
பிரம்மாண்டம் என்பது கோடிக்கணக்கில் செட் போட்டுப் படம் எடுப்பது மட்டுமல்ல. பெரிய நட்சத்திரப் பட்டாளமோ, கிராபிக்ஸோ அவசியமில்லை. காட்டுக்கு நடுவில் ஒரு பங்களா. மூன்று கார்கள். நான்கு பைக்குகள். துப்பாக்கிகள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பரபரவென்று திரைக்கதை மட்டும் அமைந்தால் போதும். கண்ணிமைக்காமல் படத்தைப் பார்த்து முடித்துவிடலாம். அப்படி வந்திருக்கும் ஒரு மலையாள படம் தான் ரைபிள் கிளப்.
நெட்ப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் வாயிலாக, சின்னக் கருவை வைத்துக் கொண்டு அதை எப்படியொரு ஆக்க்ஷன் த்ரில்லராக மாற்ற முடியும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். மங்களூரில் ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒரு கும்பலின் தலைவர் அனுராக் காஷ்யப். ஒரு நைட் க்ளப்பில் நடக்கும் தகராறில் தனது காதலியைக் காப்பாற்ற, அவரது மகனை மாடியிலிருந்து தள்ளி விடுகிறார் அந்தக் கிளப்பில் நடனமாடும் ஒரு வாலிபர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து கண்ணூரில் உள்ள ஒரு துப்பாக்கி கிளப்பில் இருக்கும் தனது நண்பரைப் பார்க்க ஓடி வருகிறது அந்த ஜோடி. தான் நடிக்கும் அடுத்தப் படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்று அதே க்ளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கற்றுக் கொள்ள வருகிறார் அந்த இளம் நாயகன்.
அது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புராதனமான க்ளப். அதன் தலைவர் விஜயராகவன். அவரது மகன்கள் திலீஷ் போத்தன். விஷ்ணு. இவர்களது மனைவிகளாக உன்னிமயா பிரசாத், தர்ஷனா ராஜேந்திரன். இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். அனைவரும் துப்பாக்கி சுடுவதில் வல்லவர்கள். இவர்களிடம் அடைக்கலம் அடைந்திருக்கும் ஜோடியைத் தேடி அவர்களைப் பழி வாங்க வருகிறது அனுராக் காஷ்யப்பின் கும்பல்.
விதவிதமான ஆயுதங்கள் விற்பதையே ஒரு தொழிலாகக் கொண்டு எதற்கும் அஞ்சாத கும்பலுக்கும் இந்தக் குடும்பத்திற்கும் நடக்கும் சண்டை தான் கதை. எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுகிறது படம். அந்த க்ளப்பில் உள்ள அனைத்துப் பாத்திரங்களையும் போகும் போக்கில் அறிமுகப் படுத்துகிறார் இயக்குனர் ஆஷிக் அபு.
இதில், இரவு உணவு உண்ணும் காட்சி ஒன்று வரும். படத்தின் மிக முக்கியமான காட்சி அது. அவ்வளவு இயல்பாக அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும். அதே போல் தான் அனுராக் காஷ்யப்பின் இன்னொரு மகன் தனது கும்பலுடன் இவர்களை மிரட்டும் காட்சியும்.
தமிழ்ப் படங்களில் நடிக்க அழைத்து அனுராக் காஷ்யப்பை வீணடித்து விடுவார்கள் இயக்குனர்கள். மகாராஜா ஒரு விதிவிலக்கு. இதில் படம் முழுதும் வரும் வில்லனாக நன்கு செய்திருக்கிறார். கடைசியில் உள்ளே இருக்கும் திலீஷ் போத்தனுடன் இவர் பேசிக்கொண்டே சண்டைக்குத் தயாராகும் காட்சி ஸ்மார்ட் ரைட்டிங்கிற்கு ஒரு உதாரணம். வசனங்களும் பல இடங்களில் கூர்மையாகவே உள்ளன.
'ஒரு நல்ல துப்பாக்கிக்கு முதலாளி என்று யாரும் கிடையாது. தனது வாரிசை அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.'
'எல்லாருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வேட்டையாட விரும்புவதில்லை.'
'எந்த நிலையிலும், தரை ஆடினாலும் துப்பாக்கி பிடித்திருக்கும் கை ஆடக் கூடாது.'
'நாம் அனைவரும் துப்பாக்கி உபயோகிப்பதில் ஜித்தர்கள் என்றால் அனைவரையும் சாய்த்த பிறகு நமக்கு மூன்று குண்டுகள் மிச்சம் இருக்க வேண்டும்.'
இப்படிப் பல சுவாரசியமான வசனங்கள். திலீஷ் போத்தன் தான் தந்தையாகப் போகிறோம் என்று சண்டைக்கு நடுவே அறிவிப்பதும் அதற்கு வாழ்த்தைப் பெறுவதும் புன்னகை வரவழைக்கும் காட்சி. படத்தில் நாம் எதிர்பார்க்காத சில பாத்திரங்களுக்குக் கூட மாசான ஒரு காட்சியை வைத்து ஆச்சரிய படுத்தியிருக்கிறது இந்தக் குழு. என்ன தற்போது மலையாள படவுலகை பிடித்து ஆட்டும் ஸ்லோ மோஷன் மோகம் இதிலும் சற்று அதிகமாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆஷிக் அபுவின் ஒளிப்பதிவும் ரெக்ஸ் விஜயனின் இசையும் வி.சாஜனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பெரிய பலம். பாடல்கள் பரவாயில்லை.
எங்களுக்கு வருடக்கணக்கில் எல்லாம் படம் எடுக்காத தேவையில்லை. யார் இருக்கிறார்களோ அவர்கள் போதும். டெக்னீக்கலாகவும், ரிச்சாகவும், அதே சமயம் தரமாகவும் எங்களால் படம் எடுத்து வெற்றி பெற முடியும் என்று மலையாளத் திரையுலகம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது.