மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது காலையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் நிறைய விளம்பரங்களிலும் ஆவணப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்கள்! இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார். இது சினிமா உலகத்தையே பேரதிர்ச்சியில் தள்ளியது.
இதுத்தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இதில் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
அதாவது இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேமந்த்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இதை எதிர்த்து சித்ராவின் தந்தை மேல்முறையீடு செய்திருந்தார். சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் காமராஜ். இவர் தனது மகள் இறப்பால் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். தனது மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் போராடினார்.
அந்தவகையில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
இப்படியான சூழலில் சித்ராவின் தந்தை திருவான்மையூரில் உள்ள தனது வீட்டில் தனது மகள் சித்ராவின் துப்பாட்டாவால் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் இறப்பிற்கு நீதி, நியாயம் கிடைக்குமா கிடைக்காதா என்ற விரக்தியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
சித்ராவும் டிசம்பர் 9ம் தேதிதான் இறந்தார், தற்போது அவரது தந்தையும் அதேபோல் தூக்கிட்டு டிசம்பர் மாத கடைசி நாளில் இறந்திருக்கிறார்.
இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.