ஒரு கொள்ளையும் பதினைந்து ஆண்டு கால கண்ணாமூச்சி ஆட்டமும்!

Sikandar Ka Muqaddar Movie Review
Sikandar Ka Muqaddar Movie Review
Published on

தன்னைக் குற்றவாளி என்று அபாண்டமாகச் சிக்க வைத்த ஒரு போலீஸ்  அதிகாரி தன்னிடம் முகம் பார்த்து மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று சொல்லும் நாயகன் சிக்கந்தர் (அவினாஷ் திவாரி). தனது உள்ளுணர்வு இதுவரை தவறே செய்ததில்லை. நான் குற்றவாளி என்றால் அவன் குற்றவாளி தான். எனது சக்ஸஸ் ரேட் நூறு சதவீதம் என்று உலா வரும் அந்த அதிகாரி ஜஸ்விந்தர்  (ஜிம்மி ஷெர்கில்). இவர்களுக்கிடையில் நடக்கும் பதினைந்து ஆண்டு கால கண்ணாமூச்சி ஆட்டம் தான் சிக்கந்தர் கா முக்கத்தர்.

கம்பியூட்டர் சிஸ்டம் ரிப்பேர் செய்யும் சாதாரண மத்திய தர வர்க்க ஆசாமி சிக்கந்தர். பம்பாயில் நடக்கும் ஒரு நகைக்கண்காட்சியில் பொருத்தப்பட்டுள்ள கணினிகள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கச் செல்கிறார். அங்கு வைர நகைகள் விற்கும் ஒரு ஸ்டாலில் பணியாற்றுகிறார் தமன்னா. ஒரு குறிப்பிட்ட தினத்தில் அந்தக் கண்காட்சியில் கொள்ளையடிக்க நான்கு பேர் கொண்ட கும்பல் முயல்கிறது. இதுகுறித்து துப்புக் கிடைத்த காவல்துறை வந்து அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுகிறது. இந்தக் களேபரத்தில் தமன்னாவின் கடையில் இருந்த விலைமதிப்புள்ள வைரக்கற்கள் திருடு போய் விடுகின்றன. அங்கிருந்த சிக்கந்தர், மற்றும் தமன்னாவின் மேலாளர் ஆகியோரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார் ஜஸ்விந்தர். 

துவக்கத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் முட்டிக் கொள்ள தன்னை அடித்து விசாரிக்கும் ஜஸ்விந்தர் தன்னிடம் ஒரு நாள் மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் இது நடந்தே தீர வேண்டும் என்று அவரிடம் சூளுரைக்கிறார். இந்தக் குற்றம் என்னவாயிற்று. இவர்களுக்கிடையிலான மோதல் எப்படி முடிவுக்கு வந்தது என்பது தான் கதை.

நான் லீனியர் பாணியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பின் என்று சொல்லப்படும் இந்தக் கதை ஒரு ஹைஸ்ட் த்ரில்லர் பாணியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கதைக்குத் தேவையான, சில சமயம் தேவையே இல்லாத திருப்பங்களுடன் பரபர வென்று நகர்கிறது. முக்கிய கட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு என்று நகர்ந்து விடுவதால் அவர் நிரபராதி என்று புரிய வைத்தாலும் அந்த மன்னிப்பு சமாச்சாரத்தை வைத்து நகர்கிறது.

இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. ஏற்றுக் கொண்ட பாத்திரத்திரங்களுக்கு குறைவு இல்லாமல்  நடித்தும் இருக்கின்றனர். அந்த இன்ஸ்பெக்டர் மேல் நமக்கு வெறுப்பு வரும்போது அது தவறோ என்று நினைக்கும் ஒரு திருப்பம். சந்தேகக் கண்ணோட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் போதாதென்று கிளைமாக்சில்  மற்றுமொரு ட்விஸ்ட்டோடு படத்தை முடிக்கிறார் அல்லது தொங்கலில் விடுகிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே.

இதையும் படியுங்கள்:
தலைய சுத்துதடா சாமி! டெல்லியில் 'புஷ்பா 2: தி ரூல்' ஒரு டிக்கெட் விலை 2600 ரூபாயாமே!
Sikandar Ka Muqaddar Movie Review

சற்றே மெதுவாக நகர்ந்தாலும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நம்மை அமர வைத்து விடுகின்றன. லாஜிக் மீறல்கள் இது போன்ற கதையில் தவிர்க்க முடியாதவை. இது எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்கும் ஒரு விஷயத்தைப் பரபர எடிட்டிங்கில் சொல்வது, கடைசியில் உண்மையான குற்றவாளி யார் என்று தெரியும் நேரம் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது போன்ற சில குறைகளும் இல்லாமல் இல்லை. க்ரீன்  மேட்டில் எடுத்து இவர்கள் கிராபிக்சில் கோர்த்திருக்கும் ஆக்ரா, மற்றும் அபுதாபி நகரங்கள் பொருந்தவே இல்லை. சிக்கந்தரின் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகான மேக்கப் இன்னும் அபத்தம். 

ஒரு கொள்ளை தொடர்பான படமான இதை எடுத்துச் செல்லாமல் இரு மனிதர்களுக்கிடையில் நடக்கும் ஈகோ மோதலாகக் கொண்டு சென்றது சுவாரசியம். தமன்னா நடிப்பைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனாலும் பெரிய சண்டைக்காட்சிகளோ குத்தாட்டங்களோ இல்லாமல் ஒரு படத்தை எடுத்ததற்கே பாராட்டு.

நெட் ப்ளிக்சில் வெளியாகியுள்ள இந்தப் படம் நிச்சயம் ஒரு டைம் பாஸ். நீரஜ் பாண்டேவின் முந்தைய படங்களில் இருந்த அழுத்தம் இதில் இல்லாமல் போனது ஒரு மிகப் பெரிய குறை. அதுவே இதை நல்லா இருக்கு என்று சொல்ல வைக்காமல் ஏதோ ஓகே என்று சொல்ல வைத்து விடுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com