

மதுரை மாவட்டம் கருமாத்தூர் கிராமத்தில் வசிக்கும்பவுனுத்தாயி (ராதிகா) ஊரில் எல்லோருக்கும் வட்டிக்கு விட்டு எல்லோரையும் மிரட்டி தினமும் பணத்தை வசூல் செய்பவர்.
ஊரே இவர் எப்போது இறப்பார் என காத்திருக்கிறது. மகன்களும் மாப்பிள்ளையும் கூட. அம்மா எப்போது இறப்பார் சொத்தை அடையலாம் என காத்திருக்க (மகள் மட்டும் கணவரை விட்டு அம்மாவிற்காக வீட்டோடு வாழ்ந்து வருகிறார்.) ராதிகாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக அந்த நேரத்தில் ராதிகா 160 பவுன் சேர்த்து வைத்துள்ளது மூன்று மகன்களுக்கும் தெரிய வருகிறது
இதனால் அந்த நகை தங்கள் சகோதரி மற்றும் அவர் மாப்பிள்ளைக்கு தெரியாமல் எடுக்க பிளான் போட அதன் பிறகு நடக்கும் கூத்தே தாய்க்கிழவி படத்தின் ஒன்லைன்.
முதல் பாதி ஜாலி… நிறைய காட்சிகளில் நடிகர் கமலஹாசனின் பாடல்களை ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது. இயக்குனர் சிவக்குமார் முருகேசனின் அழகான கற்பனை.
சிங்கம் புலி கமல் ரசிகராக அவரும் 'ஆண்டவர்' தானேன்னு (மருத்துவமனையில்) சொல்லி அவருக்கு பொட்டு வைப்பது அடிப்பொலி ரகம் அதிலும் இடைவேளையில் விஸ்வரூபம் பாடலோடு ப்பா... பட்டாசு.. வெடி புகை அப்படியே ஆம்புலன்ஸ் சீன்ல அழ வச்சு...விருமாண்டி கணக்கா வெளியே வரும்போது தியேட்டரில் கைதட்டல் விசில்சத்தம். இடைவேளை கிளைமேக்ஸ் சரவெடி கொண்டாட்டம்.
இரண்டாம் பாதியில் பெண் விடுதலைப் பற்றி பெரியார் இத்தனை வருடங்களாக சொன்னதை பாடம் எடுக்காமல் அழகாக காட்சிகளில் வைத்து படத்தின் கலரை மாற்றிவிட்ட இயக்குனருக்கு ஒரு சாக்லேட் பொக்கே கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ரகலையான காமெடிகள் கச்சிதமான நடிகர்களின் தேர்வு. படத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்துக்கு பலம்ன்னா... பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி முனீஸ் காந்த் இளவரசு ஏன் அந்த குடிகார மாப்பிள்ளை, மகள் ரேச்சல், பேரன்.. ஏன் ஒரு குடிகார கேரக்டரில் வருபவர் கூட பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார்கள் நேர்த்தியான நடிப்பு.
"யார் துணையும் இல்லாமசுயமாக வாழ எதையாவது கத்துக்கணும்"ன்னு மககிட்ட பவுனுத்தாய் சொன்னதா... மருமகள்கள் கிட்ட சொல்ற சீன் வேற லெவல். சந்தோஷமா இருக்குறதுக்கு காசு வேணுமானு எனக்குத்தெரியாது. ஆனா மரியாதையாக இருக்கிறதுக்கு காசு வேணும்னு ச்சும்மா பொட்டிலறைந்தாற் போல் பவுனுதாயி சொல்லும் வசனங்களுக்கு திரையரங்கில் பலமான கைத்தட்டல்.
பெண் சும்மா இல்லாம ஏதாவது வேலை செய்யவேண்டும் அதுதான் அவளை கடைசி வரை காப்பாற்றும் அதுதான் உண்மையான சுதந்திரம்... ன்னு உலகப் பொருளாதார தத்துவத்தின் அடிப்படையை சும்மா போகிற போக்கில் பாடம் எடுத்து அனுப்பி இருக்கிறார் இயக்குனர்.
பென்னிகுவிக் (முனீஸ் காந்த்) பாத்திரத்தின் வழியாக அவர் மருத்துவமனையில் இருந்து திருமணத்தைக் குறித்து பேசும்போது ஒவ்வொரு ஆணும் தன்னோடு எப்போதும் இருக்கிற பெண்ணின் இருப்பை அவளது வலிமையை அவளது மேன்மையை உணர்த்திய விதம்... இயக்குனருக்கு பெரிய ராயல் சல்யூட். வைக்க சொல்கிறது.
அந்தக் கருப்பசாமி சிலை, அது இருக்கிற இடம், விளக்கு ஏற்றுகிற கங்காரு அடிகளார். இப்படி சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வரும் நபர்களும் மிகவும் அழகாக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்
மானுடத்தின் ஆழமான உணர்வுகளை எளிமையாக இலகுவாக வயிறு வலிக்க சிரித்தபடியே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சுருளியின் மறுமணத்தின் வழியாக ஆணதிகாரத்தை உடைத்து நொறுக்கியும், பண்பாட்டின் பெயரில் நடக்கும் திருமண ஊழல்களை செருப்பால் அடித்தும், சேமிப்பு ஒரு குடும்பத்திற்கு எவ்ளோ முக்கியம்.முக்கியமா பெண்களுக்கு எவ்ளோ முக்கியம்.
பெண்கள் பொருளீட்டும் வலிமையை பெறுவதுதான் அவர்களது விடுதலைக்கு இருக்கும் ஒரே நேர்மையான வழி என்றும் உலக பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் சும்மாபோகிற போக்கில் பாடமும் எடுத்திருக்கும் இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு அழகான ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்து.
நடை உடை உடல் மொழி என கலக்கி இருக்கும் ராதிகா.. பவுனுதாயாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த முறை அவருக்கு அவார்டு நிச்சயம். பொருளாதார தற்சார்பு, சுயமரியாதை சேமிப்பின் அவசியம்... இப்படி எல்லாவற்றையும் சுருக்குப் பையில் போட்டு கலகல கல்லா கட்டி இருக்கிறார் இந்த தாய்க்கிழவி.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மூத்த தலைமுறையின் அவசியத்தை புரியவைத்த படம். படம் பார்க்கும் அனைவரும் இந்த தாய்க்கிழவியை தன் வீட்டு நபரோடு கற்பனை பண்ணுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்.