
விதவிதமான, புதுமையான ஷோக்களை நடத்துவதில் சன் டிவிக்கு போட்டியாக வலம் வருவது என்றால் இது விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பின்னாளில் மிகவும் பிரபலமாவார்கள் என்பது நிச்சயம். ‘சிவாங்கி’ என்ற பெயரை கேட்டாலே அனைவரும் தெரியும். இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் சிவாங்கி. அனைவரின் தனித்துவமான பாடும் திறமை மற்றும் நகைச்சுவையான தன்னிச்சையான தன்மை அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.
அந்த வகையில் சிவாங்கிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி என்றே சொல்லலாம். 'சூப்பர் சிங்கர் 7' நிகழ்ச்சியில் தொடங்கிய பயணத்தின் மூலம் புகழ் பெற்ற சிவாங்கி, 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாதியில் இவர் வெளியேற்றப்பட்டாலும், உண்மையான திறமை இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு சான்றாகத்தான் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாட்டுப்பாட அனுமதி கிடைத்தது. அதில் தன்னுடைய பாடல்கள் மூலம் அனைவரையும் அதிர வைத்தார்.
விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி நான்காவது சீசனில் அதிரடியாக குக்காக மாறி புதுமையான சமையல்களை செய்து அங்கிருந்த நடுவர்களை அசத்தினார். இவருடைய இந்த மாற்றம் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின், படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வாறு படிப்படியாக முன்னேறிய சிவாங்கி தற்போது பின்னணி பாடகி , நடிகை, தொகுப்பாளினி என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் மிகவும் பிஸியாக வலம் வருகிறார்.
விஜய் டிவியில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குக் வித் கோமாளி' போலவே சன் டிவியில் 'டாப் குக் டூப் குக்' என்று ஒரு நிகழ்ச்சியை தொடங்கினர். இதில் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் 'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் சீசன் 1 ஓரளவிற்கு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் அதனை தொடர்ந்து இப்போது சீசன் 2க்கு அறிவிப்பு வந்துள்ளது.
இந்த 2-வது சீசனின் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது தான் ஹாட் நியூஸாக இணையத்தில் வலம் வருகிறது. அவர் வேறு யாரும் இல்லீங்க, நம்ம சிவாங்கி தான். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சிவாங்கி தற்போது சன் டிவிக்கு மாறி உள்ளார்.
குக் வித் கோமாளியில் சிவாங்கியின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்ததால் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'டாப் குக் டூப் குக்' ஷோவை இவர் தொகுத்து வழங்கினால் ரசிகர்களை கவர முடியும் என்று நிறுவனம் காய் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
'டாப் குக் டூப் குக்' ஷோ தொடங்க உள்ளதை முன்னிட்டு சிவாங்கியை வைத்து அனைவரும் ரசிக்கும் படி ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
சிவாங்கியின் தனித்துவமான வசீகரமும் நகைச்சுவை திறனும் முன்னணியில் இருப்பதால், வரவிருக்கும் 'டாப் குக் டூப் குக்' சீசன் 2ல் ஏராளமான வேடிக்கை, கலட்டா, புதுமையான உணவுகள் மற்றும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியளிக்கிறது. ‘குக் வித் கோமாளி’யில் சிவாங்கியின் நகைச்சுவை கலாட்டாவை பார்த்து ரசித்த ரசிகர்கள் இனி ‘டாப் குக் டூப் குக்’ ஷோவில் ரசிக்கலாம்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பெற்ற வரவேற்பை போல் 'டாப் குக் டூப் குக்' ஷோவை டாப் நிகழ்ச்சியாக மாற்ற சிவாங்கியை அதிரடியாக களம் இறங்கி இருக்கும் சன் டிவியின் முயற்சி வெற்றியை தேடித்தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.