நாள்தோறும் ஏகப்பட்ட சீரியல்கள் பல சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டாலும், சிங்கப்பெண் போன்று சில சீரியல்கள், சின்னத்திரை ரசிகர்களை நன்றாகவே கவர்ந்து வருகின்றன. வாழ்வின் மேடு பள்ளங்களை மிகச் சிரமப்பட்டுக் கடக்க நினைக்கும் ஒரு கிராமத்துப் பெண், சிட்டி வாழ்க்கையில் இரண்டு இளைஞர்களுக்கு நடுவில் சிக்கிக் கொள்வதும், எதிர்பாராத விதமாக அவளேயறியாமல் அவள் கர்ப்பமாக்கப்படுவதும், அதற்குக் காரணமானவனைக் கண்டுபிடிக்கத் தோழிகளுடன் சேர்ந்து அவள் செய்யும் முயற்சிகளும், பாராட்டும் விதமாக அமைந்துள்ளன.
தனது அக்காவின் திருமண நிகழ்ச்சியில் எது நடக்கக்கூடாதென்று அவள் பயந்திருந்தாளோ அது வில்லன் மூலமாக அரங்கேற்றப்பட, அந்தச் சூழ்நிலையிலும் அனைவரின் முன்பும் உண்மையை ஒத்துக் கொள்ளும் அவள் கதாபாத்திரம், நம் உள்ளத்தில் உயர்ந்தே நிற்கிறது. ’உண்மையே தெய்வம்‘ என்ற காந்தியடிகளின் கொள்கையை நினைவு கூர்கிறது. திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கர்ப்பமாவதும், அதிலும் அதற்குக் காரணம் யாரென்று அவளுக்கே தெரியாது என்பதும், தமிழ்த் திரையுலகுக்குப் புதுமையானது! அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத இதை, அனைவரும் ஏற்றுக் கொண்டு, அவளுக்காக அனுதாபப்படும் விதமாகக் கதையைக் கொண்டு செல்வதில், பொறுப்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இன்விசிபில் மேனாக இருந்து தன் காதலை வளர்த்துக் கொண்ட அன்பு, தன் முதலாளியும் தன் காதலியை விரும்புவதை அறிந்து, தன் காதலைத் தியாகம் செய்ய முதலில் துணிவதும், பின்னர் காதலியின் விருப்பமறிந்து ஒன்று சேரத் துடிப்பதும், நன்றாக உள்ளன. ’அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டு, அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பாசமுள்ள தந்தையாகவும் இருந்து பாதுகாப்பேன்’ என்று கூறுவது, உண்மைக் காதலின் உயர் கோட்பாடு. இது மிக நன்றாக உள்ளது.
தான் ஒரு முதலாளி! தன்னிடம் வேலை செய்யும் ஒரு கிராமத்துப் பெண் எளிதாகவே தன்னை ஏற்றுக் கொண்டு விடுவாள் என்ற மன நிலையில் இருந்தாலும், காதலை மதித்துச் சமயம் பார்த்துக் காதலை வெளிப்படுத்துகிறான் மகேஷ். அவளோ, அவனை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவதாகவும், ஆனால் காதலிக்கவில்லை என்றும் கூறிவிட, அப்செட் ஆகி விடுகிறான். இருந்தாலும் அவள் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறான். அவள் ப்ரக்னண்ட் என்ற செய்தி எல்லோருக்கும் பரவி, கடைசியாகவே அவன் காதுகளுக்கு வருகிறது. அதற்காகத் தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேரிடமும் கோபம் கொள்கிறான். ஆனந்தியிடமும் ‘தான் கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று ஆதங்கப்படுகிறான்.
அதற்குக் காரணம் அவளுடன் நெருங்கிப் பழகிய அன்பாகவே இருக்க வேண்டுமென்று உறுதியாக நம்புகிறான். இந்தச் சமயத்தில் அன்புக்கும், அவன் மாமன் மகளுக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடு அன்பின் இசைவுடனே நடைபெற்று வருவதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான்.
தான் காதலித்த பெண் ஏமாற்றப்படப் போகிறாளே என்ற எண்ணத்தில், அன்புக்கு வில்லனாக மாறி, நண்பர்கள் உதவியுடன் அவனைக் கடத்தி, ஆனந்தியைத் திருமணம் செய்து கொள்ளச்சொல்லி, சித்திரவதை செய்கிறான்.
‘தன் கண்முன்னாலேயே காரில் கடத்தப்பட்ட அன்பை மீட்காமல், தண்ணீர் கூடக் குடிப்பதில்லை’ என்ற வைராக்கியத்துடன், சோலோவாகவே ஆனந்தி முயல்கிறாள்.
‘சிங்கம் தனியாகத் தான் வரும்’ என்பதற்கிணங்க, சற்றும் தளராமல் முயன்றதன் பயனாக, மகேஷ்தான் அன்பைக் கடத்தியுள்ளான் என்பதை, அவனைப் பின்தொடர்ந்து சென்று, கையும் களவுமாகக் கண்டு பிடித்து, அன்பை மீட்கிறாள். துளசியின் குட்டு யாழினிக்குத் தெரிந்து விட, யாழினி ஆனந்திக்கு ஆதரவாகச் செயல்பட ஆரம்பிக்கிறாள். அன்பு, காரில் செல்லும் மகேஷைத் தன் டூ வீலரால் நடு ரோட்டில் நிறுத்தி மறித்து, உண்மையைச் சொல்ல, மகேஷ் அன்புவிடமும், அதனைத் தொடர்ந்து ஆனந்தியிடமும் மன்னிப்பு கோருகிறான்.
காதலிக்காக எதையும் இழக்கவும், விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்கும் அன்பு ஒரு புறம் என்றால், தான் காதலித்த பெண் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மகேஷ் மற்றொரு பக்கம்.
இதுவே உண்மைக் காதலின் உயரிய பண்பு! அதனால்தான் காதல், காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. இந்த மண்ணும், வானும், கடலும் மனிதவாழ்வும் உள்ளவரை, அது வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
அதனைப் பண்பு மாறாமல் வாழ வைக்க, அன்பு, மகேஷ் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களைப் போல் உண்மைக் காதலர்கள் மாற வேண்டும். காதல் உண்மையாய் இருந்தால், நிச்சயம் மாறத்தானே செய்வார்கள்!
நாயகி ஆனந்தி, இறுதியில் யாரைத்தான் கை பிடிக்கப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு, உங்களைப் போலவே எனக்கும் எகிறிக் கொண்டே போகிறது!
பொறுத்திருந்துதானே பார்க்க வேண்டும்! பொறுத்திருப்போம்!