
ஒரு படம் பார்க்கும்பொழுது தன்னையறியாமல் எந்த இடத்தில் யாருக்காகக் கண்ணீர் திரள்கிறதோ அப்பொழுது அந்தப் பாத்திரம் நம் மனதில் நின்று விட்டது என்று அர்த்தம். அழ வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்க வேண்டியதில்லை. படத்துடன் பயணிக்கும்போது அது தன்னால் நிகழும். அப்படிச் சமீபத்தில் பார்த்து வியந்த படம் தான் ஸ்ட்ரா (STRAW)
டைலர் பெர்ரி இயக்கத்தில் தாராஜி பி ஹென்சென், ஷெரி ஷெப்பர்ட், டெனேனா டாய்லர் நடிப்பில் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள படம் தான் ஸ்ட்ரா. ஒரு செல்ல மகளுக்குத் தாயாக ஜெனாயா என்ற பாத்திரத்தில் தாராஜி. உடல் நலம் சரியில்லாத தனது மகளின் கஷ்டங்களைப் புரிந்து அதைத் தாங்கிக் கொண்டு ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும். அதற்காகத் தான் எந்தக் கஷ்டத்தையும் கடந்து செல்லலாம் என்று ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
நாற்பது டாலர் இல்லையென்ற ஒரு காரணத்தால் நல்ல உணவு உண்ணமுடியாமல் தன் மகள் பள்ளியில் அவமானப் படுகிறாள் என்று உணர்ந்து அதற்காக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கிறார். அப்படியொரு சமயத்தில் அவரே அறியாமல் ஒரு குற்றத்தில் மாட்டிக் கொள்கிறார். அந்த மகள் என்ன ஆனாள். அவருக்கு என்ன ஆனது. இது தான் படம்.
ஒரு பதினைந்து நிமிடத்தில் படம் ஒரு வங்கியில் சென்று நின்றுவிடுகிறது. கையில் துப்பாக்கியும் தோளில் ஒரு பையும் அணிந்து வரும் அவரது தோற்றத்தையும் மற்ற சில விஷயங்களையும் பார்த்து அவர் வங்கியைக் கொள்ளை அடிக்க வந்துள்ள ஒரு ஆள் என்று முடிவு செய்து விடுகின்றனர். வங்கியைக் காவல்துறை சூழ்ந்துகொள்கிறது. வாங்கிக்கொள்ளும், வெளியேயும் நடக்கும் உரையாடல்களும் நிகழ்வுகளும் தான் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேல். பேச்சு மட்டுமே இருந்தாலும் ஒரு விதமான பதற்றம் அனைவரையும் சூழ்ந்து கொள்கிறது. அவரே அறியாமல் மேலும் தாராஜி மேல் சந்தேகம் வலுக்கிறது. அவரது நிலையை ஓரளவு புரிந்து கொண்ட வங்கி மேலாளர் நிக்கோல் (ஷெர்ரி ஷெப்பர்ட்) காவல் துறையைச் சேர்ந்த ரேமண்ட் (டெயானா டைலர்) அவருடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்தப் பேச்சு வார்த்தையில் டாராஜியின் மொத்த வாழ்வும், கஷ்டங்களும் வெளியே வருகிறது.
இந்த உரையாடல்கள் தான் படத்தின் உயிர் நாடி. நாற்பது டாலர் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாடு, மனிதாபிமானம் இல்லாத வீட்டு ஓனர், கம்பெனி மேனேஜர், அனைவர் மேலும் நமக்குக் கடுப்பு வருகிறது. இந்தக் குற்றம் அவர்மேல் எப்படி விழுந்தது. ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக ஒரு நகரமே வெளியே காத்திருக்கிறது. ஏன் அப்படி. இறுதியில் என்ன ஆனது என்று மனதை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறது இந்தக் குழு.
ஏற்கனவே சொல்வது போல் இந்த இடத்தில் அழ வேண்டும் என்றெல்லாம் காட்சிகள் வைக்காமல் அந்தப் பாத்திரம் உடையும்போது, தனது நிலையைச் சொல்லிக் கலங்கும்பொழுது பார்ப்பவர்களும் அதை உணர்கிறார்கள். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று நினைக்கிறார்கள். பேங்க் கிளார்க் பாத்திரம் ஒன்று வருகிறது. மிகையாக நடிப்பது போலத் தோன்றினாலும் அவரது நடிப்பைப் பார்த்து நமக்குக் கோபமும் எரிச்சலும் வருகிறது. குறிப்பாக அந்த வங்கி மேலாளர் பாத்திரமும், காவல் அதிகாரி பாத்திரமும். அட்டகாசம். இது தான் நல்ல எழுத்தின் வெற்றி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் படமானாலும் விதவிதமான உறுத்தல் இல்லாத காமிரா கோணங்கள், கச்சிதமான எடிட்டிங், ஆழமான வசனங்கள் எனக் கட்டிப் போடுகிறது படம். இவ்வளவு செய்த இவர்கள் கடைசியில் வரும் எதிர்பாராத திருப்பத்தோடு படத்தை நிறைவு செய்யாமல் அதன் பிறகு கொஞ்சம் இழுத்து விட்டார்கள். ட்விஸ்ட் என்று நினைத்து அவர்கள் செய்த விஷயம் பார்ப்பவர்களை என்னடா என்று எண்ண வைத்ததுடன் சற்று குழப்பியும் விடுகிறது. அந்த ஐந்து நிமிடங்களை மட்டும் நீக்கி விட்டு இந்தப் படத்தைப் பார்த்தால் மிக நல்ல தவற விடக் கூடாத குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு படம் தான் ஸ்ட்ரா.