

'முண்டாசுப்பட்டி' மாதிரி ஒரு பட்டிக்காட்டில், 'முந்தானை முடிச்சு' கே. பாக்யராஜ் மாதிரி ஒரு வாத்தியார், மக்கு ஜனங்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டிய சூழல் வந்தால் அவர் எப்படி சமாளிப்பார்? என்ற சுவாரஸ்யமான காமெடி கதைக்கருவில் தான் இந்த வெப் சீரிஸ் சொல்லப்பட்டிருக்கிறது.
மொத்தம் 7 எபிசோடுகள்; ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் முதல் 55 நிமிடங்கள் வரை ரன்-டைம் கொண்டவை. ஆக மொத்தம் அஞ்சே கால் மணி நேரம் இருந்தால், ஒரே சிட்டிங்கில் இந்தத் தொடரை நெட்ஃபிளிக்ஸில் முழுமையாக பார்த்துவிடலாம்.
தெலுங்கில் வெளிவந்துள்ள இந்த வெப் சீரிஸ், அமேசான் பிரைம் தளத்தில் வந்த புகழ்பெற்ற 'பஞ்சாயத்' தொடருக்கு இணையான ஒரு காமெடி வெப் சீரிஸாக நகர்கிறது.
கதைக்களம் (ஸ்பாய்லர் அலர்ட்!)
நாயகன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருக்கிறான்; அவன் நினைத்தது எதுவுமே நடப்பதில்லை. ஒரு தற்காலிக அரசு பள்ளியில் லேப் அசிஸ்டெண்ட்டாகப் பணிபுரியும் அவனுக்கு ஒரு காதலியும் உண்டு. அவனது பணி நிரந்தரமாக வேண்டும் எனில், ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.
அது எந்த மாதிரி கிராமம்னா இதற்கு முன் பாலியல் கல்வி கற்பிக்க வந்த ஆளை உயிரோடு கொளுத்திய முரட்டு முட்டாள் கூட்டம் இருக்கும் ஊர்.
நாயகன் அந்த ஊருக்கு கிளம்பும்போதே நாயகி தடுக்கிறாள். "இப்படி நம் இருவருக்கும் இடையே இடைவெளி வந்தால், நம் காதல் கைகூடாது" என்கிறாள்.
அதையெல்லாம் மீறி நாயகன் அந்த கிராமத்திற்குப் போகிறான். அங்கே அவன் சந்திக்கும் விசித்திரமான மனிதர்கள், அவனது வாழ்க்கையில் குறுக்கிடும் இரு நாயகிகள் மற்றும் அங்கு எழும் அத்தனை பிரச்சினைகளையும் அவன் எப்படி காமெடியாக சமாளித்தான் என்பதே இந்த வெப் சீரிஸின் மீதிக்கதை.
சுந்தீப் கிஷன்: நாயகனாக ஒற்றை மனிதராக தன் தோளில் மொத்த வெப் சீரிஸையும் தாங்கி நிற்கிறார். இவருக்குக் காமெடி மிக இயல்பாக வருகிறது.
முரளி சர்மா: நாயகனின் அப்பாவாக இவர் செய்யும் அலப்பறைகள் அருமை! நாயகன் சிறுவனாக இருக்கும்போது அப்பாவிடம் எப்படி எல்லாம் மாட்டுகிறான் என்ற போர்ஷன் கலக்கல் ரகம்.
மானசா சௌத்ரி: நாயகியாக கண்ணியமான தோற்றத்தில் வருகிறார்; ஆனால், இவருக்கு படத்தில் அதிக வாய்ப்பில்லை.
மிதிலா பால்கர்: கிராமத்தில் வரும் இன்னொரு நாயகியாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஆடிஷன் சீனில் இவரது நடிப்பு டாப் கிளாஸ்!
கெட்டப் ஸ்ரீனு: காமெடியனாக வந்து ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.
பாலியல் தொழிலாளியாக வரும் பெண், மர்மமான காதல் பிளாஷ்பேக் கதை கொண்ட பெண் ஆகிய இருவரும் அபார அழகாக காட்டப்பட்டுள்ளனர். ஆனால், மெயின் கதைக்கும் அவர்களுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை.
இயக்குநர் மல்லிக் ராம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஆர்ட் டைரக்ஷன் என அனைத்தும் கச்சிதமான 'ஓகே ரகமாக' அமைந்துள்ளன.
யாராவது நாயகனிடம் கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவர்களையே அந்தப் பதிலை சொல்ல வைக்கும் அவனது சாமார்த்தியம் அருமை.
