல இடங்களில் கண் கலங்க வைப்பதுடன், சிந்திக்கவும் தூண்டுபவையாக அமைந்து வருகின்றன. கதாநாயகன் - வில்லன் என்ற பரிமாணத்தைத் தாண்டி குடும்பத்தில் ஒருவரையே வில்லனாக்கி, அதற்கான மனோபாவங்களை விளக்கி, படத்தை முழுப் பாசப் போராட்டத்தில் நடத்திச் செல்லும் நுணுக்கம் மிகச்சில படங்களிலேயே பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறான படங்கள் அனைவரின் மனதுக்கும் நெருக்கமான படங்களாகவும் அமைந்து விடுகின்றன.
ராமம் ராகவம் என்ற இந்தப்படமும் அந்த லிஸ்டில் இடம் பிடித்துவிடுகிறது.
தசரத ராமன் என்ற பெயர் கொண்ட சமுத்திரக்கனி லஞ்சம் வாங்காத ஒரு தாசில்தார். மனைவியையும், ஒற்றை மகனையும் கொண்ட குடும்பஸ்தர். தன் தன்மையான குணத்தால் கொண்டாடப்படும் ஆபீசர். எல்லோரையும் போலவே ஆயுளை இன்சூர் செய்துள்ளவர். மகனை நன்றாக வளர்க்க வேண்டுமென்ற ஆசை கொண்ட, எல்லா அப்பாக்களையும் போன்ற சராசரி மனிதர். அவர் மனைவியும் அவருக்கு ஏற்ற நேர்மை விரும்பும் வழக்கமான தாய்தான்!
ஆனால், ராகவன் என்ற அவர் இளம் வயது மகனோ, குறுக்கு வழியில் பணக்காரனாகும் நோக்கத்துடன், மொத்த இன்சூர் பணத்தையும் பெற, பேராசை மிக்க ஒரு லாரி ஓட்டுனருடன் கூட்டு சேர்ந்து தன் தந்தையைக் கொல்லத் திட்டமிடுகிறான். லாரி டிரைவருக்கோ சொந்தமாக லாரி வாங்க வேண்டுமென்ற ஆசை. அதற்காகவே ராகவனுடன் துணை சேர்கிறான் அவன்.
அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே ராமருக்கு நெஞ்சு வலி ஏற்பட, லாரி டிரைவரோ அப்பாவை சிகிச்சைக்குக்கொண்டு செல்லாமலே சாக விட்டு விடலாமென்று தடுக்க, மகனோ அதை மீறி அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகிறான்!
நாம் கூட, ’தானாடா விட்டாலும் சதை ஆடும்!’ என்பதற்கிணங்க, அவன் திருந்தி விட்டானோ என்று நினைப்போம்! உண்மை நிலை என்னவென்பதை, அந்த லாரி டிரைவரை மீண்டும் சந்திக்கும் போதுதான் அந்தக் கொடூர மகன் கூறுவான்... ‘இயற்கை மரணம் அடைந்தால் 80 லட்ச ரூபாயே கிடைக்குமென்றும் அதுவே விபத்துச் சாவு என்றால் ஒரு கோடி ரூபாய் அதிகமாகக் கிடைக்குமென்றும்!’
சிலர் எளிதாகத் திருந்துவார்கள். சிலரைத் திருத்துவது கொஞ்சம் கடினம். நமக்கோ அதிர்ச்சி!
கடலூர் மாவட்ட, பாண்டிச்சேரி பார்டரில் பணியாற்றும் அவர், பாண்டிச்சேரியில் நடைபெறும் நண்பரின் வீட்டுக் கல்யாணத்திற்குக் குடும்பத்துடன் செல்ல ஏற்பாடு செய்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவரை ஆக்சிடெண்டில் கொல்ல மகன் ராகவனே, லாரி டிரைவருடன் பேசி திட்டம் போடுகிறான். தானும், தாயும் விழாவுக்குச் செல்லாமல் தப்பிக்க, கையைக் கதவிடுக்கில் வைத்துச் சாத்தி, காயமேற்படுத்திக் கொள்கிறான். சமுத்திரக் கனி மட்டும் டூ வீலரில் சென்று திரும்ப, நிறுத்தி வைத்திருக்கும் லாரியில் உள்ள டிரைவரைப் பார்த்து ‘ஏனப்பா! கொல்லாமல் யோசிக்கிறாய்?’ என்று கேட்டதும் ஆடிப்போன அவன் மிரண்டு போகிறான்.
