
மலையாளத் திரையுலகில், வாரம் ஒரு போலீஸ் விசாரணைப் படங்களைக் கொண்டுவருவது என முடிவு செய்துவிட்டார்கள் போல. அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் சில படங்கள் தனித்து நிற்கின்றன. அப்படியொரு படம் தான் ரேகா சித்திரம்.
மிகப்பெரிய பணக்காரரான சித்திக் ஒரு காட்டின் நடுவில் சென்று அமர்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு முன் வாலிப வயதில் தான் செய்த ஒரு குற்றத்தைப் பேஸ் புக்கில் நேரடியாக ஒப்புக்கொண்டு செத்துப் போகிறார். அவர் இறந்து கிடந்த இடத்தில் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. அது யாருடையது?
இரண்டு நண்பர்களில் ஒரு சிறுவன் தன் தந்தை ஒரு திரைப்படத்தில் நடிப்பதாகச் சொல்கிறான். அவரும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு பெண்ணின் பிணத்தை எடுத்துச் செல்வதை பார்த்ததாகவும், அது ஒரு படத்தில் வரும் காட்சி என்றும் சொல்கிறான் அந்தப்படத்தின் பெயர் 'காதோடு காதோரம்'. பரதன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம்.
ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் சம்பாதித்ததாகப் பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்பரில் சிறிய ஊருக்குப் பணிமாற்றம் செய்யப்படுகிறார் விவேக் (ஆசிப் அலி). அந்த ஊரில் தான் இந்தத் தற்கொலை நடக்கிறது. தற்கொலை செய்து கொண்டவர் குறிப்பிட்ட நபர்களில் சிலர் வலுவான கைகள் என்பதால் விசாரணை துரிதப்படுத்தப் படுகிறது.
உண்மையில் நடந்தது என்ன? அந்த எலும்புக்கூடு யாருடையது? குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப் பட்டார்களா? என்பது தான் ரேகா சித்திரம் படத்தின் கதை.
சாதாரண சம்பவமாக ஆரம்பிக்கும் இந்தக் கதை நான் லீனியர் பாணியில் முன்னும் பின்னும் பயணிக்கிறது. பிளாஷ் பேக்கில் அந்தக் காதோடு காதோரம் படத்தின் படப்பிடிப்புகளும் அங்கு நடந்த சம்பவங்களும் இந்தப்படத்தின் கதையோடு செல்லுமாறு அமைந்திருந்தது சிறப்பு. நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான படத்தில் நடித்த ஒரு பெண் (அனஸ்வரா) எதிர்கொண்ட மனிதர்களும் சம்பவங்களும் இன்று அவர்கள் குடும்பம் இருக்கும் நிலையையும் இணைத்துத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஜாபின் டி சாக்கோ.
படத்தின் சுவாரஸ்யமே எண்பதுகளில் வெளிவந்த அந்தப்படத்தின் காட்சிகளை இந்தப் படத்தின் திரைக்கதைக்குள் நுழைத்தது தான். இயக்குனர் பரதன், மம்மூட்டி, ஜான் பால் போன்றவர்களைப் போன்ற உருவ அமைப்பு உள்ளவர்களைப் பயன்படுத்தியது, படத்திற்குள் நடக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள், படத்தின் சுவாரஸ்யத்தைத் தாங்குகின்றன. ஒரு கட்டத்தில் என்ன நடந்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டதால் எப்படி என்பதைக் காட்ட இவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் தான் சற்று பொறுமையைச் சோதிக்கிறது. மனோஜ் கே ஜெயன் பாத்திரம் வரும்போதே இவர் நல்லவர் இல்லை என்பது தெரிந்து விடுகிறது. அந்த நால்வரில் இவர் யார் என்பதும் இவரைத் தூண்டுவது யார் என்பதும் தான் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு கடைசியில் வெளிப்படுகிறது.
கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் சில பாத்திரங்கள் உடனடியாக மரணிப்பது விசாரணையைத் தடுக்க எனப் புரிந்தும் பெரிய அளவில் பரபரப்பு காவல்துறை அளவில் தொற்றிக்கொள்ளவில்லை. பரபரப்பான பின்னணி இசையும் ஸ்லோ மோஷன் காட்சிகளும் எவ்வளவு நேரம் படத்தைக் காப்பாற்றும். எல்லாம் முடிந்து உண்மைக் குற்றவாளியை நெருங்கும் நேரம் அப்பாடா என்று தோன்றுவது இதுவரை நடந்த முயற்சிகளுக்கு அவ்வளவாகப் பலம் சேர்க்கவில்லை எனது தோன்றியது. அனஸ்வரா ராஜன் அந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதம். சில இடங்களில் பரிதாபம் வந்தாலும் நடிப்பதற்குப் பெரிதாகக் காட்சிகள் இல்லை என்பதும் உண்மை. தனது சினிமா ஆசையை விடமுடியாமல் அவர் தவிக்கும் காட்சிகள், அவரது தந்தையின் கண்டிப்பை மீறி அவர் நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றை இன்னும் சற்று காட்சிப்படுத்தி இருக்கலாம்.
சோனி லிவில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் இந்த வருடத்தின் முக்கியமான வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மலையாளப் படங்களுக்கே உரிய மெதுவாக நகரும் திரைக்கதை, அலட்டலில்லாத நடிப்பு, இவையெல்லாம் உங்களுக்குத் பிடிக்கும் என்றால் இந்தப் படம் உங்களுக்கு பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. திரைக்கதையை இன்னும் சற்று இறுக்கமாக அமைத்துத் திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகளுக்குக் கத்தரி போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இந்திரன்ஸ், ஜெகதீஷ், ஜரின் சிஹாப், என இன்னும் பலர் நடித்து இருக்கிறார்கள். டெக்னிக்கல் விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. கிரைம் திரில்லர் ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். தொடர்ந்து இது போன்ற படங்கள் பார்த்து வருபவர்களுக்கு இன்னுமொரு படம்.