

சாதாரண சீரியல்களை, நமது சீரியல் இயக்குனர்கள் மெகா சீரியல்களாக மாற்றும் பலவித யுக்திகளில், இப்பொழுது விழாக்கால நிகழ்ச்சிகளையும் புகுத்தி, அவற்றைக் கொண்டே பல வாரங்களை நகர்த்திவிடும் ஒன்றையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்!! அந்த விதத்தில் தீபாவளி முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பல சீரியல்களில் (tamil serial) தீபாவளிக் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு காலத்தில் வெள்ளித் திரை படப்பிடிப்புகள் ஸ்டூடியோக்களின் எல்லைகளுக்குள் மட்டுமே நடைபெற்றன. அப்புறம் மெல்ல அவை வெளிக்கிளம்பி, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கேமிராக்களுக்குள் அடக்கி, தியேட்டர்களில் நம் கண்ணுக்கு விருந்தளித்தார்கள். இப்பொழுதோ காமிராவின் கண்கள் எல்லா இடங்களுக்கும் செல்வது, சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த வளர்ச்சி மாற்றங்களை நமது திரைத்துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தீபாவளி என்றால் ட்ரஸ் வாங்கத் துணிக் கடைகளுக்குப் படையெடுப்பதையும், பட்டாசு கடைகளுக்குச் செல்வதையும், இனிப்புகள் விற்கும் இடங்களுக்குச் சென்று அவற்றை வாங்குவதையும் காட்டி விட்டு, அப்புறம் அவற்றை வீட்டில் அணிவதையும், பட்டாசு கொளுத்துவதையும், சாப்பிடுவதையும் காட்டி, பல எபிசோடுகளை ஓட்டுகிறார்கள்.
இந்தத் தீபாவளியையொட்டிப் பல சீரியல்களிலும் பலவற்றைக் காட்டினாலும், நமது பார்வையில் உயர்ந்து நிற்பது மூன்று முடிச்சு சீரியலே! பண்பாடும், பாரம்பரியமும், கண்ணியமும், உறவினர்கள் என்று வந்த பிறகு உயர்வு-தாழ்வு பாராட்டக் கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் கணவன்-மனைவி அன்னியோன்யமும் அனைவருக்கும் விளங்கும் விதமாக அழகாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன.
சகோதரிகளுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் வரிசை கொடுப்பதென்பது காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கம். பூ, பழம், புடவை, நகையென்று வரிசைப் பொருட்களை அடுக்கி, ’எக்காலத்திலும் பிறந்த வீடு உனக்குப் பக்கபலமாக நிற்கும்’ என்று பறைசாற்றுவதே அதன் நோக்கம். கிராமத்தில் தென்னந்தோப்பைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் நந்தினியை, தோப்பு மற்றும் தொழிலகங்களின் சொந்தக்காரனான சூர்யா ஆச்சரியகரமாகக் கைப்பிடிக்க, பணத் திமிரும், படாடோபமும், ஆணவமும் கொண்ட அவனுடைய தாயால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் போக, இருவருக்கும் இடையில் சிக்கி நந்தினி சிரமப்படுகிறாள்.
‘நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!’
என்ற கதைதான் நந்தினிக்கு! முதலில் சூரியாவை வெறுத்து, கிராமத்திற்குத் திரும்ப நினைத்தாலும், அவனுடைய வெள்ளை மனதும், அவளுக்காக அவன் செய்யும் தியாகங்களும் அவள் மனத்தில், அவன் பால் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
தனது தோழி, காதல் திருமணம் செய்து கொண்டதால் அவளுக்குப் பிறந்த வீட்டு வரிசை வராததற்காக அவள் வருந்துவதையறிந்த நந்தினி, சூர்யாவுடன் வரிசைப் பொருட்களுடன் அவள் வீடு சென்று வரிசை கொடுப்பது சூப்பர் என்றால், சூர்யாவின் அக்கா மாதவிக்கு வரிசை கொடுக்கச் செய்வது சூப்பரோ சூப்பர்! எஜமானி சுந்தரவல்லி செய்யும் வில்லத் தனங்களை தன் பொறுமையாலும், நிதானத்தாலும் எளிதாகக் கடந்து விடுகிறாள் நாயகி நந்தினி! தன் நிலையறிந்த, யதார்த்தம் உணர்ந்தவளாக ஜொலிக்கிறாள்!
அப்பாவை வரிசை கொண்டு வரச் சொல்வதும்,கொடுத்தவுடன் திரும்புவதே நியாயம் என்றும் நந்தினி வாதிட, விருந்தினர்களை உரிய முறையில் உபசரித்து அனுப்புவதே முறையென்று வாதிடும் சூர்யா, அவர்கள் அனைவருக்கும் புத்தாடை வாங்கி வருவதும், அவர்களைத் தங்களுக்கு இணையாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடச் செய்வதும் அருமை! உறவுகளுக்குள் உயர்வு தாழ்வு பார்க்காத மனநிலை சூர்யாவைப்போல் எல்லோருக்கும் வந்து விட்டால், உலகம் எவ்வளவோ இனிப்பாகி விடுமல்லவா? குடும்ப விழாக்கள் திருவிழாக்களைப் போல் களை கட்டுமல்லவா!
தன் குடும்பத்தாருடன் நந்தினியும் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்பதற்காக, தானே ஒவ்வொருவருக்கும் கேட்டுப் பரிமாறும் சூர்யாவின் பண்பு,ஒவ்வொரு கணவரும், அதிலும் புது மாப்பிள்ளைகளனைவரும் அதிகமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய களிப்பான பாடம்.
தாய் சுந்தரவல்லிக்கும், மகன் சூர்யாவுக்குமிடையே நிலவும் இந்தப் பனிப் போருக்குக் காரணமாக லவ் மேட்டர் ஒன்று இருப்பதாகச் சூசகமாகக் காட்டி விட்டு, அதை மெயின்டெய்ன் செய்து கொண்டும் வருகிறார்கள். விடையை இறுதியில்தான் உடைப்பார்கள் போலும். தீபத் திருநாளை முன்னிட்டு, பாரம்பரியம் காக்கும் பண்பினை எடுத்துரைக்கும் இதுபோன்ற சீரியல்கள் இதயத்தை வருடி, இதமளிப்பதாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சியே!