தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக: நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான்... தொகுப்பாளராக சமந்தா...!!

சோனி லிவ் மற்றும் சோனி விழாவில் களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சமந்தா! தமிழ் ஐடல் மற்றும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிகளின் முழு விவரங்கள்.
Sony liv reality show
AR Rahman SamanthaSony Liv
Updated on

இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் , சோனி நிறுவனத்தின் சோனி விழா மற்றும் சோனி லிவ் (LIV) ஆகியவை , ஒரு சேர அதிரடியான சில நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளன. சின்னத்திரைகளில் மிகவும் பிரபலமான ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை சோனி நிறுவனம் வழங்க தயாராகிவிட்டது. இதற்காக ஆஸ்கார் விருது வென்ற உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மானையும் தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகை சமந்தாவையும் களத்தில் இறக்கியுள்ளது.

ஐடல் என்ற பெயரில் பாடகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள், உலக அளவில் பல்வேறு நாடுகளில் அதிக பார்வையாளர்களை கொண்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சோனி நிறுவனத்தின் 'இந்தியன் ஐடல்' நிகழ்ச்சி வட இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது, ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இதன் தமிழ் பதிப்பாக 'தமிழ் ஐடல்' என்ற நிகழ்ச்சியை சோனி விழா மற்றும் சோனி லிவ் முதன்முறையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

புதிய கலைஞரின் குரல் வளத்தை முன்னிறுத்தும் ரியாலிட்டி ஷோவாக இந்த நிகழ்ச்சி இயங்குகிறது. இந்த ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை அவர்களின் குரல் தேர்வின் மூலம், முதலில் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் போட்டிகள் நேரடியாக நீதிபதிகள் முன்னிலையில் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் அவர்களின் குரல் திறனை சோதனை செய்ய, திரைத்துறையை சார்ந்த புகழ்பெற்ற பாடகர்கள், பாடகிகள் அல்லது இசை கலைஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த மதிப்பெண் வழங்கி அவர்களை போட்டியின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவார்கள். போட்டியில் பின் தங்குபவர்களை போட்டியிலிருந்து இருந்து வெளியேற்றுவார்கள்.

பார்வையாளர்களின் சுவாரசியத்தை கூட்டுவதற்கு நீதிபதிகளும் ஒரு சில நேரங்களில் பாடல்களை பாடி தங்களது திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக புகழ்பெற்ற திரை பிரபலங்களையும் அழைத்து நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தினை இன்னும் அதிகப்படுத்துவார்கள்.

A.R. Rahman
A.R. Rahman

இந்த ரியாலிட்டி ஷோவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தலைமை தாங்க உள்ளார். இது குறித்து ரஹ்மான் ​"புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இசையின் முக்கியமான பயணம். அந்தக் குரல்கள் ஒருநாள் பல லட்ச மக்களைச் சென்றடையலாம். இந்த பயணத்தின் மூலம் புதிய திறமைகள், புதிய கோணம் மற்றும் பல தலைமுறைகளின் சொல்லப்படாத கதைகளை நாம் கண்டுபிடிக்கின்றோம். தமிழ் ஐடல் மூலம் தமிழ்நாட்டின் சிறப்பான குரல்களை ஒன்றிணைத்து அவர்களின் திறமையை கொண்டாட ஒரு மேடையை வழங்கி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

அதேபோல் சர்வதேச புகழ்பெற்ற செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப் (Celebrity Master chef) நிகழ்ச்சியை நடிகை சமந்தா சோனி விழா சேனலில் தொகுத்து வழங்க உள்ளார். சமந்தா இதற்கு முன்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சமையல் திறனை அறிவது மட்டுமல்லாமல் , அவர்களின் தனித்திறமை, நகைச்சுவை, அர்ப்பணிப்பு உணர்வு , கலைத்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ள பார்வையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இது குறித்து சமந்தா , "இதற்கு முன் இது போன்ற நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதில்லை, இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தினால் என்னால் வேண்டாம் என்று தவிர்க்க முடிய இல்லை. நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி அழகான பல நினைவுகளை உருவாக்கும். நமக்கு பிடித்தமான பிரபலங்கள் சமையலறையில் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்க உள்ளனர். உங்களைப் போலவே நானும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சோனி நிறுவனத்தின் இந்த அதிரடியான முயற்சிகள் , தமிழகத்தில் தொலைக்காட்சி துறையில் ஏற்கனவே உள்ள பிரபலமான சில சேனல்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. தமிழ் ஐடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் சோனி லிவ் ஆப் மூலம் பங்கேற்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com