ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும் அடுத்த ஆண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நள்ளிரவு இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொது மக்கள் விமர்சியாக கொண்டாடுவார்கள். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான முறைகளில் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தியாவில் நியூ இயர் பார்ட்டி, சினிமா, கேளிக்கை விடுதி, சென்னையில் குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட முக்கிய கடற்கரை என பல்வேறு இடங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் என ஏராளமானோர் திரள்வார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ என ஒருமித்த குரலில் உற்சாக குரல் எழுப்பி தங்கள் சந்தோஷத்தை அனைவருடன் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், கேக்குகள் வெட்டப்பட்டு கூட்டத்தினருக்கு வழங்கப்படும். பலர் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்பார்கள். பட்டாசுகளும் வெடிக்கப்படும். ஒரு சில நியூ இயர் இரவு 12 மணிக்கு வழிபாட்டு தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது, ஒன்றாக உணவு உண்பது போன்ற திட்டங்களை வைத்திருப்பர்கள்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே ஆண்டுதோறும் சில அசம்பாவிதங்களும் நடந்த வண்ணம் தான் உள்ளது. இவ்வாறு எந்த அசம்பாவிதமும் நடக்காத வகையில் இந்தாண்டு, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில் இணை மற்றும் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், இன்றும், நாளையும் 19 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடுவதற்கு மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று (டிச.31-ம் தேதி) முதல் நாளை (ஜன.1-ம் தேதி) காலை 6 மணி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை 6 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதே போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்துக்கு தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் 1-ந்தேதி அன்று 6 மணி வரை மூடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு 17 இடங்களை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிவேகமாக ஆபத்தான முறையில் வாகன ஓட்டுதல், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுதல், மதுபோதையில் சண்டை போடுவது, கும்பலாக மது அருந்துவது போன்ற விதிமீறல்களை நவீன கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2025 புத்தாண்டை இனிதாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடிட அனைவருக்கும் வாழ்த்துகள்.