சின்னத்திரை தொடாத சப்ஜக்டே இல்லையென்று சொல்லுமளவுக்கு, இன்றைய சின்னத்திரை சானல்கள் தூள் எழுப்புகின்றன! முத்தமிழுக்கும் சலங்கை கட்டி, ஒரு நாளின் மிகுதியான நேரத்தில் சதுரங்கம் ஆடவிடும் பணியைச் சானல்கள் சந்தோஷமாகச் செய்து வருகின்றன. அதிலும் அதிகப்படியான நேரத்தைப் பிடிப்பவை நாடகங்களே…சாரி…மெகா சீரியல்களே! ஒரு சில, மெ………………கா………….. சீரியல்களாகவும் வலம் வருகின்றன.
இரவு ஒன்பது மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிங்கப் பெண்ணே!’ சீரியல் அவற்றில் ஒன்று என்றாலும், பலரின் ஆதரவைப் பெறும் வண்ணம் அதனை நகர்த்தி வருகிறார்கள். ஆனந்தி-அன்பின் ஆழ்ந்த காதலே சீரியலின் அச்சாணி என்று கூடச் சொல்லலாம். முக்கோணக் காதல் என்பது தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானதன்று.
அவ்வாறு முக்கோணக்காதலை முதன்மையாகக் கொண்ட படங்கள் நன்றாக ஓடவும் செய்திருக்கின்றன. சிட்டியில் இருக்கும் தையலாடைத் தொழிற்சாலைக்குக் கிராமத்துப் பெண்ணான ஆனந்தி வந்து பணியாற்றி, தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வரவும், அக்காவுக்குத் திருமணம் செய்து வைக்கவும் உழைக்கிறாள்.
நம்பர் ஒன் நாளிலிருந்து அவளுக்குப் பக்க பலமாக இருக்கிறான் அன்பு. அவள் பல போராட்டங்களைச் சந்தித்து முன்னுக்கு வருகையில், எதிர்பாராத விதமாக ஒரு ஃபங்க்ஷனில், வஞ்சகமாக அவள் கர்ப்பமாக்கப்படுகிறாள்.
தன்னை அந்த இழி நிலைக்குத் தள்ளியவனைக் கண்டு பிடித்து, ஊரார் முன், தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறாள். தன்னைக் காதலிக்கும் அன்புதான் காரணமென்று கூறி எளிதாகத் திருமணத்தை முடிக்க வழியிருந்தும், தன் காதலன் களங்கமற்றவன் என்ற அவளின் கர்ஜனை புதுமையானது; போற்றத்தக்கது! ஒரு சிங்கப் பெண்ணால் மட்டுந்தான் ஊராரும், உறவினரும் கூடியிருக்கும் திருமண மண்டபத்தில் வெளிப்படையாக அதனை ஒத்துக் கொள்ள இயலும்!
குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி, ‘அவளே அறியாமல் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள்?’ என்ற வினாவை எழுப்பி, விடையாக, அவன் அவளிடம் மேலும் அன்பையும், அரவணைப்பையும் காட்டி அவளை நிழலாகப் பின் தொடர்வது அருமை! காதல் மனம் சம்பந்தப்பட்டது என்ற உயர்ந்த குறிக்கோளை அவன் விளக்காமலே விளக்குகிறான்!மயக்கமுற்ற நேரத்தில் மாதைக் களங்கப்படுத்தியவன் அன்றோ குற்றவாளி!
சாதாரணமாக, வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ, காதலிப்பதையே முக்கியக் கருத்தாக்கிக் கதையை நகர்த்துவார்கள். இச்சீரியல்காரர்களோ கர்ப்பத்தை நடுவில் புகுத்தி, முடிச்சு போட்டிருக்கிறார்கள். துணிச்சலான முயற்சிதான்! அவிழ்ப்பதில்தான் திறமை வேண்டும். அது மீண்டும் பழசாகிப் போய் விடக் கூடாது!
ஏனெனில், தவறு செய்தவர்களை நெருங்க, நெருங்க,‘எங்கே தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் கையைப் பிடிப்பதே முறை!’ என்றெண்ணி, ஆனந்தி தன்னைத் தவிர்த்து விடுவாளோ என்ற தவிப்பு அன்புக்கு மேலோங்கி வருகிறது. ஏனென்றால் ஆனந்தி இல்லாத வாழ்வை அன்புவால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. அதுதானே காதல்; அதனால்தானே அது தெய்வீகம்!
அழிவில்லாக் காதலில் அழிகின்ற மலர்கள்தானே இன்று அதிகம்!கல்யாணத்தில் முடிந்த காதல்களைக்கூட ஆணவக் கொலைகள் இன்று அலைக் கழிக்கின்றனவே!
தன்னைக் காதலிக்கும் பெண், மற்றொரு ஆடவனைச் சகோதரனாகப் பார்த்தால்கூட சந்தேகிக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், கர்ப்பமாகவே இருந்தாலும், காதலி காதலியே! என்று அவள் கரம் பிடிக்கக் கை நீட்டி நிற்கும் அன்பின் அன்பை பாராட்டாமல் இருக்க முடியுமா?0
என்ன நான் சொல்வது?