
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், 'அவனு மேட்டே ஷ்ரவாணி' என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் சீரியலில் தனது கவனத்தை திருப்பினார். அதன் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த சீரியலில் இவர் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இவர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தாலும் இவருக்கு பேரையும் புகழையும், அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்றுத்தந்தது 'யாரடி நீ மோகினி' என்ற சீரியல் தான்.
சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். டிஆர்பி-யில் நம்பர் ஒன் சீரியலாக வலம் வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கும் சைத்ராவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பெண்களை விட இளைஞர்களை இவரை அதிகளவில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக கயல் எவ்வாறு போராடுகிறார் என்பதை மையமாகக் கொண்ட இந்த சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி, கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபராக சைத்ரா ரெட்டி அந்த கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சீரியலில் கலக்கிய சைத்திராவுக்கு வெள்ளைத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'எனெண்டு ஹெசரிடலி' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
கன்னட சினிமாவை தொடர்ந்து சமீபத்தில் தமிழிலும் பெரிய பட்ஜெட்டில் வெளியான அஜித்தின் 'வலிமை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த லதா கதாபாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் சைத்ராவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சின்னத்திரையில் கலக்கி வந்த சைத்ரா ரெட்டி, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக கால் பதிக்க உள்ளார். ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ என்ற வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க சைத்ரா ரெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் கதாநாயகியாக கால் பதிக்க இருக்கும் சைத்ரா ரெட்டிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
திரை பிரபலங்கள் நடிப்பை தாண்டி பிற தொழில்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் சைத்ரா ரெட்டி, நடிப்பை தாண்டி தொழிலிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இவர் சொந்தமாக பண்ணையும் தொடங்கி, அதில் பசுமாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.