டிவி சேனல்கள் நம்மை மகிழ்விக்க, ஒரு நாளின் 24 மணி நேரத்தில் பெரும்பாலான நேரத்தை மெகா சீரியல்களுக்கே ஒதுக்கிவிட்டன. டிஆர்பி (TRP) என்பதைக் காரணமாகக் காட்டி, தங்கள் சீரியல்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, அவற்றை வருடக் கணக்கில் இழுத்துக்கொண்டே போகின்றன. உண்மையில் அவை பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டவையாகவும், பார்ப்போருக்கு வழிகாட்டுபவையாகவும் அமைந்தால் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். கொரோனா காலத்திற்குப் பிறகு பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காக் சின்னத்திரைகளே அமைந்துவிட்டன. அதிலும் குறிப்பாக, முதியவர்களுக்குப் பெரிதும் துணையாக இருப்பவை இவைகளே.
டி.ஆர்.பி.,யில் முதல் 10 இடங்களைப் பிடிப்பதாகப் பீற்றிக்கொள்ளும் சீரியல்களில் கூட அவர்கள் அரங்கேற்றும் அபத்தங்களைப் பார்த்து வெறுப்புத்தான் மேலோங்குகிறது. சாதாரண ரசிகனின் எதிர்பார்ப்பு,திரையிலாவது நேர்மை காப்பாற்றப்பட வேண்டுமென்பதும்,நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் நமது கதாநாயகர்கள் பத்து,இருபது பேரைத் தனியாக நின்று விளாசித் தள்ளும்போதும் கை தட்டி ரசிக்கிறோம்.நிஜ வாழ்க்கையில் அது நடக்கவே நடக்காது என்று ஆறாம் அறிவு ஆணித்தரமாகக் கூறினாலும்,அதையும் தாண்டி,அடித்துத் துவைக்கும் நாயகர்களை நாம் விசிலடித்து வியக்க வைக்கிறோம்.
சில பயில்வான்கள்,அவர்கள் உடலோடு ஒப்பிடப்படும்போது துரும்பாகக் காட்சி தரும் நம் நாயகர்களிடம் அடி,உதை வாங்கும்போது, அது சாத்தியமே இல்லையென்றாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் அநீதியை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற ஆத்ம சக்தி அனலாய்க் கொழுந்து விட்டுக் கொண்டிருக்கிறது. அதனையே நம் திரைப்பட இயக்குனர்கள் நன்கு பயன் படுத்திக்கொள்கின்றனர்.
அப்பொழுதும் சரி!இப்பொழுதும் சரி!கூட்டத்தினிடையே தன்னை அடிக்க வரிசையாக வரும் ஐந்து,பத்துப்பேரை நாயகன் தனியாகவே தாக்குவதாகவே காட்டுகிறார்கள்.அந்தக்காலக் கூட்டத்தினர் வேடிக்கை பார்ப்பதும்,இந்தக்காலக் கூட்டத்தினர் வீடியோ எடுப்பதும் உண்மைதான் என்றாலும்,அதனை மாற்றும் விதமாகக் கூட்டத்திலுள்ள ஓரிரண்டு பேராவது நாயகனுக்கு உதவுவதாகக் காட்டலாமே! இதன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே!
சரி!சீரியல்களின் அபத்தங்கள் சிலவற்றைப் பார்ப்போமா?தற்போது நல்ல விதமாகப் போய்க் கொண்டிருப்பதாக அவர்கள் கூறும் முன்னிரவு சீரியல் ஒன்றில்,சங்கமத்தின்போது தன்னையே கொல்ல முயன்றவர்கள் பங்காளிகள் என்ற பெயரில் வந்து ஒட்டிக் கொள்கிறார்களாம்.வீட்டாரும் அனுமதிக்கிறார்களாம்!நம் காதுகளில் தான் பந்து பந்தாய்ப் பூ!நாம் திரையில் பார்க்க விரும்புவது புத்திசாலிகளையும்,பலசாலிகளையுந்தான்!ஏமாளிகளையும்,எதற்கும் பணிந்து போகின்றவர்களையும் அல்ல.அதனைப் பார்க்கையில் எரிச்சலே மிஞ்சுகிறது.
மற்றொரு சீரியல்.அடக்கியே வைக்கப்படும் தென் தமிழ் நாட்டுப் பெண்கள் பல சிரமங்களுக்குப் பிறகு தங்கள் சொந்தக் கால்களில் நிற்க ஆரம்பிக்க,படாத பாடு பட்டு,உயிரையும் இழக்கும் இறுதி நிலை வரை சென்று திரும்ப,மீண்டும் அடுப்பறையிலேயே தள்ளப்படுகிறார்களாம்.தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறார்களாம்.ரசிகர்களின் எதிர்பார்ப்பு,தவறு செய்வோர் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டுமென்பதுதான்.தவறு இழைப்போர் நன்றாக வாழ்வதாகக் காட்டப்படுவது சீரியல்களின் மீது வெறுப்பையே வரவழைக்கின்றன.
இன்னுஞ் சில சீரியல்களோ,சமுதாயத்தில் எப்பொழுதோ வழக்கத்தில் இருந்து,தற்போது முழுதுமாக மறைந்து போன நிகழ்வுகளுக்கு உயிர் கொடுத்து,அதை நிறை வேற்றுவது போலவும் காட்டுகிறார்கள்.தவறை ஜோடித்து அந்த இளைஞனைச் சிக்க வைத்து,அவனை ஊர்த்தெருக்கள் அத்தனைக்கும் அழைத்துச்சென்று,ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறுத்தி,சாட்டையால் அடிக்கிறார்களாம்.அந்தச் சாட்டையும் விஷம் தோய்க்கப்பட்டதாம்.ஆனாலும் இளைஞன் நிரபராதியாம்!
இப்படியே இன்னும் நிறையச்சொல்லிக் கொண்டே போகலாம்.வெள்ளித்திரை,தேடிப் போவோருக்கே சொந்தம்.சின்னத்திரையோ, வீட்டார் அனைவருக்குமே சொந்தம்.அனைவருக்கும் படிப்பினை தரும் நிகழ்ச்சிகளைக்காட்டுவதே சிறப்பாக அமையும்.அதில் துளியளவாவது விழிப்புணர்வும் வேண்டும்!
சில ஆண்டுகளுக்கு முன்னர்,நடிகை ஒருவர் நடித்தும்,மேற்பார்வை இட்டும் வெளி வந்த சீரியல்கள் ஒளிபரப்பப்படுகையில்,ட்ராபிக்கே குறைந்து போனதாகப் படித்திருக்கிறோம்.காரணத்தை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.அபத்தங்கள் இல்லாமல்,அவுட் டேட்டேடு நிகழ்ச்சிகள் இல்லாமல்,புத்திசாலித் தனமாகச் சிந்திக்கும் நாயகியை முதன்மையாகக் கொண்டு அந்த சீரியல்கள் வந்தன.
வெள்ளித்திரையில் ஒரு கதையை 2,3 மணி நேரத்தில் பார்த்து முடித்து விடுகிறோம்.சின்னத்திரையிலோ இருக்கும் சிலரை வைத்துக் கொண்டே மீண்டும்,மீண்டும் காட்சிகள் அமைக்கப்படுகையில் அதிகமாகப் போரடிக்கவே
ஆரம்பிக்கிறது.அதிலும்,பல சீரியல்களில் ஒரே மாதிரியான காட்சிகளே அரங்கேற்றப் படுகின்றன.சில வாரங்கள் முன்பு பெரும்பாலான சீரியல்கள் கபடிப் போட்டியைத் தத்தெடுத்து இருந்தன.கோயில்களில் பரிகாரங்கள் நிறைவேற்றுவதும் அது போலவே.
சின்னத்திரை இயக்குநர்களே! நல்ல குடும்பக் கதைகளை, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து முகம் சுளிக்காமல் பார்க்கும் விதமாக எடுங்கள். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்!