
ஓர் அழுத்தமான திரைக்கதையும் நல்ல நடிகர்களும் அமைந்து விட்டால் எப்படியொரு படம் முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களைக் கட்டிப் போடும் என்பதற்கு உதாரணம் ஸ்டோலன்.
அபிஷேக் பானர்ஜி, சுபம் வரதன், மீரா மெஸ்லர் நடிப்பில் கரண் தேஜ்பால் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பல நாடுகளில் விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. சில திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றுள்ளது. இந்தப்படம் 2018 இல் அசாமில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு புகைவண்டி நிலையத்தில் ஐந்து மாதக் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கிறார் ஜும்பா என்ற பெண். அந்தக் குழந்தையை (சம்பா) ஒரு பெண் திருடிச் சென்று விடுகிறார். ஓடும்போது அங்கு வரும் ராமன் (ஷுபம் வரதன்) என்ற இளைஞன் மேல் மோதிவிட்டு ஓடும்போது குழந்தையின் குல்லா கீழே விழுந்து விடுகிறது.
அதை எடுத்து வைத்திருக்கும் அவனை ஜும்பா சந்தேகப்பட்டு கூச்சல் போடுகிறாள். ராமனின் அண்ணனான கௌதம் அவனை அழைத்துப் போக வெளியில் காத்திருக்கிறான். நிலைமையைப் புரிய வைத்துத் தனது நிலையை நிரூபித்தாலும் அந்தப்பெண்ணுக்கு உதவ முயல்கிறான் ராமன். அந்த ஒரு நிமிடம் எப்படி இந்த மூன்று பேர் வாழ்வையும் மாற்றுகிறது என்பது தான் படம்.
படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுகிறார்கள். ஒன்றரை மணி நேரம் ஓடும் நேரம் இந்தப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் நமது வயிற்றைப் பிசைகிறது. என்ன நடக்கும் என்ற பதற்றம் ஒட்டிக் கொண்டே வருகிறது. முதலில் காவலர்கள். பின்னர் வன இலாகா அதிகாரிகள். பின்னர் கிராமத்து முரட்டு இளைஞர்கள் என இவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு விஷயம் திரிக்கப்பட்டு வாட்சப்பில் பரப்பப்படும்போது அது எந்தமாதிரியான விளைவை உருவாக்குகிறது. அதில் வருவதை அப்படியே நம்பும் ஒரு கூட்டம் எப்படி முரட்டுத் தனமாக இவர்களை அணுகுகிறது என்பதைப் பார்க்கும்போது பதைபதைக்கிறது.
மூன்றே பாத்திரங்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி மோதல்கள், வார்த்தை பரிமாற்றங்கள் ஒவ்வொருவர் செயலிலும் இருக்கும் நியாயம், அவசரத் தன்மை, இவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. காவல்துறையின் மெத்தனம், இவர்களை அணுகும் முறை போன்றவை எரிச்சலை ஏற்படுத்தினாலும் அவர்கள் இறுதியில் நடந்து கொள்ளும் முறை ஆறுதல்.
ஓர் இரவு அல்லது ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதமாக இருக்க வேண்டிய நிலை. கிராமத்திற்குள் நடக்கும் போராட்டங்களின்போது பயன்படுத்தப்படும் சிங்கிள் ஷாட்கள், ஆயுதங்களுடன் இளைஞர்கள் வெறி கொண்டு துரத்தும் கார் துரத்தல்கள் எல்லாம் சபாஷ்.
தர்ம அடி என்றால் ஒன்று கூடும் ஒரு விதமான கும்பல் மனநிலை. என்ன தான் குழந்தைகள் காணாமல் போவது காரணம் என்று சொல்லப்பட்டாலும் பரப்பப்பட்ட வதந்திகளை மட்டும் வைத்து அவர்களைக் கொலை செய்யும் அளவு செல்வது எல்லாம் என்ன சொல்கிறது? உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மனிதன் சுயத்தை இழக்கிறான் என்பதைத் தான்.
அதுவும் அந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டு அபிஷேக் பானர்ஜி படும் காட்சி ஒன்று போதும் அவரது திறமைக்குச் சான்றாக. ரத்தம் சொட்டச் சளி ஒழுக்க நிலை குலைந்து அவர் விழுந்து கிடைக்கும் காட்சிகளில் இப்படி ஒருவருக்கு உதவி செய்து தான் ஆக வேண்டுமா என்று தோன்றுவது இயல்பு. இவரது மனமாற்றம் இயல்பாக நிகழ்வதும் இறுதியில் அவர் எடுக்கும் முக்கிய முடிவும் சபாஷ். இவரது தம்பியாக வரும் ஷுபமும் சரி ஜும்பாவாக வரும் மியாவும் சரி அந்தப் பாத்திரமாகவே நிற்கிறார்கள்.
இந்தப்படத்தின் கதை திரைக்கதையைக் கரண் தேஜ்பால், கௌரவ் திங்க்ரா, ஸ்வப்னில் சல்கர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இசை என்பது எங்கே வருகிறது என்று தெரியாமலே வந்து போவதும் படத்தின் இறுக்கத்திற்குக் கைகொடுத்திருக்கிறது. இஷான் கோஷின் ஒளிப்பதிவு மண்சாலைகளில் நடக்கும் கார் துரத்தலிலும், கிராமத்திற்குள் சந்து சந்தாகப் புகுந்து புறப்பட்டதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
மனிதாபிமானத்தின் காரணமாக ஒரு பெண்ணுக்கு உதவ நினைத்து அது உயிருக்கே ஆபத்தாக முடியும் இந்தப்படம் பார்த்தபிறகு ஏதாவது பிரச்சினை என்றால் ஒருவருக்கு உதவ நாம் ஒருமுறைக்குப் பல முறை யோசிப்போம் என்பதும் நிச்சயம்.
எந்த விதமான வணிகச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல், எடுத்துக் கொண்ட கதைக்கு உண்மையாய் வெளிவந்துள்ள, தவற விடக்கூடாத படம் தான் ஸ்டோலன்.