
சினிமா என்பது ஒரு கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாகும். அதே நேரம் பலசினிமாக்களில் நல்ல கதையம்சங்களும், சமுதாய நலன், நோ்மறையான கருத்துகள், குடும்ப ஒற்றுமை தொடர்பான நல்ல கருத்துகளை மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே நமக்கு சொல்லிவிடுகின்றன.
சில திரைப் படங்கள் மட்டும் வியாபார ரீதியாகவும் பல்வேறு காரணங்களாலும் எதிா்மறை கருத்துகளோடு வருவதும் இயல்பான விஷயமே!
அதேபோல திரைப்படங்களில் பல பழம் பெரும் நடிகர்கள் நல்ல நடிப்பாலும், சொந்தக்குரலில் வசனங்கள் பேசியும் பாடல்கள் பாடுவதும் நல்ல விஷயமாக கருதி வரவேற்புகள் பெற்றன.
அது ஒருபுறமிருக்க கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரை மெகா தொடர்கள் மெல்ல மெல்ல நமது வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்து வெகுவாக ஆதிக்கம் செலுத்திவந்து எல்லை தாண்டி போய்விட்டதே நிஜம்.
சில தொடர்கள் மட்டும் நல்ல கருத்துகளை தொிவிக்கின்றன. தொண்ணூறு சதவிகித மெகா தொடர்கள் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை.
பெண்களை தாதாக்களாகவும் ஆண்களை டம்மி பீஸ் போலவும் சித்தரிப்பது தொடர்ந்து வருவது ஏற்புடையதல்ல.
அதே நேரம் நடிக்கவே தொியாத நடிகைகள் ஆதிக்கம் அதிகமாகி வருவதோடு பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு வேறு ஒருவர் குரல் கொடுக்கப்படுவதும் தொடர்கிறது.
வாயசைவுக்கும், வசன உச்சாிப்புக்கும் நிறைய வேறுபாடுகள் வருவதும் வேதனையே.
அதையெல்லாம் வேறு வழியில்லை என பாா்க்கநோிடுகிறது.
சில தொடர்களில் வீட்டிற்குள்ளேயே உறவு முறைகளில் வெறுப்பு, வஞ்சகமனப்பான்மை, குரோதம், ஏமாற்றுவேலை ஒருவரை ஒருவர் பழிவாங்குவது போலவும் கதைகள் அமைக்கப்பட்டுள்ளதும் பொிய அளவில் தாக்கத்துடன்கூடிய வேதனையாக உள்ளது.
ஒரு தொடரில் மூன்று மகன்களில் ஒரு மகன், மருமகளை மகனைப் பெற்ற தாயாா் வெறுப்பது போலவும், மகன் மற்றும் மருமகள் என்ன நல்ல செயல்களைச் செய்தாலும் அவர்களை இழிவு படுத்துவது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது எரிச்சலான விஷயமே!
அதே போல ஒரு தொடரில் தாய்மாமன் நல்லவர் போல நடித்து அந்த குடும்பத்திற்கு பல்வேறு தொல்லைகள் தருவது போலவும், ஒரு தொடரில் அண்ணன் தம்பிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுத்தி தம்பியை அண்ணன் கடத்தியது போல நாடகமாடி இவரே கடத்தி கட்டி வைத்து அடிப்பது போலவும் அதை உண்மை என தம்பி நம்புவதும், பின்னர் இத்தனைக்கும் காரணம் வில்லன்தான் எனத்தொிந்தும் அண்ணன் மேல் உள்ள விரோதத்தால் தம்பி தொடந்து வில்லனை நம்புவது போலவும் கதை நகர்வதும் எாிச்சல் வருவதே மிச்சம்.
மேலும் ஒரு தொடரில் சகோதரியே தம்பி மனைவிக்கும், தம்பிக்கும், வில்லனோடு சோ்ந்து கொண்டு ஒரே வீட்டிலிருந்து கொண்டே துரோகம் செய்வது போலவும், அதை அனைவரும் நம்புவது போலவும் கதை வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதையெல்லாம் பாா்க்கின்ற இல்லத்தரசிகள் அந்த தொடர்களில் சொல்லப்படும் நல்ல கருத்துகளை மனதில் உள்வாங்கிக்கொள்ளாமல் எதிா்மறை கருத்துக்களை கடைபிடிப்பது அதிகமாகி விட்டது.
ஆக நல்ல விஷயங்கள் மறந்து போவதும் தேவையில்லா கருத்துகள் திணிக்கப்படுவதாகவும் தொிகிறது.
பொதுவாக காலம் மாறிவிட்டது. எனவே நல்ல கருத்துகளுடன் கூடிய விஷயங்களை தொடர் மூலம் சொல்லுங்கள்.
வஞ்சக எண்ணம், கூட இருந்தே குழிபறிப்பது, குடும்ப உறவுகளை சிதைப்பது போலவும் கதைக்களம் அமைப்பதை கைவிடுங்கள்.
நல்ல கருத்துக்களுடன் தொடர்களை காட்சிப்படுத்துங்கள்.
அதுவே தலைமுறைகளுக்கு நல்லது என்பதை நினைவில் வைத்திருங்கள் அதுவே சிறப்பானது!