
சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு பெயர் போனது என்று நம் அனைவருக்கும் தெரியும். நெடுந்தொடர் நாடகங்களை முதல்முதலாக டிவியில் ஒளிபரப்பி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தது சன் டிவி என்றே சொல்லலாம். சித்தி, மெட்டி ஒலி போன்ற மெகா ஹிட் சீரியல்களுக்கு பிறகு தான் சன் டிவிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதேபோல் சன் டிவி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை நிறைய வெற்றிகரமான சீரியல்களை ஒளிபரப்பி வருவதுடன், ஏகப்பட்ட ரசிகர்களையும் சம்பாதித்துள்ளது.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் விஜய் டிவிக்கு டஃப் கொடுத்து டிஆர்பியில் டாப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என எதுவாக இருந்தாலும் எப்போது சன் டிவிக்கும், விஜய் டிவிக்கு தான் டிஆர்பில் யார் முன்னணியில் வருவது என்ற போட்டி நிலவும். விஜய் டிவியுடன் போட்டியை சமாளிக்கும் வகையில் சன் டிவி புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை தற்போது களத்தில் இறக்கி வருகிறது.
சன் டிவியில் ‘ரஞ்சிதமே ஷோ’ ரியாலிட்டி ஷோவின் 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க, தற்போது ரஞ்சிதமே ஷோவின் புதிய சீசன் (4-வது சீசன்) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4-வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த சீசனின் புரோமோ சமீபத்தில் வெளியாக ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. பிரபல விளையாட்டு நிகழ்ச்சியான ‘ரஞ்சிதமே ஷோ’ சீசன் 4 ரியாலிட்டி ஷோ வரும் ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 31-ம்தேதி) பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த கேம் ஷோவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். கடந்த 3-வது சீசனில் கயல் சீரியலில் நடித்த நடிகை சைத்ரா ரெட்டி தனது அற்புதமான விளையாட்டு திறமையால் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
இந்த சீசனில் முதல் போட்டியாளர்களாக சிங்கப்பெண்ணே புகழ் ஆனந்தி, மூன்று முடிச்சு புகழ் நந்தினி மற்றும் மருமகள் சீரியல் புகழ் ஆதிரை ஆகிய மூன்று கதாநாயகிகள் களத்தில் இறங்கி போட்டிபோட உள்ளனர். மிகவும் பிரம்மாண்டமான முறையில், உங்கள் மனம் கவர்ந்த மிரட்டலான மூன்று கதாநாயகிகளுடன் அசத்தலான சுற்றுகள் மற்றும் அதிரடியான போட்டிகளுடன் ‘ரஞ்சிதமே ஷோ’ சீசன் 4 தொடங்க உள்ளது. 'ரஞ்சிதமே' கேம் ஷோ 4-வது சீசனில் வி.ஜே. அஸ்வந்த் மற்றும் பவித்ரா ஆகியோர் தொகுப்பாளர்களாகப் பொறுப்பேற்று, பார்வையாளர்களை மகிழ்விக்க வருகின்றனர்.
பொழுதுபோக்கு, வேடிக்கையான சவால்கள் மற்றும் பிரபலங்களின் நட்புறவு ஆகியவற்றின் தனித்துவமான கலவைக்கு பெயர் பெற்ற இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.