’நீங்கள் ரெண்டு பேரும் பேசியதை நான் கேட்டேனப்பா. நீங்கள் இருவருமே இளைஞர்கள். வாழ வேண்டியவர்கள். எப்போ பெத்த மகனே என்னைக் கொல்லத் திட்டம் போட்டானோ, அப்பவே நான் செத்திட்டேம்பா..." என்று சொல்லி விட்டு…
இதே நேரத்தில் வீட்டில் அப்பா எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு, அவர் பாசத்தை எண்ணித் துடிக்கும் ராகவன், தான் தவறான முடிவு எடுத்து விட்டதை எண்ணி வருந்தி, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட லாரி டிரைவரின் செல்போனைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்று, ஸ்கூட்டரில் அப்பாவைத் தேடிப் புறப்படுகிறான்!
லாரி டிரைவரிடம் தான் ஏற்கெனவே செத்து விட்டதாகக் கூறிய தாசில்தார் சமுத்திரக்கனி, எதிர்த் திசையில் வரும் வேனில் அடிபட… ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். திருந்தி வரும் மகன், தான் நல்ல பெயரெடுத்துத் தந்தையை மகிழச் செய்யப்போவதாக உறுதி எடுத்துக் கொள்ளும்போதுதான், டாக்டர் வந்து பாடியை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்ப வேண்டுமென்கிறார்.
தந்தையின் பணி தாய்க்குக் கிடைக்க, மகன் எடுத்த உறுதியை நிறைவேற்றப் பாடுபடுகிறான்!
‘என்னோட சீட்ல, என் இறப்புக்குப் பிறகு நீ உட்கார நேர்ந்தால் லஞ்சம் மட்டும் வாங்காதே!’ என்ற சமுத்திரக்கனியின் வசனம் ராகவன் காதுகளுக்கு மட்டுமல்ல... நம் இளைஞர்கள் அனைவரின் காதுகளுக்குந்தான்!
மகன் ராகவன் எதிர்பார்த்தபடி ஒரு கோடியே எண்பது லட்சம் அவனுக்குக் கிடைக்க, பெருந்தொகையுடன் லாரி டிரைவரைச் சந்திக்க, அந்த ஓட்டுநர் மனம் மாறி, பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் போவது சூப்பர்!
டைரி, கடிதம் மூலம் பெரும் மனப்போராட்டத்தை ஏற்படுத்தி, நமக்கும் த்ரில் அளிப்பது நன்றாகவே உள்ளது. இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையைக் கொல்லத் துணியும் இளைஞர்கள் மிகச் சொற்பமே. விதி விலக்காகத்தான் இதனை எடுத்துக் கொள்ள முடியும். இருப்பினும் அப்பாவின் அன்பை அப்பட்டமாகப் பறை சாற்றுவதற்காக கதை புனையப்பட்டுள்ளதால், விதி விலக்கினை ஏற்கலாம்.
ஒரு பொருள் பொதிந்த படம் பார்த்த நிறைவு உள்ளத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே படத்தின் வெற்றி!
எனது கண்ணோட்டத்தில் இன்னொன்றும் பட்டது. இதில் காட்டப்பட்டுள்ள மருத்துவமனை வாசலில் ஆலமரம் ஒன்று காணப்படுகிறது. நமது நாட்டிலுள்ள மருத்துவ மனைகள் முன்பு, வசதியுள்ள இடங்களில், இது போன்று ஆலமரங்கள் வளர்ப்பது நோயாளிகளுக்கும், அவர்கள் உதவியாளர்களுக்கும் ஏன்? மருத்துவ மனை ஊழியர்களுக்குமே உற்சாகந் தருவதாக அமையும்!
தன் உயிரையே தன் மகன் பணத்தாசைக்காகத் தியாகம் செய்யும் சமுத்திரக்கனி போன்ற அப்பாக்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருவதை இக்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.