‘ஆண்களிடம் சம்பளத்தையும் பெண்களிடம் வயதையும் கேட்கக் கூடாது!’ என்பார்கள்.
இப்பொழுதெல்லாம் சிலரின் சம்பளத்தைக் கேட்டாலே நமக்கு மயக்கமே வந்து விடுகிறது. பலர் லட்சங்களிலும், சிலர் கோடிகளிலும் அள்ளிக்கொண்டு போகிறார்கள்!
பெரும்பாலானோர் ரூ 50 க்கும் 100 க்குமே அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள்!
என்ன செய்வது? அவரவர் விதிப்பயன் என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். கடந்த ஓரிரண்டு தலைமுறைக்குள்ளாக நடந்தேறியுள்ள மாற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
எம் தாத்தாவின் பெயர் முருகையன் என்பதால், எம் தாயார் முருங்கைக்காயை மரத்துக்காய் என்றும், எம் தந்தையாரின் பெயர் ரெத்தினசாமி என்றிருந்ததால் ரத்தத்தைச் சிவப்பு என்றுமே அவர்கள் காலம் முழுவதும் அழைத்து வந்தார்கள். இப்பொழுதெல்லாம் நமது துணைவியார்கள் மிசர்ஸ் சோ அன்ட் சோ என்று நம் பெயர்களையே கூறுகிறார்கள். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் சந்தோஷம். எம் தாயார் காலத்தை எண்ணி, ஆண்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.
சரி, தலைப்புக்கு வருவோம். ஒரு நாளைக்கு 18 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது யார் என்றும், அவர் பணியாற்றும் துறை என்றும் அறிய ஆவலாக இருப்பீர்கள். நமது நாட்டில் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள், திரைத்துறையினரும், கிரிக்கெட் வீரர்களும், பெருங் கம்பனி சிஇஓக்களுந்தானே!
ஆனால் ஒரு எபிசோடுக்கு ரூ 18 லட்சம் சம்பளமாக வாங்குபவர், தொலைக்காட்சி நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி (Jannat Zubair Rahmani) என்பவர். 23 வயதேயான இவர் மும்பையைச் சேர்ந்தவர். பாலிவுட் படங்கள் சிலவற்றிலும் இவர் நடித்திருந்தாலும், தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதையே பிரதானமாகச் செய்து வருபவர்.
சீரியல்களில் கூட இவர் அதிகமாக, சிறப்புத் தோற்றப் பாத்திரங்களில்தான் தோன்றுவாராம். இவர் நடித்த பல தொடர்கள் சிறப்புப் பெற்றவையாக இருந்தாலும், இரண்டு தொடர்கள் ரசிகர்களிடையே மிகப் பிரசித்தமாம்!
து ஆஷிகி (Tu Ashiqui) மற்றும் ஆப் கே ஆ ஜன சே (Aap Ke Aa Jane Se என்பவையாம் அவை.
இந்திப்பட நடிகர் அமிதாப் பச்சன் பிசியாக இருந்த காலத்தில், அவருடைய ஒரு நாள் சராசரி வருமானம் ரூ 33 ஆயிரமென்று, அந்தக் காலத்தில் படித்ததாக ஞாபகம்!
ம்... இப்பொழுதெல்லாந்தான் விலைவாசி கூடி விட்டதே!
ஒரே படத்திற்கு பல கோடிகள் வாங்கும் நடிகர்களுடன் போட்டி போட்டு, நடிகைகளும் கோடிக் கணக்கில் வாங்குவது வரவேற்கத் தக்கதே.
ஆனாலும் ஜனநாயக நாட்டில், ஏற்றத்தாழ்வுகளுக்கு, இது போன்ற பெருவித்தியாச சம்பளங்கள் அடித்தளமாக அமைந்து விடுகின்றன. இதன் காரணமாகத்தானோ திருட்டும், கொள்ளையும் நடைபெறுகின்றனவோ என்று சந்தேகிக்கப்பட வேண்டியும் உள்ளது.
எது எப்படியோ? ஒரு 23 வயதுதொலைக்காட்சி நடிகை இந்தியாவில் அதிக சம்பளம் பெறுவது அனைவரின் புருவத்தை உயர்த்த வைத்தாலும், பெண்கள் எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு இணையாகவும், ஏன், ஒரு படி மேலாகவும் சென்று கொண்டிருப்பதில் பெரு மகிழ்வே!
நடிகை ஜன்னத்தைப் பாராட்டுவோம்! அவர் மேலும் வளர வாழ்த்துவோம்!