கே. பாக்யராஜ் பாணியில் ஜனரஞ்சகமான, நாகரிகமான டபுள் மீனிங் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
'நேர்கொண்ட பார்வை' படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான "நோ மீன்ஸ் நோ" (No means No) என்பதன் முக்கியத்துவத்தை கிராமத்து பெண்களுக்கு நாயகன் கற்பிக்கிறார். இதனால், வீட்டில் அவரவர் கணவன்மார்கள் நெருங்கும்போது பெண்கள் 'நோ' சொல்ல, அதை எதிர்த்து ஆண்கள் பஞ்சாயத்தை கூட்டுவது காமெடி கலக்கல்!
கிராமத்தில் மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாததால், பனைமரத்திற்கு ஏணி போட்டு ஏறி, அங்கே இருந்து போன் பேச 50 ரூபாய் வசூல் நடக்கும் காட்சி அற்புதம்.
சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் நாயகி, ஆடிஷனில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்த, இயக்குநர் உட்பட மொத்த யூனிட்டும் பிரமிப்படையும் காட்சி செம மாஸ்!
உயரக்குறைவான ஊர் நாட்டாமை யாரிடம் பேசுவதாக இருந்தாலும் அடியாள் ஒரு சேர் போட அதன்மேல் ஏறிப்பேசுவது வெடிச்சிரிப்பு.
நாயகனின் அப்பா ஒரு மேடைப்பேச்சில் என்னென்னவோ பேச, அது 'காண்டம்' (Condom) பாக்கெட்டுக்கான பிரமோஷன் என்பது பின்னர் தெரிய வருகிறது. தான் பேசியதை நினைத்துப் பார்த்து, புது அர்த்தம் வருவதைக்கண்டு திகைப்பது கலக்கல் காமெடி டிராக்.
டிவியில் கிளாமரான டூயட் பாடல் ஓடிக்கொண்டிருக்க, நாயகனின் அப்பா டிவியை ஆஃப் பண்ண ரிமோட்டைத் தேட, மொத்த குடும்பமும் ரிமோட்டுக்காக ஓடுவது என்ன லாஜிக்? ரிமோட் இல்லாவிட்டால் டிவியை ஆப் பண்ணவே முடியாதா?
நாயகி ஐடியில் பணிபுரிகிறார், நாயகன் கிராமத்தில் பணிபுரிகிறார். இருவரும் எந்த நேரத்தில் போனில் பேசலாம் என்பதை முதலிலேயே பேசி முடிவு செய்துகொண்டால் பிரச்சினை ஓவர். இவர் பேசும்போது அவர் பிசி என்பதாகவும், அவர் பேச முயலும்போது நெட்வொர்க் கிடைக்கவில்லை என்பதாகவும் சமாளிப்பது ஏன்?
வெறும் போனில் பேச முடியாத ஒரே காரணத்திற்காக இருவருக்கும் இடையே பிரேக்க வருவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) மூலம் அவரவர் நேரம் கிடைக்கும்போது பரஸ்பரம் தகவல்களை அனுப்பிக் கொள்ளலாமே?
1."க்ரோசின் மாத்திரை எதுக்குக் கொண்டு வந்திருக்கே?" "நீங்கதானே கெரோசின் (ஆயில்) கேட்டீங்க?"
2."டேய் நிறுத்துங்கடா!
இவங்க எல்லாரும் உன் வாரிசுகளா?"
"ஆம்."
அப்போ நிறுத்த வேண்டியது அவங்க இல்லை, நீ தான்!
3.என்ன வேணும்?"
"லீவ் வேணும்."
4. காது வலிக்கு மருந்து போட்டு, காதே கேட்காம போச்சாம்.
5.மூடு (Mood) வந்த குதிரை, முட்டி முட்டி சுவத்துல ஓட்டை போட்டுச்சாம்!
6.வாழ்வதற்காக செய்யும் வேலையில் தப்புக் கண்டுபிடிச்சா எப்படி?
7.நோ லீவ். ப்ளீஸ் லீவ்!" (தயவு செஞ்சு போயிடு)
"ஓ, தேங்க்யூ சார், லீவ் தந்ததுக்கு!
8.ஆடிஷன் வரணுமா? ரீல்ஸ் ஓகே இல்லையா?
நடிக்க தெரியாட்டி கூடப் பரவாயில்லை, ரீல்ஸ் போட தெரிஞ்சா போதும்."
அடல்ட் கன்டென்ட் வார்னிங்: 18+ (காட்சி ரீதியாக ஏ இல்லை என்றாலும், வசனங்களில் 18+ உண்டு)
கே. பாக்யராஜ் பாணி திரைக்கதையை ரசிப்பவர்களுக்கும், காமெடி மெலோ டிராமாவை விரும்பி பார்ப்பவர்களுக்கும் இந்தத் தொடர் மிகவும் பிடிக்கும்.
ரேட்டிங்: 3 / 5