

உறவினர்களுக்குள் ஒத்துவரவில்லையென்றால், அவர்கள் ஒதுங்கி போக மாட்டார்கள். மாறாக, ஏதாவது ஒன்றை சொல்லி சண்டை இழுத்து கொண்டிருப்பார்கள். "அதில் ஒரு சுவாரசியம் உண்டு" என்பது அவர்களின் வாதம். கல்யாணமோ, காதுகுத்தோ, மங்கல நீராட்டோ, ஏன் மரணமே நிகழ்ந்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையை சொல்லி வம்புக்கு இழுத்து, அதிலொரு சுவாரசியத்தை காண்பது சிலரின் வழக்கம்.
எங்கள் ஊரில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் குழாம் ஒன்றிருந்தது.அவர்கள் பக்கத்து டவுனில் சினிமா மாறினால்,ஒன்றாகக் கிளம்பி விடுவார்கள்.அன்றைக்குத் தியேட்டரில் யாருடனாவது சண்டை போடுவார்கள்.சண்டை போடாமல் சினிமா பார்ப்பது அவர்களுக்குப் பிடிக்காதாம்.அதுபோலவே விசேஷ தினங்களில் உறவினருடன் உரசுவதில் ஒருசிலருக்கு விருப்பம்.குறை சொல்லிக் கொண்டே விழாவில் நடுநாயகமாக அமர்ந்து விடுவார்கள்.நம் மக்களுக்கும் மெகா சீரியல்களுக்கும் உள்ள தொடர்பும் அப்படிப்பட்டதுதான்.
லாஜிக்கே இல்லை!
அழ வைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள்!
அழுகைக்கு ஒரு பின்னணி இசை; ஆர்ப்பாட்டத்திற்கு மற்றொன்று!
ஜவ்வாக இழுக்கிறார்கள்!
‘சிந்துபாத்’துடன் போட்டி போடுகிறார்கள்!
விரும்பினால் இழுக்கிறார்கள்; இல்லையேல் சட்டென முடிக்கிறார்கள்!
நம்ப முடியாத கதையமைப்பு!
நடைமுறைக்கு ஒவ்வாத காட்சிகள்!
இப்படியெல்லாம் நெகடிவ் கமெண்ட் கொடுத்தபடியே, ஒவ்வொருவரும் அவற்றை விடாமல் பார்ப்பதாலேயே டி.ஆர்.பி.,(TRP) கூடி,’நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது எங்கள் சீரியல்கள்’ என்று அவர்கள் க்ளைம் செய்கிறார்கள்.முடிக்க மனமின்றி தொடரவும் செய்கிறார்கள்.நாமும் வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
‘சன் டிவி’யின் ‘கயல்’சீரியலில்,கயலும்,எழிலும் காதலித்துப் பல சிரமங்களைக் கடந்து,நீ…ண்…ட…போராட்டத்திற்குப் பிறகு ஒன்று சேர்வார்கள்.அங்கேயே சீரியல் முடிக்கப்படுமென்றுதான் பலரும் எதிர் பார்த்தார்கள்.ஆனாலும்,அதன் பிறகு கயலின் சிறுவயதுக் காதலன், தங்கை ஆனந்தி, தம்பி அன்பு, அண்ணன் மூர்த்தி கதை என்று இழுப்போ இழுப்பென்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.இனி மூர்த்தியின் பெண் கதைக்கு தாவி பல ஆயிரம் எபிசோடுகளைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கயலின் அம்மாவை அழுவதற்கும் மன்னிப்பு கேட்பதற்குமென்றே படைத்திருக்கிறார்கள்.
அப்பப்பா! எத்தனை பேரிடம் எத்தனை மன்னிப்புகள்!
‘எதிர் நீச்சல் தொடர்கிறது’ சீரியலில்,பெயரிலேயே தொடர்ச்சியைக் கொண்டு வந்ததாலோ என்னவோ,தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’என்று நம் முன்னோர்கள் அழகாகச் சொல்லி வைத்தார்கள்.நாயகி ஜனனியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிறார்கள்.உடல் தெம்பு அனைத்தையும் எதிர்ப்பிலேயே செலவழித்து விடும் விதமாகவும்,ஒன்று மாற்றி ஒன்றாகவும் அவரை அலைக்கழிப்பது,தற்கால டிரெண்டுக்கு ஒத்ததுதானா என்பதைக் கதையமைப்பாளர்கள் சற்றே சிந்திக்க வேண்டும்.
நமது ரீல் கதாநாயகர்கள் சிலர் ரியல் வாழ்வில் மனைவிகளிடம் படும் கஷ்டத்தை நாம் கண்கூடாகக் காணும் இந்த நேரத்தில்,அண்ணனுக்கு ஆமாம் சாமி போடும் தம்பிகள் இப்பொழுதுதான் கொஞ்சம் விழிக்க ஆரம்பிக்கிறார்களாம்.மேலும் குற்றஞ்செய்பவர்கள் கைகளே தொடர்ந்து ஓங்கியிருப்பதாகக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
‘Justice delayed is Justice denied’என்பது அனைவருக்குந்தானே!
ஈஸ்வரியின் ‘ஞாபக மறதி நோய்’,மறுபடியும் முதலில் இருந்தா? என்றே கேட்கத் தோன்றுகிறது.இயக்குனர்கள் விருப்பத்திற்கேற்ப எதையும் புகுத்திக் கொள்ளும் வசதி இருப்பதால்,இது சாத்தியமாகிறதோ?
‘மூன்று முடிச்சு’ சீரியல் வேகம் பிடித்து நன்றாகவே வந்து கொண்டிருந்தது. சூர்யா - நந்தினி ஜோடி இயல்பாகவே பொருந்திப்போக, சூர்யாவின் தங்கை கல்யாணமே கிளைமேக்ஸாகி முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், சிறைக்குள்ளிருந்து ரஞ்சித் எல்லா தகிடுதத்தங்களையும் அரங்கேற்றுகிறானாம். தமிழ்நாட்டுப் போலீஸில் சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம்; ஆனால், ஒட்டுமொத்த டிபார்ட்மெண்ட்டையே அனைத்து சீரியல்காரர்களும் கறுப்பாக்கிக் காட்டுவதில் நியாயமே இல்லையே! அதோடு மட்டுமில்லாமல், வில்லப் பெண் செல்லில் பேசியவுடனேயே ரவுடிகள் நாயகன் - நாயகியைச் சூழ்ந்து கொண்டு விடுகிறார்களாம். கண்கட்டி வித்தையாக அல்லவா இருக்கிறது!
போகிற போக்கைப் பார்த்தால்,மெகா சீரியல்களை இத்தனை எபிசோடுகளுக்குள் முடிக்க வேண்டுமென்ற வரைமுறை கொண்டுவர வேண்டும் போலும்.பத்திரிகைகளில் ஆயுள் சந்தா உறுப்பினர்களைச் சேர்ப்பதுபோல்,இயக்குனர்களும் தங்கள் ஆயுள் உள்ளவரை மெகா சீரியல்களைத் தொடர்வார்கள் போலும்!
எப்படியோ, சிலருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து, அவர்கள் சுபிட்சமாக வாழ்வதில் நமக்கும் மகிழ்ச்சிதானே! சீரியல்களைப் பார்க்கவும், கமெண்ட் எழுதவும் நாமும் பொழுதுபோக்க அவை உதவத்தானே செய்கின்றன.
-போகட்டும் அவை மெத்தனமாகவே!