கொரியன் சீரீஸ் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் விருந்து..!

டீச் யூ எ லெசன் கொரியன் தொடர்
டீச் யூ எ லெசன் கொரியன் தொடர்source:zoomtv
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on: 

பொதுவாக கொரியன் சீரீஸ் நாடகங்கள் என்றாலே காதல்,உறவுகள், குடும்பப் பாசம், அல்லது வரலாற்றுத் தொடர்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, தற்போதைய கல்விச் சூழலில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் நிஜங்களை அதிரடி ஆக்‌ஷனுடன் கலந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் புதிய கொரியன் தொடர் தான் 'டீச் யூ எ லெசன்' (Teach You a Lesson). பத்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸ், வெளியான குறுகிய நாட்களிலேயே உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று, தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

கதைக்களம் என்ன?

தென் கொரியாவின் பள்ளிக்கூடங்களில் நடக்கும் கடுமையான வன்முறைகள், சக மாணவர்களை துன்புறுத்துதல் மற்றும் பேராசை பிடித்த பணக்காரப் பெற்றோர்களால் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை சுற்றியே இதன் கதை நகர்கிறது. சட்டதிட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் ரவுடி மாணவர்களால், ஆசிரியர்கள் தங்களின் அதிகாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள்.

இந்த அவலநிலையை மாற்ற கொரிய அரசு 'கல்வி உரிமை பாதுகாப்புப் பிரிவு' என்ற ரகசிய அமைப்பை உருவாக்குகிறது. இந்த அமைப்பின் சிறப்பு அதிகாரிகளுக்கு, வன்முறையில் ஈடுபடும் மாணவர்களையும், தவறு செய்யும் ஆசிரியர்களையும் தண்டித்து, பள்ளிகளைச் சீரமைக்க அரசு முழு அதிகாரத்தை வழங்குகிறது. இந்த அதிரடிப் படை எவ்வாறு களமிறங்கி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு பாடம் புகட்டுகிறது என்பதே விறுவிறுப்பான அத்தியாயங்கள் சொல்லும் கதையாகும்.

முக்கிய கதாபாத்திரங்கள்:

இந்த தொடரின் பிரதான நாயகனாக, முன்னாள் சிறப்புப் படை கேப்டனான 'நா ஹ்வா-ஜின்' (Na Hwa-jin) என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கிம் மு-யெல் தத்ரூபமாக நடித்திருக்கிறார். கருப்பு நிற உடையில், கறாரான முகத்துடன், தவறு செய்யும் மாணவர்களைத் தனது அதிரடி ஆக்‌ஷன் மூலம் அவர் அடக்கி ஒடுக்கும் காட்சிகள் ரசிகர்களுக்குப் பெரும் சுவாரஸ்யத்தைத் தருகின்றன. சண்டைக்காட்சிகளில் அதிரடி ஆக்சன் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் வலியை உணர்ந்து அவர் காட்டும் நேசமும் அற்புதம்.

அவருடன் இணைந்து பெண் அதிகாரியாக வரும் ஜின் கி-ஜூ மற்றும் தொழில்நுட்ப நிபுணர் பாங் குன்-டே பாத்திரத்தில் பியோ ஜி-ஹூன் ஆகியோரின் நடிப்பு கதைக்கு மேலும் பலம் சேர்க்கிறது. கல்வி அமைச்சராக வரும் மூத்த நடிகர் லீ சுங்-மின், இந்த ரகசியப் படையின் பின்னணியாக இருந்து கதையை நேர்த்தியாக வழிநடத்துகிறார்.

வலுவான கதையமைப்பு & சுவாரஸ்யமான காட்சியமைப்பு:

'கெட் ஸ்கூல்டு' (Get Schooled) என்ற புகழ்பெற்ற இணையக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அசல் வெப்டூன் கதை சில உலகளாவிய விவாதங்களைச் சந்தித்திருந்தாலும், நெட்பிளிக்ஸ் தொடரில் அந்தப் பகுதிகள் மிக நேர்த்தியாக மாற்றப்பட்டு, சர்வதேச ரசிகர்களுக்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த படைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய கல்வி முறையின் பலவீனங்கள், சமூகத்தில் நிலவும் பண பலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை இந்தத் தொடர் மிகத் தைரியமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் நீதியும் பார்ப்பவர்களைக் இருக்கையின் நுனிக்குக் கொண்டு வருகின்றன. நெட்பிளிக்ஸ் உலகளாவிய தரவரிசையில் மிக வேகமாக முன்னேறி வரும் இந்தத் தொடர், விறுவிறுப்பான ஆக்‌ஷன் மற்றும் சமூகப் பொறுப்புள்ள கதைகளை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத ஒரு சிறந்த படைப்பாகும்.

இதையும் படியுங்கள்:
ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் ரியாலிட்டி ஷோவின் சுவாரசியங்கள்..!
டீச் யூ எ லெசன் கொரியன் தொடர்
logo
Kalki Online
kalkionline.com