
திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளிவருகின்றன. அந்த வகையில் ஓடிடி மற்றும் இணையத்தின் மூலம் திரைப்படங்களை பார்ப்பதால் தியேட்டர்களில் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி தொலைக்காட்சி மற்றும் ஓடிடிகள் பெருகிவிட்டதால் சினிமா தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையரங்குகளில் ரீலிஸ் செய்யாமல் ஓடிடி தளங்களில் வெளியிடுகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர்-நடிகைகள் படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் ஏற்கனவே வெளியாகி உள்ளன. தற்போது மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படமும் தியேட்டருக்கு பதிலாக அடுத்த மாதம் நேரடியாக ஓ.டி.டி.தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் வெளியான 'டெஸ்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் ஆனதாகவும், 12 வருடங்களுக்கு முன்பே எழுதி முடித்த 'தி டெஸ்ட்' கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது என்றும் இயக்குனர் சசிகாந்த் கூறினார்.
இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா, மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் உடன் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்திருப்பது 'தி டெஸ்ட்' படத்தில் சிறப்பம்சமாகும். ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை இந்த படம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக இயக்குநர் சசிகாந்த் கூறினார். இந்தப் படத்தில் மூன்று கேரக்டருக்கு இக்கட்டான நேரம் வருது. அந்த டெஸ்டை அவங்க எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என்று இயக்குனர் சசிகாந்த் கூறினார்.
‘டெஸ்ட்’ படத்தின் புரோமோ வீடியோவை பார்த்து தமிழக வீரர் அஸ்வின் சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டிருந்தார். "சித்தார்த்தின் ‘டெஸ்ட்’ புரோமோவை பார்க்கும்போது கிரிக்கெட்டில் பல காலமாக இருந்தவர்போல் இருக்கிறார். இந்தப்படம் சித்தார்த்துக்கு சிறந்த படமாக இருக்கும். இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.